Showing posts with label ஆஞ்சநேயரின் சிறப்புகள். Show all posts
Showing posts with label ஆஞ்சநேயரின் சிறப்புகள். Show all posts

Friday, 1 February 2019

ஆஞ்சநேயரின் சிறப்புகள்

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து சேவை செய்தார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



 ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு.


 ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச் செய்யும் சனிபகவானையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. பகைவரை அச்சமுறச் செய்யும் வலிமையும், மேருமலையைக் குன்றச் செய்யும் உறுதியான மனோதிடமும் உடையவர் ஆஞ்சநேயர்.

🙏 இணையற்ற ராமபக்தரான அனுமன் பிரம்மச்சரியத்தை முழுமையாகப் பின்பற்றுபவர். ஆற்றல், சீலம், அறிவு, பக்தி, வெற்றி, வீரம், புலனடக்கம் என்று நிகரற்ற தன்மைகளைக் கொண்டவர். அனுமனிடம் விஷ்ணுவின் குணநலன்களும் உண்டு. அனுமன் தனது பக்தர்களுக்கு புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், போன்றவற்றைத் தருபவர் ஆவார்.

🙏 அசோகவனத்தில் தன்னை சந்தித்து ராமபிரான் அங்கு வரப்போகும் செய்தியை அறிவித்தமைக்காக சீதாதேவி அனுமானுக்கு வெற்றிலையால் ஆசீர்வாதம் செய்தாள். இதன் காரணமாக அவருக்கு வெற்றிலை உகந்ததாகிறது. வியாழக்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் சுந்தரகாண்டம் படித்து வெற்றிலையும், வெண்ணையும் சாத்தி வழிபட்டால் நலன் உண்டாகும்.

🙏 அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அனுமனுக்கு ஆஞ்சநேயர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆஞ்சநேயருக்கு "சிறிய திருவடி" என்ற சிறப்பு பெயரும் உண்டு. மேலும், ஆஞ்சநேயருக்கு "நைஷ்டிகப் பிரம்மச்சாரி" என்று ஒரு பெயரும் உண்டு.

🙏 தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வ செயல்புரம் என்ற ஊரில் ஆஞ்சநேயருக்கு 77 அடி உயரத்தில் பிரமாண்ட விசுவரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. தமிழ்நாட்டில் ஆஞ்சநேயருக்கு உள்ள உயரமான சிலை இதுதான். தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு எப்படி முக்கிய சந்திப்புகளில் உள்ளதோ, அது போல வட மாநிலங்களில் ஆஞ்சநேயர் கோவில்கள் தான் அதிகமாக உள்ளது.