Thursday, 4 February 2016

மகாமகம்

மகாமகம்

தேதி : 22.02.2016
 நேரம்: பிற்பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை

மகாமகம் உருவாகுதல் இந்திய திருநாட்டில் உள்ள மாநிலங்களில்
திருக்கோயில்களுக்கு பிறப்பிடமாக  பெரிதும் விளங்குவது தமிழகம் ஆகும்.

இத்தமிழக மக்களை வாழ வைக்கும் நதிகளில் ஒன்றானதும் தஞ்சைத் தரணியை வளம்கொழிக்கச் செய்வதுமான காவிரி தாயும், அரசலாறும் மாலையிட்டது போல் சூழப்பெற்றது தான் குடந்தை மாநகரம்.

இந்நகரில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகப்பெருவிழா வருகிற 22.02.2016ம் தேதி அன்று சூரியன்
 கும்பராசியிலும் குரு சிம்ம ராசியிலும்
 வரும் போது பெளர்ணமியில் மக நட்சத்திரம் அன்று இடப லக்னத்தில் சேரும் புனித நாளில் நடைபெற உள்ளது

அன்றைய தினம் பதினான்கு உலகங்களிலும் உள்ள தேவர்கள்
யாவரும் புனித நீராட வருகிறார்கள் என்பது வரலாறு.

இறைவனுடைய உபதேசங்களே வேத சாஸ்திரங்கள்.

அவைகளில் மனிதர்களின் பாவங்களை போக்கிக் கொள்ள பல வழிகள் கூறப்பட்டுள்ளன.

அவ்வழிகளில் தீர்த்த ஸ்நானம் மிகச் சிறந்த ஒன்றாகும். அதிலும் மகாமகத்தினத்தன்று மகாமகக் குளத்தில் புனித நீராடுதலுக்கு ஈடானது
 ஒன்றுமில்லை.

இப்புனித மகாமகம் நடைபெறுவதற்கான புராண வரலாறு ஒன்று உண்டு.

ஒரு சமயம் கங்கை முதலான ஒன்பது  புண்ணிய நதிகள் ஒன்று சேர்ந்து கயிலாய  மலை சென்று சிவபெருமானை வணங்கி,  எங்களிடத்தில் மகாபாவிகளும், மிகப்பெரிய பாதகங்களைச் செய்தவர்களும், நீராடி எல்லா பாவங்களையும் எங்களிடம் விட்டு விட்டு நற்கதி அடைந்து  வருகிறார்கள்.

எங்களிடம் விட்ட பாவங்களை  நாங்கள் எங்கு சென்று போக்கிக் கொள்வது என்று கேட்டார்கள்.

அப்போது இறைவன் தீர்த்த தேவதைகளிடம் கீழ்க் கண்டவாறு கூறினார்.

திருக்குடந்தையில் மகாமகத்தன்று மகாமக் குளத்தில் நீராடுங்கள்.

உங்கள் பாவங்கள் அனைத்தும் உங்களைவிட்டு விலகுவதோடு, அவர்களிடமிருந்தும் பாவங்ளை விலகிவிடும் என்றார்.

உடனே ஒன்பது தீர்த்தங்களும் கன்னிகை வடிவெடுத்து திருக்குடந்தை வந்து மகாமகக்குளத்தில் புனித நீராடி, வடகரையில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் வந்தமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த மகாமக தீர்த்தத்தை ஒரு தடவை வணங்கினால் எல்லா தேவர்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

இந்த மகாமகக் குளத்தை ஒரு முறை சுற்றி வந்தால், இந்த பூமியை நூறு முறை சுற்றிய புண்ணியம் கிடைக்கும்.

இந்த மகாமகக் குளத்தில் ஒரு தடவை நீராடினால் கங்கையில் நூறு ஆண்டுகள் வாழ்ந்து மூன்று காலமும் நீராடிய பலன் கிடைக்கும்.

இந்த புண்ணிய நாளில் மகாமகக் குளத்தில் வடபுறத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு தனது கோத்திரம். மனைவியின் கோத்திரம், மாதா மகன் கோத்திரம், ஆகிய ஏழு கோத்திரங்களையும் சேர்ந்தவர்கள் (ஏழு தலைமுறைகளுக்கு)  நற்கதிஅடைவர்.

வடபுறத்தில் உள்ள கிணற்றில் மகாமகத்தன்று காசியிலிருந்து  கங்கை வருகிறது.

அங்கு பல குமிழிகள்  இடப லக்னத்தில் ஏற்படுவதைக் காணலாம்.

இந்தக் குளத்தில் 16 கிணறுகள் உள்ளன 20 தீர்த்தங்கள் உள்ளன.

இந்திய திருநாட்டில் கும்பமேளாக்கள் புனித நதிகளில் மட்டுமே நடந்து வருகிறது.

கும்பகோணத்தில் நடைபெறும்  புனித நீராடல் விழா மகாமகத் திருக்குளம்
 மற்றும் காவிரி நதிக்கரையில்  நடைபெறுவதால் இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாக்களில் இது மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது மகாமகக் குளத்தில் நீராடுமுன் காவிரியில் சங்கல்பம் செய்து நீராட வேண்டும்.

மகாமகத்தன்று அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர், அருள்மிகு காசி  விசுவநாதர். அருள்மிகு அபிமுகேஸ்வரர். அருள்மிகு கெளதமேஸ்வரர், அருள்மிகு
 ஏகாம்பரேஸ்வரர், அருள்மிகு நாகேஸ்வரர், அருள்மிகு சோமேஸ்வரர், அருள்மிகு ஆதிகம்பட்டவிசுவநாதர், அருள்மிகு கோடீஸ்வரர், அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அருள்மிகு பாணபுரீஸ்வரர், அருள்மிகு
 அமிர்தகலசநாதர் ஆகிய பன்னிரண்டு சைவ தலங்களுக்கும், அருள்மிக சார்ங்கபாணி, அருள்மிகு இராமசாமி, அருள்மிகு ஹனுமார், அருள்மிகு
 சாரநாராயணப்பெருமாள், அருள்மிகு  ஆதிவராகபெருமாள் திருக்கோயில்,
 அருள்மிகு இராஜகோபால சுவாமி  திருக்கோயில் அருள்மிகு சக்கரபாணி
 பெருமாள் ஆகிய ஏழு வைணவத்  தலங்களுக்கும் சென்று வணங்குவது அதிகபலனைத் தரும்.

மேலே குறிப்பிட்ட பன்னிரண்டு சைவத் தலங்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி மகாமகக்குளம் சென்று தீர்த்தம் ஆடும்.

அதே போல் ஐந்து தலங்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு காவிரி சென்று தீர்த்தம் ஆடும்.

எனவே இந்த தீர்த்தவாரி நடைபெறும் புனித நாளான 22.02.2016 அன்று திருக்குடந்தை வாருங்கள்;

புனித  நீராடுங்கள்; பிறவிப் பெறும் பயன்  பெறுங்கள்.