Thursday, 13 October 2016

புனித நீராடுவது எப்படி?

புனித நீராடுவது எப்படி?

நீர்நிலைகளில் புனித நீராடுவது பாபத்தைத் தொலைத்து, புண்ணியத்தைப் பெறலாம் என்ற நம்பிக்கையில்தான்.

ஆனால் குளிக்கப் போய் சேற்றை பூசிக்கொள்வது அறிவுடைமை ஆகாது. புண்ணிய ஸ்நானம் செய்யப்போய் பாபத்தை சுமந்து வர வேண்டாமே. நீர்நிலைகள், கடல், ஆறு, அருவி, குளம், கிணறு, நூபுர கங்கை என்ற ஊற்று போன்றவை ஆகும்.

இவை ஒவ்வொன்றிலும் ஸ்நானம் செய்வதற்கான விதிமுறைகள் உண்டு. ஆறு, அருவி, நூபுர கங்கை போன்றவை, ஓரிடம் தங்காமல் ஓடும் நீர். அமைப்புக் கொண்டவை.

இவை விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடியவை. எனவே சோப்பு, ஷாம்பு போன்றவற்றை தேய்க்காமல், ஸ்நானப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை நீராடப் பயன்படுத்த வேண்டும்.

இந்நீர்நிலைகளில் கால் வைக்கும் முன் காலைக்கடன்களை முதலில் சுத்தமாக முடித்துவிட வேண்டும்.

பின்னர் குனிந்து வலக்கை விரல்களால் நீரின் மேல் ஓடும் குப்பை சத்தைகளை விலக்க வேண்டும். முதலில் கொஞ்சம் நீர் எடுத்துத் தலை மீது தெளித்துக்கொள்ள வேண்டும்.

இப்போது நீரில் இறங்கி, சூரியன் உதிக்கும் கிழக்குமுகமாகத் திரும்பி நின்று, இரு கைகளையும் கூப்பி இயற்கையை வணங்க வேண்டும். நீந்திக் குளிக்கலாம். நீந்தத் தெரியாதவர்கள், பாதுகாப்பாக நீரைத் துளாவிக் களிக்கலாம். இதனைத்தான் நீராடப் போதுவீர் என்றாள் ஆண்டாள்.

தைந்நீராட்டம் என்று நீராட்டத்தைச் சிறப்பித்துக் கூறுகிறது சங்க இலக்கியம். எனவே நன்கு திருப்தியாக நீரில் ஆடிய பின், சூரியனை நோக்கித் திரும்பி நின்று அர்க்கியம் விட வேண்டும்.

இரு உள்ளங்கைகளையும் கிண்ணம் போல் குவித்து, அதில் நீரை மொண்டு, `இறைவா, இதனை உனக்கு அர்ப்பணிக்கிறேன்` என்று சொல்லியபடியே, இரு உள்ளங்கைகளையும் இடையில் லேசாகப் பிரித்து, அதன் வழியாக நீரை வழியவிட வேண்டும். இதுவே அர்க்கியம் விடுதல்.

இது போல் மூன்று முறை செய்துவிட்டு, நீரை அதிரச் செய்யாமல், நீர்நிலையில் இருந்து மென்மையாய் வெளியேற வேண்டும்.. பிளாஸ்டிக் கவர்கள், பழத்தோல்கள், பழைய துணிகள் உட்பட எந்தக் குப்பையையும் கண்டிப்பாக நீர்நிலைகளில் போடக் கூடாது. நீர்நிலைகள் இயற்கையின் பொக்கிஷங்கள். அவை புனிதமானவை. புனிதத்தால் புண்ணியம் தருபவை என்பது ஐதீகம்.