Showing posts with label Sri Vishnu Temples. Show all posts
Showing posts with label Sri Vishnu Temples. Show all posts

Saturday, 1 August 2020

தான்தோன்றி மலையில் அருள்பாலித்து வருகிறார் அருள்மிகு கல்யாண வெங்கடரமண பெருமாள்.

#ஓம்நமோநாராயணா. 

கரூரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தான்தோன்றி மலையில் அருள்பாலித்து வருகிறார் அருள்மிகு கல்யாண வெங்கடரமண பெருமாள்.

திருப்பதிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்களும், வயதானவர்களும், தான்தோன்றி மலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு.


தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இது ஒரு குடைவரைக் கோயில் என்றும் கூறப்படுகிறது. திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல் சோமசன்மா என்ற பக்தன் மிகவும் மனம் வருந்திக் கிடந்தான். அச்சமயத்தில் அந்த பக்தனுக்காக திருப்பதி ஸ்ரீ்னிவாச பெருமாளே இங்கு வந்து தோன்றியதாக ஐதீகம். பெருமாள் தானாக தோன்றியதால் இக்கோயில் தான்தோன்றி மலை என்ற பெயர் பெற்றது.

இக்கோயிலில் அதிசயிக்கும் வகையில் பெருமாள் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறார். இங்கு தாயாருக்கு தனியாக சந்நிதி கிடையாது என்பதால் வச்சத்ஸ்தலம் என்று சொல்லக்கூடிய ஸ்வாமியின் திருமார்பில் தாயார் வீற்றிருக்கிறார். மேலும் அதே கருவறையில் பெருமாள் உற்சவமூர்த்தியாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சித்தருகிறார். பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே உபய தெய்வமாக ஆஞ்சிநேயர், கருடாழ்வார், பகவத்ராமானுஜர் மற்றும் ஆழ்வார்களின் தரிசனத்தைப் பெறலாம். 

புரட்டாசி பிரம்மோற்சவம் :
புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் இத்திருக்கோயிலில் கொடியேற்றப்பட்டு, புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழா துவங்குகிறது. இத்திருவிழாவின் 7 - வது நாள் ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறும். திருவோண நட்சத்திரத்தன்று திருத்தேர் விழா கொண்டாடப்பட்டு, மறுநாள் அமராவதி நதிக்கரையில் ஸ்வாமிக்கு தீர்த்தவாரி நடைபெறும். தொடர்ந்து  10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விடையாற்றி உற்சவம் என்று சொல்லக்கூடிய பூ பல்லக்கு, முத்துப் பல்லக்கு போன்ற விஷேசமான வாகனங்களில் 10 நாட்கள் ஸ்வாமி வலம் வருவார்.  திருவிழாவின் இறுதி நாளன்று ஸ்வாமிக்கு பலவிதமான புஷ்பங்களைக் கொண்டு புஷ்ப யாக அர்ச்சனை செய்யப்பட்டு திருவிழா நிறைவுபெறும். குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.





கால் பாதம் அடித்தல்:
கை, கால் பிரச்னைகள் தீர வேண்டி இக்கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் தங்களின் பிரச்னை தீர்ந்தவுடன், ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு, பிறகு ஒரு கல்லில் தாங்கள் குணம் பெற்ற கை அல்லது காலை அக்கல்லின் மீது வைத்து கை, காலின் வடிவத்தைக் குறித்துக்கொண்டு அதன் மீது அடிப்பர். இந்த வழக்கம் நெடுங்காலமாக இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது. மேலும் இக்கோயிலுக்கு வந்து திருமண வரம் வேண்டியவர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஸ்வாமிக்குத் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கின்றனர். இந்த கல்யாண உற்சவம் ஞாயிறு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைக ளில் மட்டும் நடைபெறுகிறது.

நடை திறக்கும் நேரம்:-

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

கல்யாண வெங்கடரமண பெருமாளின் அருள் பெற்று பயனடைவோம்.

தாம்பத்திய தோஷம் நீக்கும் மோகனூர் மோகனன்!

