Tuesday 26 July 2016

நமச்சிவாய வாழ்க




நமச்சிவாய வாழ்க
"கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, உன் ஆசைகளை அடக்கி வாழச்சொல்வது புறச்சமயம்.
நீ அடைபட்டு கிடக்கும் கட்டிலிருந்து உன்னை விடுவிப்பதே சைவ சமயம்."
நீ விரும்புவதையெல்லாம் இழந்தால் தான் இறைவனை அடையலாம் என்று சொல்வது சமணம் பொளத்தம் போன்ற புறச்சமயம். இறைவனை அடைய எதையும் நீ இழக்க வேண்டியதில்லை. ஈசன் மேல் அன்பு கொண்டு இருத்தலே போதுமானது என்று போதிப்பது சைவ சமயம்.
இறைவனடி சேர வேண்டுமா!!!!!!!!
குடும்பத்தை மறந்து விடு. பிரம்மச்சரியம் கடைபிடி. நல்ல உடைகள் உடுத்தாதே. கோவணம் மட்டும் உடுத்து. அறுசுவை உணவு உண்ணாதே. பிச்சையெடுத்து சாப்பிடு. இது தான் புறச்சமய கோட்பாடு. இன்புர வாழ். இறைவனடி சேர் என்று போதிப்பதே சைவ சமய கோட்பாடு.
ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெறலாம் என்பது புறச்சமய கோட்பாடு. எதையும் இழக்க வேண்டியதில்லை. சிவபெருமானை வணங்கினால், இழந்த யாவையும் மீட்கலாம் என்று எடுத்துறைப்பதே சைவ சமயம். அறுபத்து மூவர் வரலாறும் இதையே போதிக்கின்றன.
சுத்தபத்தமாக வாழ்ந்தான், பிரம்மச்சரியம் கடைபிடித்தான், புலால் உண்ணாமல், தாவர உணவு மட்டுமே உட்கொண்டான், நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தான் என்ற அற்ப காரணங்களுக்காக எவரும் நாயன்மார்களாக ஆனதில்லை.
சூதாடினாலும், மது அருந்தினாலும், புலால் உண்டாலும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், சிவனடியார்களை துன்புறுத்துவோரை வெட்டி கொன்றாலும், சிவனை நினைத்து எதையும் செய்தவரே, இன்று நாயன்மார்களாக திகழ்கிறார்கள்.
சிவபெருமான், உன்னை விரும்புபவர். நீ கடைபிடிக்கும் மறைகள், முறைகள், விரதம், கட்டுப்பாடுகள், சுத்தம் ஆகியவற்றை விரும்புபவர் அல்ல. சிவனை நினைத்து நீ வாழும் வாழ்க்கை தான் உன்னை சிவனடி சேர்க்கும். சுத்தபத்தம், ஆச்சாரம், கட்டுப்பாடுகள், விரதங்கள் ஆகியவை ஒருபோதும் உன்னை சிவனடி சேர்க்காது.
சிவனடி சேர......
சிவனை நினைப்போம்
சிவனை உரைப்போம்
சிவனடி சேரவே சீவித்திருப்போம்
வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய