Tuesday, 11 October 2016

சகல ஐசுவரியங்களும் தரும் வினாயகர் வழிபாடு

 சகல ஐசுவரியங்களும் தரும் வினாயகர் வழிபாடு



மனத்தாலே நினைத்தாலே ஓடி வந்து அருள்புரியும் முதன்மைக் கடவுள் வினாயகர். கலியுகத்தின் கருணைக்கடல் பிள்ளையார். தன்னை வணங்குபவர்களிற்கு சகல நலன்களையும் அள்ளி வழங்குபவர் வினாயகர்.

எந்த ஒரு காரியம் தொடங்குவதற்கும் முன் முதலில் வினாயகரை வணங்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வரத்தை ஈசன் வினாயகரிற்கு வழங்கியுள்ளார.; இதை கடைப்பிடிக்காத முருகனும் ஏன் ஈசனும் கூட காரியம் நிறைவேறாமல் பின் வினாயகரை வணங்கி எடுத்த காரியம் செவ்வனே முடித்தனர். வுpனாயகரை அவ்வையார் எழுதிய வினாயகர் அகவல் அல்லது நக்கீரர் எழுதிய வினாயகர் திருஅகவல் தினமும் பாராயணம் செய்து வழிபடலாம். நோய்நொடி இல்லாமல் ஏவல், காத்து கறுப்பு அண்டாமல் இருக்க காசிப முனிவர் இயற்றி கச்சியப்ப சிவாச்சாரியார் மொழி பெயர்த்த வினாயகர் கவசம் பாராயணம் செய்யலாம். நினைத்த காரியம் நிறைவேற காசிப முனிவர் இயற்றி கச்சியப்ப சிவாச்சாரியார் மொழி பெயர்த்த காரிய சித்தி மாலை பாராயணம் செய்யலாம்.

முறைப்படி பூசை அறை வைத்து இருப்பவர்கள் வினாயகர் மூல மந்திரத்தை அல்லது வினாயகர் காயத்திரி மந்திரத்தை முறைப்படி ஒரு தகுந்த குருவிடமிருந்து பெற்று நாளொன்றிற்கு 16, 27, 54, 108, 1008 :::::::::::: என்று எதோ ஒரு எண்ணிக்கையில் செபம் செய்து வரலாம்.

மூலமந்திரம்:-ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாகா. .

காயத்திரி மந்திரம் :-தற்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ
தன்னோ தந்தி ப்ரயோதயாத்.

சிதறு தேங்காய்
பொதுவாக பூசைகள் தொடங்கும் போதோ அல்லது நல்ல காரியங்கள் தொடங்கும் போதோ முதலில் வினாயகரை நினைத்து தேங்காய் உடைப்பது வழக்கம். இந்த பழக்கம் எப்படி வந்தது என்று பார்த்தால் ஒரு சமயம் வினாயகர் “ மகோற்கடர் ” என்ற முனிவராக அவதாரம் எடுத்து காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இவ்விரு முனிவர்களும் ஒரு யாகத்திற்காக புறப்பட்டபோது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். வினாயகர் யாகத்திற்காக கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அவனை வதம் செய்தார். அதாவது ஒரு காரியத்திற்கு செல்லும் முன் ஏற்பட்ட தடையை தேங்காயை வீசி எறிந்து வினாயகர் நீக்கினார். நாம் எந்த காரியம் செய்யும் முன்னும் தடைகளை நீக்க வேண்டும் என வினாயகரை வழிபடுவது வழக்கம். அவர் காட்டிய வழியில் தேங்காயை அவரிற்கு பலி கொடுத்து எடுத்த காரியம் செவ்வனே முடிய வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம். மற்றும் நமது பாவங்கள் தேங்காயைப் போன்று வினாயகர் அருளால் சிதற வேண்டும் என்றும் சிதறு காய் போடுவதாக ஒரு கருத்தும் உள்ளது.

குட்டிக் கும்பிடுதலும் தோப்புக்கரணமும்ஒரு சமயம் அகத்திய மாமுனிவர் காவிரி நதியை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்துக் கொண்டார். வினாயகப் பெருமான் காகம் வடிவெடுத்து அந்த கமண்டலத்தை தட்டி விட்டு காவிரி நதியை விடுவித்தார். பின்னர் ஒரு அந்தண சிறுவனாக வடிவெடுத்து நின்றார். போபம் கொண்ட அகத்திய முனிவர் அந்த அந்தண சிறுவனின் தலையில் குட்டினார். அப்போது வினாயகப் பெருமான் தனது சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காக தான் காவிரி நதியை விடுவித்ததாக கூறினார். அகத்திய முனிவரும் தமது தவறிற்கு வருந்தி தன் தலையில் தானே குட்டி கொண்டு வினாயப் பெருமானிடம் தன்னை மன்னித்து அருளும் படி வேண்டிக் கொண்டார். அன்றிலிருந்து தலையில் குட்டிக் கும்பிடும் பழக்கம் தொடங்கியதாக கருதப் படுகிறது.

கஜமுகாசுரன் என்ற அசுரன் ஒரு சமயம் தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு டீதாப்புக் கரணம் போட்டு வணக்கம் செலுத்த வைத்தான். வினாயப் பெருமான் அந்த அசுரனை அழித்து தேவர்களை விடுவித்தார். அசுரனிற்கு போட்ட தோப்புக் கரணத்தை தேவர்கள் வினாயப் பெருமானிற்கு போட்டு பக்தியுடன் வணங்கினர். அன்று முதல் வினாயப் பெருமானிற்கு தோப்புக்கரணம் போட்டு வணங்கும் பழக்கம் ஏற்பட்டது.

ஆன்மீக ரீதியாக நாம் தோப்புக் கரணம் போடும் போது நமது உடலில் தூங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படுகிறது. குட்டிக் கும்பிடும் போது நமது தலையிலிருக்கும் அமிர்த கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தி உடல் பூராவும் பரவி நமக்கு சுறுசுறுப்பும் புத்துணர்வும் தருகிறது. இந்த தத்துவத்தை இன்றைய அறிவியல் உலகமும் ஏற்றுக் கொள்கிறது.

அருகம்புல் வழிபாடுஅனலாசுரன் என்ற அசுரன் உலகத்து மக்களை, தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாறி தகித்த விடுவதனாலேயே அவனிற்கு அனலாசுரன் என்ற பெயர் வந்தது. அவனின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் தேவர்கள் சிவ-சக்தியிடம் முறையிட்டனர் சிவனும் வினாயகரிடம் அனலாசுரனை வதம் செய்யும்படி கூறினார். வினாயகரும் அனலாசுரனுடன் போரிட்டார். அனலாசுரனை வெற்றி கொள்ளமுடியாத வினாயகர் அவனை பிடித்து விழுங்கி விட்டார். வினாயகரின் வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். பிள்ளையாரை அந்த வெப்பம் கடுமையாக தகித்தது. அவருக்கு கங்கை நீரால் குடம் குடமாக கங்கை நீர் அபிசேகம் செய்யப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை. அப்போது ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து வினாயகரின் தலை மீது வைத்தார். அனலாசுரன் வினாயகர் வயிற்றினுள்ளே சீரணமாகிவிட்டான். வினாயகரின் எரிச்சலும் அடங்கியது. அன்று முதல் வினாயகர் தன்னை அருகம்புல்லால் அர்ச்சிப்பவர்களிற்கு தான் சகல நன்மைகளையும் செய்வேன். என அருள்பாலித்தார்.

அருகம்புல் அர்ச்சனையால் ஞானம், கல்வி, செல்வம் அனைத்தும் கிட்டும். வினாயகரிற்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு இந்திரரின் மணிமுடியே ஈடாகவில்லை என்ற ஒரு புராணக்கதையும் உள்ளது. முத்தியைத் தரவல்லது அருகம்புல் உபாசனை. அதாவது நமது சகல பாவங்களையும் களைய வல்லது.

சங்கடஹர சதுர்த்தி அன்று வினாயகரிற்கு அபிசேக ஆராதனை செய்து வணங்கி வர காரிய சித்தியாகும். மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும். சுக்ல பட்ச சதுர்த்தியன்று அருகம்புல் சாற்றி வழிபட எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி என்பது உறுதியாகும்.

நாகசதுர்த்தி அன்று அபிசேக ஆராதனை செய்து வணங்கி வர நாகதோசம், ராகு, கேதுக்களினால் ஆன சகல தோசமும் நீங்கும். குழந்தை இல்லாதவர்களிற்கு தோசம் நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும்.

செவ்வாய், சனிக்கிழமைகளில் செவ்வரலி அல்லது மஞ்சள் அரலி மலர் சாற்றி வழிபடுதல் சிறப்பானது

திருமணத்தடையுள்ளவர்கள் மஞ்சள் பிள்ளையாரை பித்தளைத் தட்டுக்குள் வைத்து மூடி அருகம்புல் சாற்றி 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டுவர திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும்.

 கடுமையான வறுமையில் உள்ளவர்கள் வெள்ளெருக்கு திரி போட்டு நெய் தீபமேற்றி வினாயகரை வழிபட்டு வர வறுமை நீங்கி வளமான வாழ்வு கிட்டும்.

 நவக்கிரக தோசமுள்ளவர்கள் வினாயகரிற்கு பின்புறம் வெள்ளெருக்கு திரியில் நெய்தீபமிட்டு வணங்கி வர நவக்கிரக தோசம் நீங்கி சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

 நீண்ட நாட்களாக குழந்தையில்லாதவர்கள், சதுர்த்தி தோறும் வேப்பமரமும், அரசமரமும் சேர்ந்த மரத்தடியில் உள்ள வினாயகரிற்கு முன்னும், பின்னும் வெள்ளெருக்கு திரியில் நெய்தீபமிட்டு வணங்கி எறும்புக்கு நாட்டுச் சர்க்கரை தூவி வர குழந்தைப் பாக்கியம் கிட்டும்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
 மாசி மாதம் தேய்பிறையில் வரும் திதியில் இவிவிரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். இந்தநாள் செவ்வாய்க்கிழமை ஆனால் மிகவும் சிறப்பானதாகும். இதன் பிறகு ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருந்து சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒரு வருடம் இப்படி விரதம் அனுஷ்டித்து பின்னர் அடுத்த மாசியில் வரும் தேய’பிறை சதுர்த்தியில் விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.
 சதுர்த்தியன்று அதிகாலையில் எழுந்து, காலைக்கடன்களை முடித்த பின்னர் குளித்து, திருநீறு பூசி வினாயகர் அகவல் போன்ற பாடல்களை பாடி விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். மாலையில் சதுர்த்தி பூசையில் கலந்து கொண்ட பின்னர், மிளகு கலந்த நீரினை பருகி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். பின்னர் பால் பழம் அருந்தலாம். முடியாதவர்கள் உணவு அருந்தலாம்.
 இந்த விரதத்தை ஆயுள் முழுவதும் அனுஸ்டிக்க வேண்டியதில்லை ஒரு வருடம் முறையாக அனுஸ்டிப்பது போதுமானது. இந்த விரதத்தினை முறைப்படி அனுஸ்டித்தால் வாழ்க்கையில் சகலமும் நமது எண்ணம் போல் ஈடேறும்.

சதுராவ்ருத்தி தர்ப்பணம்.
 444 மந்திரங்களைக் கொண்ட சதுராவ்ருத்தி தர்ப்பணம் வினாயகரிற்கு மிகவும் பிடித்தமான ஒரு சிறந்த வினாகர் அருள் பெறக்கூடிய வழிபாட்டு முறையாகும். இப்போது உலகில் இந்த முறையை அனுஸ்டிப்பவர்கள் இல்லை என்ற அளவிற்கு அருகி வந்து விட்டது. இதனை செய்தால் அனைத்து தேவர்களும் வசியமாவார்கள். மாகாலட்சுமி நித்ய வாசம் செய்வார். வாக்கில் சரஸ்வதி குடிகொள்வார். எதிரிகள் தொல்லை அழிந்து போகும். எண்ணிய காரியம் நிறைவேறும். குடும்பம் என்றும் பேரானந்த வாழ்வு வாழும்.
 ஆனால் இதனை எளிதில் செய்ய முடியாது. நவக்கிரகங்கள் இதனை செய்ய விடாமல் தடைசெய்யும். தெய்வ அனுக்கிரகமும், தகுந்த குருவின் ஆசியுடையவர்களால் மட்டுமே அதனை செய்ய முடியும் இந்த உபாசனை கடைசி ஜென்மம் உள்ளவர்களிற்கு மட்டுமெ கிட்டும் என்பதும் ஒரு ஐதீகமாகும்.

 முதலில் வினாயகரிற்கு தேங்காயை சிதறுகாயாக உடைத்து நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மைவிட்டு சிதறி ஓடிவிட வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அவர் சன்னிதானத்தில் அவரிற்கு முன்னால் நின்று வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து நன்றாக இருந்து எழும்பி தோப்புக் கரணம் போடுதல் வேண்டும். அதேபோல கைகளை வைத்து நெற்றியின் இரு பொட்டுக்களிலும் குட்டி கொள்ள வேண்டும். பின்னர் வினாயகரிற்கு அருகம்புல் மாலை அணிவித்து தூப, தீப, அராதனை செய்து அல்லது செய்வித்து வணங்க வேண்டும். பின்னர் அவரை 3 முறை வலம் வர வேண்டும். வினாயகரிற்கு 1 முறை வலம் வர வேண்டும் என்ற ஒரு நடமுறையும் உள்ளது.

மூலப்பொருளாம் வினாயகரை வணங்கி   சகல நன்மைகளும் அடைவோமாக.