தாம்பத்திய தோஷம் நீக்கும் மோகனூர் மோகனன்!

வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி நதி பாய்ந்தோடும் கொங்கு மண்டலத்தில், பொங்கி வரும் காவிரியின் புதுப் புனலை தனது மோகனப் புன்னகையால் ரசித்தபடி, `ஶ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமணப் பெருமாள்' எனும் திருநாமத்துடன் எம்பெருமான் திருக்காட்சி தரும் தெய்விகத் தலம் மோகனூர்.
புராணக் காலத்தில் `வில்வாரண்ய க்ஷேத்திரம்' என்று பூஜிக்கப்பட்ட இத்தலத்தில், பெருமான் தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் `மோகன அவதாரக் கோலத்தில்' காட்சி தந்ததால், மோகனபுரி என்று போற்றப்பட்டு, தற்போது மோகனூர் என்று வழங்கப்படுகிறது இத்தலம்.

மண்மகளின் மடியில் மாலவன் தரிசனம்
இத்தலத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பருகும் நீர், பார்க்கும் பொருள், தின்னும் வெற்றிலை அனைத்திலும் கண்ணனையே காணும் தவநெறிச் சீலா் ஒருவா் வாழ்ந்து வந்தாா். ஆண்டுதோறும் திருப்பதி பிரம்மோத்ஸவத் தின்போது, ஆதிக்கும் ஆதியாய் விளங்கும் வேங்கடவனைக் கண்குளிர தரிசித்து வருவதைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்தாா் இந்த அடியார். இவருக்கு வயோதிகம் காரணமாக வாதநோய் ஏற்பட, திருமலைக்குச் சென்று வேங்கடவனை தரிசிக்க இயலாத நிலை ஏற்பட்டது.
பச்சைமாமலா் மேனியனைத் துதிக்க முடியாத வாழ்க்கை இனி தனக்கு வேண்டாம் என முடிவு செய்து, கரைபுரண்டோடும் காவிரியில் குதித்து தன் இன்னுயிரை நீக்கத் துணிந்தாா் அம்முதியவா். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மிகப்பெரிய நாகம் ஒன்று அவா் முன் தோன்றி சீற்றத்துடன் விரட்ட ஆரம்பித்தது!



நடக்க முடியாத இப்பெரியவரும் தள்ளாடித் தவழ்ந்த படி இயன்றவரை பின்வாங்கி நகர்ந்தார். அவரது இல்லம் வரை விரட்டி வந்த நாகம், அவா் வீட்டுக்குள் சென்றதும் வநத வழியே திரும்பிவிட்டது. முதியவரோ, களைப்பினால் ஏற்பட்ட அயா்வில் தன்னை மறந்து தூங்கி விட்டாா். அப்போது அவரது கனவில் தோன்றிய திருவேங்கடத்து இன்னமுதன், ``அன்பனே! உன்னால் திருமலை வர இயலாது என்பதால், நானே உம்மை நாடி இங்கு வந்து விட்டேன்” என திருவாய் மலா்ந்து அருளினாா்.



அத்துடன், அருகிலுள்ள புற்றுமண்ணில் மறைந்திருக்கும் தன் திருவுருவச்சிலையைப் பிரதிஷ்டை செய்து, திருக்கோயில் அமைத்து தரிசித்து வரவும் அருள்புரிந்தாா் எம்பெருமான்.






தேவாதி தேவா்களுக்கும் எளிதில் கிட்டாத எம்பெருமானின் தரிசனத்தைப் பெற்றுவிட்ட அந்தப் பெரியவர், விஷயத்தை ஊராரிடம் தெரிவித்தார். அனைவரும் பாம்புப் புற்றுக்குச் சென்று பாா்த்தனா். அங்கு பேரானந்தத்துடன் உதடுகளில் புன்னகை தவழ, மோகன அவதார ரூப லாவண்யத்துடன், ஈரேழு பதினான்கு உலகத்தினரையும் மயக்கும் பேரழகுடன் தரிசனம் அளித்தார் ஶ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமணப் பெருமாள்.

