Showing posts with label தர்மத்தின் பாதையில். Show all posts
Showing posts with label தர்மத்தின் பாதையில். Show all posts

Sunday, 23 November 2014

தர்மத்தின் பாதையில்




ராமாயணம் !! ஹிந்து மதத்தின் சிறந்த இதிஹாசமாகப் போற்றப்படும் நூல் ஆகும்!! ராமாயணம் இத்தனைப் புகழ் பெற்ற நூலாக இருப்பதன் காரணத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம்!! ராமாயணப் பாத்திரங்களைப் பற்றி பின்னொரு நேரத்தில் விளக்கமாகக் கூற விரும்புகிற நேரத்தில் இந்தப் பதிவை போது நோக்கில் வைக்க விரும்புகிறேன்!!

ராமாயணத்தின் சிறப்பே அதில் வரும் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள்தாம்!! மரியாதா புருஷோத்தமனாக வர்ணிக்கப்படுகிற ராமன் சிறுவயதுக் குழந்தைகளுக்கு எல்லாம் ஒரு ஆதர்ச பாத்திரமாக விளங்குகிறவன்!! அரசனாகவே இருந்தாலும் கூட ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்னென்ன நன்னெறிகளைப் பின்பற்ற வேண்டும், எந்தச் சூழலிலும் ஒரு மனிதன் எப்படி நிதானமிழக்காமல் இருக்க வேண்டும், எத்தகைய துன்பத்தை அனுபவித்தாலும் எப்படி ஒரு மனிதன் நெறி பிறழாமல் இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் வாழும் உதாரணமாக விளங்குகிறவன் ராமன்!!

ராமனைப் பற்றி நினைக்கும் நேரத்தில் அவனுடன் சம்பந்தப்பட்ட இன்னும் பல கதாபாத்திரங்களும் நினைவுக்கு வருகின்றன!! சூழ்நிலைக் கைதியாகிப் போன பாவப்பட்ட அரசன் தசரதன்!! இன்னொரு புறம் மாயையாலும் சூழ்ச்சியாலும் ஆட்கொள்ளப்பட்டு மதிப்பிழந்து போன கைகேயி!! ஒரு மனிதன் சிறு வயதில் அறியாத செய்த ஒரு தவறு கூட பின்னாளில் அவனறியாமலே அவன் மீது அந்தத் தவறால் பாதிக்கப்பட்டவர் வன்மம் வைக்க நேரிடும் என்பதற்கு வாழும் உதாரணமாக விளங்கும் மந்தரை!!!

தாய்ப்பாசத்துகு உதாரணமான கோசலை! அதையும் விட தன வயிற்றில் பிறக்காவிட்டாலும் ராமனைத் தன மகனாகவே எண்ணி எண்ணிப் பாசம் வைத்த சுமித்திரை!! அந்தத் தாயின் சொல்லைத் தட்டாமல் அண்ணனுக்குத் துணையாகக் கானகம் சென்று பதினான்கு ஆண்டுகள் உறங்காமலே இருந்து அவனுயிர் காத்த இளவல் லட்சுமணன்!!! செய்யாத தவருக்காகப் பழி சுமந்து கண்ணீர் விட்டு மல்கி அழுது ராமன் காட்டில் இருந்த அந்தப் பதினான்கு ஆண்டுகளும் தானும் தவக்கோலத்துடன் ராமனின் பாதுகைகளை அரியணை மேல் வைத்து அரசாண்ட ஆயிரம் ராமனும் ஈடாகாத பரதன்!!! அவனுக்குத் துணையாகக் கர்மயோகியாக இருந்த சத்ருக்னன்!! இது சகோதரர்களின் ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழும் ஒரு அற்புதக் காவியம்!!!

கானகம் என்றாலும் அரண்மனை என்றாலும் கணவனை விட்டுப் பிரியேன் என்று பிடிவாதமாகக் கானகத்துக்கு அவனுடன் போய் துன்பப்பட்ட சீதை!! அண்ணனுக்குத் துணையாகப் போகும் தம்பியுடன் தானும் போய் தொல்லை தந்துவிடக் கூடாதெனப் பொங்கி வந்த கண்ணீரை மறைத்துக் கொண்டு பித்தியாய்ப் பதினான்கு ஆண்டுகள் கழித்த ஈடு இணையற்ற ஊர்மிளை!!!

குகனுடன் ஐவரானோம் என்று ராமனால் பாராட்டப் பெற்ற பணிவுக்கும் நட்புக்கும் இலக்கணம் வகுத்த குகன்!! இன்னமும் ராமனுக்கு உதவிடத் தன படைகளைத் தந்து தானும் உதவிய அறுவனாம் சுக்கிரீவன்!! அண்ணனாகவே இருந்தாலும் தர்மத்தின் பக்கம் இல்லையென்றால் அவனிடம் இருக்கமாட்டேன் என்று அடைக்கலம் கேட்ட விபீஷணன்!! சிவபக்திக்கும் மாபெரும் வீரத்துக்கும் இலக்கணமாக இருந்தாலும் பெண்ணாசை அரசனையும் வீழ்த்தி விடும் என்று நமக்கெல்லாம் பாடம் சொல்லி நிற்கும் ராவணன்!!! தர்மமோ அதர்மமோ செஞ்சோற்றுக் கடனைக் கழிக்காமல் இந்த உடலிருந்து எந்தப் புண்ணியமுமில்லை என்று கடைசி வரை ராவணனுடன் நின்று அவனுக்காய் உயிர்நீத்த கும்பகர்ணன்!!!!

இத்தனையும் தாண்டி பக்திக்கும், வினயத்துக்கும், வீரத்துக்கும் இலக்கணமாக நின்று ராமாயணத்தின் மையப் பாத்திரமாக ராமனின் இதயத்திலேயே உறையும் ஹனுமான்!!!
இப்படி எத்தனை எத்தனைப் பாத்திரங்கள் நமக்கு வாழ்வியல் நீதிகளை உணர்த்த வால்மீகியால் வடிக்கப்பட்டிருகிறது என்று பாருங்கள்!! உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ராமாயணக் கதைகளை சொல்லுங்கள்!! அவர்களுக்கு அந்தக் கதைகளைப் படிப்பதில் ஈடுபாடு உண்டாக்குங்கள்!!