Sunday 9 October 2016

"ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருவடிகளே சரணம் "

ஒப்பிலியப்பனா? உப்பிலியப்பனா?


        கும்பகோணத்திற்க்கு அருகில் உள்ள திவ்யதேசம் “உப்பிலியப்பன் கோயில்,” இங்குள்ள பெருமாளை “உப்பிலியப்பன்“ என அழைக்கக் கூடாது என்றும் “ஒப்பிலியப்பன்” என மட்டுமே அழைக்கவேண்டும் என்றும் 30 வருடங்களுக்கு முன் நடுநிலைப்பள்ளி தமிழ் பாடநூல்களில் ரா.பி. சேதுப்பிள்ளை என்னும் தமிழறிஞரின் கட்டுரை பாடமாக இருந்தது.
        ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் கோயில்கள் திவ்யதேசங்கள் என அறியப்படுகின்றது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், மற்றும் பேயாழ்வார் என நான்கு ஆழ்வார்களாலே மங்களாசாசனம் செய்யப்பட்ட சன்னதி  உப்பிலியப்பன் கோயில்.
        பிரும்மாண்டபுராணத்தில் இக்கோயிலின் வரலாறு இவ்வாறு காணப்படுகிறது “ம்ருகண்ட மகரிஷியின் புதல்வர் மார்க்கண்டேயர்” இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் செய்யும்போது... துளசி செடியின் கீழே சிறு குழந்தையாய் ஸ்ரீ மகாலக்ஷ்மியை கண்ட மார்க்கண்டேயர் குழந்தையை எடுத்து வளர்க்க... பின்பு ஸ்ரீ மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்ள பெருமாள் வயோதிக பிராமண வடிவில் பங்குனி மாதம், ஏகாதசி, திருவோணம் கூடிய சுபதினத்தில் வந்து மார்க்கண்டேயரிடம் பெண் கேட்க மார்க்கண்டேயரோ “என் பெண்ணோ சிறுகுழந்தை அவள் சமையலில் லவணம் (உப்பு) சேர்க்க மறந்துவிட்டால் நீரோ கோபம் கொள்வீர் என தயங்க...
                        
        வயோதிக பிராமண வடிவில் வந்த பெருமாள் உம்பெண் உப்பு சேர்க்காமல் சமைத்தாலும் கூட நான் அதை அமுதமாக ஏற்றுக்கொள்வேன் என பெருமாள் பதிலுரைக்க, வந்திருப்பது மகாவிஷ்ணு என பின்பு அறிந்து மார்க்கண்டேயர் பெருமாளுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துகொடுத்த ஸ்தலம் இது .
        பெருமாள் வாக்குக்கிணங்க இன்றும் இந்த சன்னதி பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்பதால் ” லவண வர்ஜித வேங்கடேசன்” (லவணத்தினை -உப்பினை விலக்கிய) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் - உப்பில்லா அப்பன் – உப்பிலியப்பன் என்று அழைக்கிறோம். 108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம்.
        நம்மாழ்வார் தனது திருவாய்மொழி (6-3-9) மங்களாசாசனத்தில் தன்னொப்பாரில்லப்பன் என பாடுகிறார். இதனால் தனக்கு ஒப்பார் இல்லாத அப்பன் – ஒப்பில்லா அப்பன் – ஒப்பிலில்லாத அப்பன் - என்பதால் ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கிறோம். 
        உப்பிலியப்பன் சன்னதியில் எழுந்தருளியிருந்த ஆச்சார்யஸ்வாமியும், ஸ்ரீவைஷ்ணவ பேரறிஞருமாகிய, வைகுண்டவாசி ஸ்ரீ உ.வே. ஸ்ரீராம தேசிகாச்சார் என்னும் ஸ்வாமி ஒப்பிலியப்பன் உப்பிலியப்பன் என்னும் இரண்டும் சரியே எனக் கடிதம் எழுதி அதனை ஏற்றுக்கொண்டு ரா.பி.சேதுபிள்ளையும் பதில் எழுதியதையும் ஸ்ரீ ராம தேசிகாசார் ஸ்வாமிகளின் குமாரரரும் ஆச்சார்யன் ஸ்வாமியும், போற்றுதலுக்குரியவரும் நமது பேரன்பிற்குரியவருமாகிய, ஸ்ரீ. உ..வே. வ.ந. கோபால தேசிகாசார்ய ஸ்வாமி உறுதி செய்கிறார்.
ஆச்சார்யன் ஸ்வாமி ஸ்ரீ. உ..வே. வ.ந. கோபால தேசிகாசார்ய ஸ்வாமி
        பொதுவாக தமிழ் அறிஞர்கள் சிலர் சமய விஷயத்தில் தமிழ் மொழி பற்று என்னும் ஆர்வத்தினால், ஆய்வு இன்றி சமய விஷயங்களில் கருத்துகளை பதிவு செய்வது குழப்பத்தினை உண்டாக்குகிறது. ரா.பி. சேதுப்பிள்ளையின் கருத்து மாறிவிட்டது ஆனால் அது வெளியில் பரவலாக வெளிவராததால் பாடப்புத்தகத்தில் படித்த பலரின் நிலை ஒப்பிலியப்பன் என்பதே சரி உப்பிலியப்பன் என்பது தவறு என எண்ணும்படி செய்துவிட்டது. இனியாவது.... வடமொழி புராணத்தில் உள்ள உப்பிலியப்பனையும் திராவிட வேதமான ஆழ்வார்கள் வாக்கின்படி ஒப்பிலியப்பன் என்பதையும் பொருள் உணர்வோம். 
"ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருவடிகளே சரணம் "