தாம்பத்திய தோஷம் நீக்கும் ஶ்ரீசம்மோஹன கிருஷ்ணன்
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ஒருவரது ஜாதகத்தில் 2, 5, 7, 8-ம் இடப் பொருத்தங்கள் மிகவும் முக்கியமானவை என்பதை ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால், சில ஜாதகா்களுக்கு இந்த இடங் களில் பாவ கிரகங்களின் சேர்க்கை அமைந்து, இல் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது.

இவா்கள் மோகனூா் திருத்தலம் சென்று இங்கு எழுந்தருளியுள்ள ஶ்ரீசம்மோஹன கிருஷ்ணனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், துயரங்கள் நீங்கி தம்பதியினரிடையே மன ஒற்றுமை ஏற்படும்.

ஶ்ரீதன்வந்த்ரி பகவான்
முற்பிறவி வினைகளின் காரணமாக நவகோள்கள் நமக்கு `ரோகம்' எனும் தோஷத்தை ஏற்படுத்துகின்றன. ஶ்ரீதன்வந்த்ரி பகவானைப் பூஜிப்பதால் இத்தகைய தோஷங்கள் விலகும்.

இத்தலத்தில் அருளும் ஶ்ரீதன்வந்த்ரி பகவான் சந்நிதியின் முகமண்டப மேற்கூரையில், நவக்கிரக மூர்த்திகள் அந்தந்த கிரகங்களுக்குரிய மூலிகை விருட்சங்களினால் வடிவமைக்கப் பட்டிருப்பது சிறப்பம்சம்.

ஈடு இணையற்ற தெய்விக சக்தி நிறைந்த இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை, புரட்டாசி மற்றும் மாசி மாதத்தில் அமாவாசையை அடுத்த மூன்று தினங்களிலும் ஆதவன் தன் ஒளிக் கதிர்களால் ஆராதிப்பது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் நிகழ்வாகும்.



`திருமலையில் ஒருநாள்’ வைபவம்!
நவராத்திரி விழாவின்போது வரும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் `திருமலையில் ஒரு நாள்' என்ற சிறப்பான வைபவம், இத்தலத்தில் நடைபெறுகிறது. அன்று, ஆதிபிரானாகிய வேங்கடவன் சேவை சாதிக்கும் திருமலையில் நடைபெறுவது போன்று, அதிகாலை சுப்ரபாத சேவையிலிருந்து இரவு ஏகாந்த சேவை வரை இத்தலத்திலும் சிறப்பாக நடைபெறுகின்றன.

அதேபோல், ஒவ்வொரு வருடமும் ஆனி உத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெறும்.

ஞானத்தைத்தரும் ஶ்ரீலட்சுமி ஹயக்ரீவர்
பிரம்மதேவரின் பத்தினியான ஶ்ரீசரஸ்வதி தேவிக்கு அனைத்து வேதங்களையும் அருளியவா் ஶ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சமான ஶ்ரீஹயக்ரீவர்.

மாணவச் செல்வங்களுக்குப் படிப்பில் கிரகிப்புத்திறன், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை அள்ளித்தரும் மூர்த்தியாக இந்தத் தலத்தில் ஶ்ரீலட்சுமி ஹயக்ரீவப் பெருமான் எழுந்தருளியுள்ளாா். ஒவ்வோர் ஆண்டும் வேதோத்தமர்களைக் கொண்டு, ஶ்ரீசரஸ்வதி தேவிக்கு ஶ்ரீஹயக்ரீவர் உபதேசித்த நிகழ்வைக் கொண்டாடும் விதம், `ஶ்ரீவித்யா மேதா மஹா யக்ஞம்' எனும் வைபவம் மோகனூர் தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

அற்புதமான இந்தத் தலம் நாமக்கல்லிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில், பரம பவித்ரமான காவிரி நதியின் கரையில் அமைந்துள்ளது இத்தலம் (ஆலயத் தொடர்புக்கு: 94429 57143).

பக்தர்களும் பெருமாள் அடியவர்களும் பச்சைமாமலர் மேனியனை, வேதம் போற்றும் ஆதிநாயகனை, ஆகமவிதிகள் தவறாமல் தஙகளின் இரு கண்களாகப் போற்றிக் கொண்டாடும் இந்தத் தலத்துக்கு, நாம் நம் குழந்தைச் செல்வங்களுடன் சென்று வழிபாடு செய்வது அவசியமாகும்.

அதன் மூலம் சிறந்த ஞானத்தையும், மோகனூர் மோகனனின் திருவருளையும், அழியா செல்வ வளத்தையும் பெற்றுச் சிறக்கலாம்.

தாம்பத்திய தோஷம் நீக்கும் சம்மோஹன கிருஷ்ணன் வழிபாடு!
நாராயணன் கண்ணனாகவும் ஶ்ரீமகாலட்சுமி ராதையா கவும் அவதரித்த போது, தம்பதி களுக்கு இடையேயான ஈடு இணையற்ற அன்னியோன்யத்தைக் குறிக்கும் விதமாக `ஶ்ரீசம்மோஹன கோபாலனாக' ஏக ஸ்வரூபத்தில் (இருவரும் ஒன்றே), ஆயர்பாடி ஆய்ச்சியருக்கு தரிசனம் தந்தார்கள்.

அதே கோலத்தில் அருளும் ஶ்ரீசம்மோஹன கோபாலனுக்கு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் தனிச் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. சம்மோஹன கிருஷ்ணனின் தியான ஸ்லோகத் துடன் கூடிய திருவுருவப்படம் இத்தலத்தில் கிடைக்கிறது.

ஶ்ரீசம்மோஹன கோபாலன் படத்தை வாங்கி வந்து, அனுதினமும் நெய் தீபம் ஏற்றிவைத்து மனமுருக வழிபட்டு வந்தால், பிரிந்த தம்பதியர் விரைவில் மனவேற்றுமை நீங்கி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை. மேலும், கோபாலனின் திருவருளால் சகல சந்தோஷங்களும் கிடைக்கும்; வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!

Tuesday, 14 July 2020

புரி ஜெகந்நாதர் ஆன்மிக செய்திகள்

💐💐💐💐💐💐💐💐💐💐💐

புரி ஜெகந்நாதர் ஆலயத்தில்  பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது. இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய துணி கிழிகளில் கட்டி , உலர்ந்த நிர்மால்ய பிரசாதமாக விற்பனைக்கு வைத்திருப்பார்கள் .பகவான் ஶ்ரீ ஜெகன்நாதருடைய பக்தர்கள் மணிக்கணக்கில் மிக நீண்ட வரிசையில் நின்று இந்த நிர்மால்ய மகா பிரசாதத்தை விரும்பி வாங்குவார்கள். ஏனென்றால் மகா பிரசாதத்தை ஏற்பதன் மூலம் அவர்கள் மிகப்பெரிய புண்ணியத்தை அடைவதாக நினைக்கின்றார்கள். 

ஒடிசா மக்கள் தங்கள் தினசரி பூஜைக்கு பிறகு கடுகளவேணும் நிர்மால்ய பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதற்காக அதை பாதுகாத்து வைக்கிறார்கள். ஒரிசா மக்களிடம் ஒரு முக்கியமான பழக்கம் என்னவென்றால் திருமணப் பேச்சு வார்த்தையின் போது மணப்பெண் மற்றும் மணமகன் நிர்மால்யத்தை தங்களது கைகளால் பற்றிக்கொண்டு , இந்தப் பேச்சு வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதாகவும் இதிலிருந்து மாற மாட்டோம் என்று சத்தியம் செய்கிறார்கள். மேலும் மரண சமயத்தில் நிர்மால்ய பிரசாதத்தையும், புனித துளசியும் தண்ணீருடன் சேர்த்து வாயில் ஊற்றப்படுகிறது. அதன் அடிப்படை நம்பிக்கை என்னவென்றால் மரணத்திற்குப் பிறகு இதை உட்கொண்டதால் ஆத்மா எமனுடைய தண்டனையிலிருந்து காப்பாற்றப்படும். இது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

மகா பிரசாதத்திற்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது திரேதாயுகத்தில் பத்து தலை அசுரனான இராவணனை வென்ற பிறகு பிரபு இராமச்சந்திர மூர்த்தியும் லக்ஷ்மணனும் மற்றவர்களும் அப்போதுதான் அயோத்திக்குத் திரும்பினார்கள். அயோத்தியா வாசிகளும் அவர்களுடைய வீரதீர செயல்களை கேட்டு மகிழ்ச்சியில் இருந்தனர்...லக்ஷ்மணனுடைய மனைவி ஊர்மிளா மிகவும் அமைதியாக அவர்கள் பேசுவது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தாள்.... எல்லோரும் லக்ஷ்மணன் இந்திரஜித்தை கொன்றதையும், இந்திரஜித்தின் பலத்தையும், அவன் பெற்றிருந்த ஒரு வரத்தை பற்றியம் பேசி கொண்டிருந்தார்கள். இந்திரஜித் பெற்ற வரம் என்னவென்றால், எவனொருவன் பதினான்கு வருடம் தொடர்ந்து சாப்பிட வில்லையோ.... எவன் ஒருவன் தொடர்ந்து பதினான்கு வருடங்கள் தூங்கவில்லையோ .அவன் மட்டுமே இந்திரஜித்தை கொல்ல முடியும் என்பதாகும்.

அரண்மனையில் அன்று மாலையே இந்த செய்திக்குப் பின் உள்ள உண்மையை பற்றி அறிய ஒரு கூட்டம் கூடியது பிரபு ராமர் லட்சுமணனை பார்த்து, லக்ஷ்மணா! நீ பதினான்கு வருடங்களாக உணவு உண்ணாவில்லை என்றால் பஞ்சவடியில் நாம் தங்கியிருந்த போது நான் தந்த உணவு பொட்டலங்களை என்ன செய்தாய் என்று வினவினார் ? லக்ஷ்மணன் பிரபுவே நான் அந்த உணவு பொட்டலங்களை பஞ்சவடியில் ஷமி மரத்தில் உள்ள ஒரு பெரிய துவாரத்தில் வைத்திருக்கிறேன் என்றார் . இதை மெய்ப்பிப்பதற்க்காக இராமர் ஹனுமானை நீ இப்போது பஞ்சவடிக்கு சென்று ஷமி மரப்பொந்தில் வைக்கப்பட்டிருக்கும் உணவு பொட்டலங்களை எடுத்து வா என்றார் . 

புத்திசாலியான ஹனுமானுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இருந்தும். யுத்த பூமியில் இந்திரஜித்தின் அம்பால்  மயக்கமடைந்த லஷ்மணனை  காக்க சஞ்ஜீவினி மலையை ஒற்றை கையால் கொண்டு வந்த நான், அந்த உணவு பொட்டலங்களை கொண்டு வர வேண்டுமா என்று சிறுது தயக்கத்துடன் எடுத்து வர புறப்பட்டார்.

பஞ்சவடியை அடைந்த ஹனுமான் அந்த உணவு பொட்டலங்களை பார்த்தார் ...ஆனால் அதை அவரால் எடுக்க முடியவில்லை. இறுதியில் மிகவும் பணிவாக தனது எஜமானிடம் தனது இயலாமையை பணிவுடன் தெரிவித்தார் ஹனுமான் .அவரால் அந்த உணவு பொட்டலங்களை  தனது அஹங்காரத்தினால் சுமக்க முடியாமல் போனது என்று பிரபு ராமன் புரிந்துகொண்டார். இறுதியில் லக்ஷ்மணன் கூறினார் மரியாதைக்குரிய எனது சகோதரனே நான் அந்த உணவு பொட்டலங்களை பஞ்சவடியில் இருந்து கொண்டு வருகிறேன் என்றார். 

