Showing posts with label நவராத்திரி-ஆரம்பம்.. Show all posts
Showing posts with label நவராத்திரி-ஆரம்பம்.. Show all posts

Tuesday, 13 October 2015

நவராத்திரி-ஆரம்பம்.

நவராத்திரி-

ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். கண் இருந்தால்தான் பார்க்க முடியும், குருடனால் பார்க்க முடியாது. காதுதான் கேட்கும், செவிடனால் கேட்க முடியாது. 

இப்படி ஒவ்வொரு பணி செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். இந்த சக்திகளுக்கெல்லாம் சக்தி அளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. அது மின்சாரம் போல. காண முடியாது, உணரத்தான் முடியும். 

ஆனால் அதை பூரணமாக உணர விரும்பி உருவமாக அமைத்து வழிபடும் போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அதை வைத்துத்தான் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளாக வழிபடுகிறோம்.

மனிதன் காலை எழுந்ததும் முதலில் தன் கரத்தை உற்றுப் பார்க்கவேண்டும். கையின் மேல்புறத்தில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கீழே துர்க்கையும் கண்டு வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். 

மனித வாழ்வின் ஆதாரம் செல்வம். அதற்கு அதிபதியான மகாலட்சுமி முதலில், அந்த செல்வத்தை அறிந்து, உணர்ந்து, நல்வழியில் பயன் படுத்த அறிவு அவசியம். அந்தக் கல்வியின் நாயகியான சரஸ்வதி அடுத்து, இத்தனை இருந்தும் இதனைக் கட்டிக் காக்கும் பராக்ரமம், வீரம் வேண்டுமல்லவா? அடுத்ததாக துர்க்கை இருக்கிறாள் என்றும் இந்த வாக்கியத்தை விளக்கம் சொல்வார்கள். அப்படி, காலை எழுந்தவுடன் இந்த மூன்று சக்திகளையும் பிரார்த்தித்துக் கொண்டோமானால் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களும் மிகச் சுலபமாக நமக்குக் கிட்டுவிடும்.

இதைத்தான் அக்காலத்துப் பெரியோர்கள் தினம் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இப்பழக்கம் மிகவும் குறைந்து பூஜை செய்வதோடு சரியென்று மாறி தற்போது அதுவும் அருகி வருகிறது. இப்போது ஏதூவது விசேஷங்களில் மட்டும் பூஜை செய்தால் போதும் என்று பலரும் கருதுகிறார்கள். அதையாவது ஒழுங்காகச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் நவராத்திரி, சிவராத்திரி எல்லாம் இருக்கிறது.

பார்வதி தேவியே இரவின் ஸ்வரூபமாகவும், பரமசிவனே பகலின் ஸ்வரூபமாகவும் இருப்பதாக ஒரு புராணம் கூறுகிறது. 

பொதுவாக இரவிலே பூஜை செய்வது கூடாது. ஆனால் நவராத்திரியிலே மாத்திரம் இரவில் பூஜை செய்யலாம். சிவராத்திரியில் சிவனுக்கு பூஜை செய்யலாம்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.
வடநாட்டிலும் இந்த நவராத்திரி பூஜை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அங்கு விஜயதசமியன்று இந்த பூஜா விக்ரகங்களை பெரிய ஊர்வலமாக எடுத்துச் சென்று சமுத்திரத்தில் கலக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. துர்கா பூஜை என்று கல்கத்தா பகுதிகளில் இன்னும் அது மிகப் பிரசித்தம்.
இதே போன்று வஸந்த பஞ்சமியன்று அஸ்ஸாம், பெங்கால் பகுதிகளில் சரஸ்வதி பொம்மைகளைப் பெரிதாக ஊர்வலமாகக் கொண்டு சென்று சமுத்திரத்தில் கரைப்பார்கள்.
இப்படி துர்கா, லட்சுமி, சரஸ்வதி இந்த முக்கியமான மூன்று சக்திகளுக்கு நாடு முழுவதும் விழா கொண்டாடப் படுகிறது.
துக்கத்தைப் போக்குபவள் துர்க்கை.
செல்வத்தைப் பொழிபவள் லட்சுமி.
ஞானத்தை நல்குபவள் சரஸ்வதி.
இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலம் இந்த நவராத்திரி.
சின்னச் சின்ன அற்ப நலன்களை எதிர்பார்த்து வழிபடுவதற்கல்ல இந்த பூஜை. இனி பிறவாத மிக உயர்ந்த நிலையை அருள வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கம்.
ஞானத்தோடு, ஆத்ம சுத்தியோடு இந்த பூஜை நிறைவுருவதைக் குறிக்கும் படியாக ஞானவாஹினியான சரஸ்வதி பூஜையோடு இவ்விழா நிறைவுறுகிறது.
இந்த வகையிலே, ஒவ்வொருவரும் நவராத்திரி காலத்திலே நல்லெண்ணம், நல்ல சிந்தனையுடன் அம்பாளை பூஜை செய்து, தியானித்து வழிபட்டு வாழ்வில் எல்லா சுகங்களையும் பெற வேண்டுமாய் வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்!