Showing posts with label இந்த பழமொழிக்கு இதுதான் அர்த்தமா?. Show all posts
Showing posts with label இந்த பழமொழிக்கு இதுதான் அர்த்தமா?. Show all posts

Sunday, 12 November 2017

இந்த பழமொழிக்கு இதுதான் அர்த்தமா?

இந்த பழமொழிக்கு இதுதான் அர்த்தமா?
எறும்பு ஊர கல்லும் தேயும்!
விளக்கம் :


முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்போ நுண்ணியது. கற்களின் வலிமைக்கு முன் எறும்பின் பலம் குறைவானதுதான். ஆனால் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து, தொடர்ந்து பயணிப்பதால் வலிமையான கல்லிலும் தேய்மானம் உண்டாகும். அதுபோலவே தொடர்ந்து முயற்சித்தால் மிகக் கடினமான செயலாக இருந்தாலும் எளிமையாக கூடி வரும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி!
விளக்கம் :


ஆல் என்பது ஆலமரம். வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் துலக்க பல்வளம் சிறக்கும். இப்போது இரண்டாவது அடியான நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்பதில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன. நாலு என்பது நல்லது கெட்டது நாலும் என்றும் இரண்டு என்பது உண்மையான விஷயங்களை பேசுதல் நன்மையான விஷயங்களை பேசுதல் என்பதைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து. மற்றொரு கருத்து நாலு என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கின்றது.

குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா?
விளக்கம் :
எங்கிருந்தாலும் உயர்ந்த விஷயங்கள் உயர்ந்த விஷயங்களாகவே இருக்கும். இடத்தைப் பொருத்து அதன் தன்மையோ, தரமோ மாறாது என்பதற்காக சொல்லப்பட்ட விஷயம்தான் இது. ஆனால் இங்கு சரியாக சொல்லப் போனால் இந்தப் பழமொழியின் வடிவம் குப்பையில் கிடந்தாலும் குன்றி மணி நிறம் போகுமா என்று வரவேண்டும். உச்சரிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பழமொழியின் அந்த குறிப்பிட்ட வார்த்தை வடிவம் மாறி விட்டது. இருப்பினும் குண்டுவோ குன்றியோ இங்கு பழமொழி தரும் விளக்கம் மாறிப்போக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, 11 November 2017

இந்த பழமொழிக்கு இதுதான் அர்த்தமா?

இந்த பழமொழிக்கு இதுதான் அர்த்தமா?

ஆறிலும் சாவு நூறிலும் சாவு ! 

நாம் அறிந்த விளக்கம் :

மரணம் வருவதற்கு எந்த வயதும் ஒரு பொருட்டல்ல. ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.

விளக்கம் :


இந்த பழமொழிக்கான சம்பவம் மகாபாரதத்திலிருந்து உதாரணம் காட்டப்படுகிறது. 

கர்ணணை குந்தி தேவி (போர் நிகழும்போது) தம் தார்மீக வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள். 
அதற்கு கர்ணன் தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள் ஆறு பேருடன் இருந்தாலும் சரி அல்லது கௌரவ சகோதரர்கள் நூறு பேர்களுடன் இருந்தாலும் சரி மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து செத்துப்போகிறேன் என்கிறான் கர்ணன். இதுவே இதன் விளக்கம் ஆகும்.

வரவர மாமியார் கழுதை போல் ஆனாள் !

நாம் அறிந்த விளக்கம் :

மாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை. மருமகளை எப்போதாவது அடி கழுதையே என வர்ணிக்கப்படுவதுண்டு. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.

விளக்கம் :

பழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும். கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறி அவ்வப்போது துன்புறுத்துவது போல் மாமியார்கள் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருந்து பின் வம்பாய் வளர்ந்து கடைசியில் வேம்பாய் கசப்பது என்பது போல் வந்ததாலேயே இந்த பழமொழி தோன்றியது.



Posts U may Like

பகவான் கிருஷ்ணன் ஏன் பஞ்ச பாண்டவர்களை காப்பாற்றவில்லை?