லக்ஷ்மணன் தனது பலம் பொருந்திய அம்பினால் அந்த உணவு பொட்டலங்களை கொண்டுவந்தார் அவை எல்லாம் ஸ்ரீராமர் முன்பாக சமர்ப்பிக்கபட்டது. பிரபு ஸ்ரீராமச்சந்திரன் அதிசய பட்டவராக ஆஞ்சநேயரிடம் பதினான்கு வருடங்களாக சேமிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை சரி பார்க்க சொன்னார் . அப்படி சரிபார்த்தபோது அதில் ஏழு பொட்டலங்கள் மட்டும் குறைவதாக கூறினார்.

பிரபு ராமர் லக்ஷ்மணனிடம் இருந்து  ஏழு உணவுப் பொட்டலங்கள் குறைந்ததைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டார். லக்ஷ்மணன் மிகவும் பணிவாக அதன் காரணத்தை விளக்குகின்றேன் என்று கூறினார். நாம் இருவரும் காட்டில் இருக்கும்போது, தந்தையின் மரணச் செய்தியைக் கேட்ட போது தாங்கள் அன்று எனக்கு முதல் முறையாக உணவு அளிக்க வில்லை. இராவணன் பஞ்சவடியில் இருந்து சீதையை கடத்திக் கொண்டு சென்ற போது தாங்கள் எனக்கு இரண்டாவது முறையாக உணவு அளிக்க வில்லை. மூன்றாவது முறை லங்கேஸ்வரிக்கு முன்பு பலிகொடுக்க பாதாளம் சென்ற போது நாம் இருவரும் உணவு  உட்கொள்ளவில்லை . இந்திரஜித்தின் பானத்தால் மயங்கி விழுந்த நான் அன்று நான்காவது முறையாக உணவு  உட்கொள்ளவில்லை .  இந்திரஜித் தலை துண்டிக்கப்பட்ட போது நான் ஐந்தாவது முறையாக உணவு உட்கொள்ளவில்லை. நீங்கள் ராவணனை சிரச்சேதம் செய்த போது ஆறாவது முறையாக உணவு உட்கொள்ளவில்லை. புலஸ்தியர் ரிஷியின் மைந்தனான, இராவணன். பிராமணன்னாவான்  அந்த இராவணனை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்ததாக நீங்கள் எண்ணினீர்கள். அப்போது ராவணனின் மரணத்திற்கு  இலங்கையில் துக்கம் அனுஷ்டித்த போது அதில் கலந்து கொண்டு உணவு உண்ணாமலே நாம் லங்கையை விட்டு கிளம்பினோம். 

பிரபு இராமர் லக்ஷ்மணனுடைய மிக உயர்ந்த தியாகத்தினாலும் அர்ப்பணிப்பு உணர்வினாலும் தழுதழுத்து லக்ஷ்மணனுடைய தியாகம் ஈடு இணை இல்லாதது என்று கூறினார். பின்பு மிகவும் உன்னதமான  தியாகம் புரிந்த லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவை புகழ்ந்து கூறினார். லக்ஷ்மணன் இல்லாமல் பதினான்கு வருடங்கள் ஊர்மிளா கழிக்க நேர்ந்தது.

நான் எனது மனைவியுடன் பதினான்கு வருடங்கள் காட்டில் கழித்தேன் ஆனால் ஊர்மிளா மிகவும் உயர்ந்த தியாகம் செய்திருக்கின்றாள்..…. இந்த பதினான்கு வருடங்களும் லக்ஷ்மணனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள் எல்லா புகழும் ஊர்மிளாவிற்கே என்று கூறினார். 

அயோத்தியாவில் நமக்கு மூன்று சிம்மாசனங்கள் இருக்கிறது ஒன்று எனக்கு மற்றொன்று சீதைக்கு மற்றொன்று லக்ஷ்மணனுக்கு.  இன்றிலிருந்து ஊர்மிளாவிற்காக நான்காவது சிம்மாசனம் ஏற்பாடு ஆகட்டும் என்று ஆணையிட்டார். 

ஊர்மிளா கூப்பிய கரங்களுடன் ராஜா ராமரிடம் கூறினாள் .....எனக்கு சிம்மாசனத்தின் மீது எந்த பற்றுதலும்  இல்லை..... எனக்கு உங்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் மட்டும் அளிக்க வேண்டும் எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை  என்றாள்.

ராமர் மிகவும் மகிழ்ந்து அவளிடம் வேறு ஏதாவது வரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறினார்.... அப்போது மிகவும் பணிவுடன் இருகரம் கூப்பி தாங்கள் எனக்கு ஏதாவது வரம் தர நினைத்தால் இனி வரும் காலங்களில் எனக்காக கோவில்களோ அல்லது வழிபாடோ கூடாது. நான் எல்லோருக்கும் மனம் தரும் ஒரு ஊதுபத்தியாக இருக்க விரும்புகின்றேன். இனிவரும் காலங்களில் நான் தங்களது தாமரை பாதத்திற்கு கீழ் நிவேதனமாக  இருக்க விரும்புகின்றேன் எனக் கூறினாள் 

பகவான் ஶ்ரீ ராமசந்திரன் ஊர்மிளாவின் பக்தியை கண்டு பின்வருமாறு கூறினார் .... வரப்போகும்  கலியுகத்தில் நான் பூரி க்ஷேத்திரத்தில் அவதரிக்கும் போது லக்ஷ்மிதேவி எனது அருகில் இருக்க மாட்டாள் . லக்ஷ்மணன் எனது மூத்த சகோதரராக பலராமர் என்ற பெயருடன் என் அருகில் இருப்பார். எனக்கு நெய்வேதியம் செய்யப்படும் எந்த பிரசாதமும் விமலாதேவிக்கு  நைவேத்தியம் செய்யப்படும். பிறகுதான் அது மகா பிரசாதமாக மாறுகிறது .நீ மகா பிரசாதமாக இருப்பாய். உமது இனிய நறுமணத்தால் தெய்வீகத்தை பரப்புவாய்.... .நீ மகா பிரசாதமாகவும் நிர்மால்யமாகவும் வரும் காலங்களில் விளங்குவாய். பக்தர்கள் உன்னை வழிபட்டு புண்ணியம் அடைவார்கள். ராமர் மேலும் கூறினார் கலியுகத்தில் நீ அன்ன பிரம்மமாக வழிபட படுவாய் ஊர்மிளா மேலும் வேண்டினாள் ...நீங்கள் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் போது நான் வங்கக் கடலில் ஒரு நீர்க்குமிழியாக வந்து  தங்களது பொற்பாதங்களை  தொட வேண்டும்... இந்த வரங்களை ஊர்மிளாவிற்கு வழங்கிய ஶ்ரீராமர்  கூறினார் ஊர்மிளா உன்னுடைய தன்னலமற்ற அன்பும் தியாகமும் ஈடு இணையற்றது.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Wednesday, 1 July 2020

ராஜ வாழ்க்கை தரும் வரதராஜ பெருமாள் கோவில்

ராஜ வாழ்க்கை தரும் வரதராஜ பெருமாள் கோவில்









   

























எதுர்மலையில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் உருவாக்கி கொடுத்தார்.  
விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் ஆட்சி செய்தார். அவரது ராயர் வம்சத்து மக்கள் அருகே இருந்த இரண்டு கிராமங்களில் வசித்து வந்தனர். 
எதுர்மலை, பாலை மலை என்பது அந்த கிராமங்களின் பெயர்கள். இரண்டு கிராமங்களுக்கும் இடையே ஒரு பெரிய ஏரி.
நீர் வளமும் நில வளமும் மிக்க திருச்சினாப்பள்ளியின் மீது அந்த கிராம மக்களுக்கு ஒரு கண். 
எனவே அந்த கிராமங்களை விட்டுவிட்டு திருச்சினாப்பள்ளிக்கு அருகே குடிபெயர்ந்தால் என்ன? என்று தோன்றியது.
 
தங்கள் விருப்பத்தை மன்னரிடம் கூற மன்னரும் சம்மதம் கூறி விட்டார்.
தாங்கள் குடியேற திருச்சினாப்பள்ளிக்கு 20 கல் தொலைவில் ஓர் இடத்தை தேர்வு செய்தனர். காட்டுப் பகுதி அது. 
மன்னரின் ஆணையால் அந்தக் காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது. குடியிருப்புக்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டு ராயர் வம்சத்தினர் அங்கே குடியேறினர்.
அந்த இடத்திற்கு தாங்கள் ஏற்கனவே வசித்த இடத்தின் பெயரையே வைத்தனர். தென் பகுதிக்கு பாலை மலை என்றும், வடபகுதிக்கு எதுர்மலை என்றும் பெயர் சூட்டினர். 
ஏரிக்கு இருபுறமும் ஊர்கள் அமைந்திருந்தன. ஊர் மக்கள் வழிபட பாலைமலையில் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தையும், எதுர்மலையில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் மன்னர் உருவாக்கி கொடுத்தார்.
தாங்கள் வாழ்ந்து வந்த ஊரில் இருந்த பெருமாளையே புதிதாக குடியேறிய ஊரில் அமைத்து கொடுத்த மன்னருக்கு குடியேறிய மக்கள் நன்றி கூறினர்.
அவர்களால் பெயர் சூட்டப்பட்ட பாலைமலை என்ற கிராமத்தின் பெயர், நாளடைவில் மருவி ‘பாலையூர்’ என்றும், எதுர்மலை என்ற ஊர் ‘எதுமலை’ என்றும் மாறியது. 
இந்த எதுமலையில் உள்ளதுதான் வரதராஜ பெருமாள் ஆலயம். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கொடி மரம் உள்ளது. 
இதில் ஆஞ்சநேயரின் திருமேனி நம் கண்களை கவரும் வண்ணம் மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது. 
இந்த ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என பக்தர்கள் கூறுகின்றனர். தாமதமாகும் திரு மணம் நடந்தேறவும், குழந்தை பேறு உண்டாகவும், கல்வி ஞானம் பெறவும் இவரை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
அடுத்ததாக கருடாழ்வாரின் சன்னிதி உள்ளது. அதை அடுத்து மகா மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வலது புறம் கிருஷ்ணர், ஆஞ்சநேயர், விஷ்வக்சேனா, பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், 
நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூத்தாழ்வார், திருப்பாணாழ்வார், நாதமுனிகள், எம்பார், 
ராமானுஜர், காளிங்கன் நாகர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன.
அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் கீழ் திசை நோக்கி சேவை சாதிக்கிறார். 
அருகே உற்சவர் திருமேனிகள் உள்ளன. திருச்சுற்றில் தெற்கில் கமலவல்லி தாயார் சன்னிதி உள்ளது. அன்னை கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் முகத்தில் புன்னகையுடன் அருள்பாலிக்கிறாள்.
மணமாகாத கன்னியர் கமலவல்லி தாயாரை வேண்டிக் கொள்ள, அவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். 
மணமானதும் தம்பதியர் சன்னிதிக்கு வந்து புத்தாடை அணிவித்து ஆராதனை செய்து நன்றியை தெரிவிக்கின்றனர்.
மேற்கு திருச்சுற்றில் ஆதி அந்தபிரபுவின் திருமேனி உள்ளது. இத்திருமேனி பாதி விநாயகரையும் பாதி ஆஞ்சநேயரையும் கொண்டதாகும். 
அடுத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். வடக்கில் ஆலய தல விருட்சம் வில்வம் தழைத் தோங்கி வளர்ந்துள்ளது. 
இறைவனின் தேவக் கோட்ட விமான சுவர்களில் ஏராளமான கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. 
ஆஞ்சநேயர், கருடாழ்வார், பெருமாள், பிள்ளையார், நரசிம்மர், அன்னபட்சி, மயில், வேல்முருகன், மச்ச அவதாரம், யானை, வாமன அவதாரம் போன்ற சிற்பங்களின் நேர்த்தி நம்மை வியக்க வைக்கின்றன. 
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது.
சித்ரா பவுர்ணமி புரட்டாசி சனிக்கிழமைகளில் இறைவன் இறைவிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 
இந்து அற நிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த ஆலயம், தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
திருச்சியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மண்ணச்சநல்லூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, எதுமலை கிராமம்.