Thursday 1 December 2016

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

"நள்ளிரவில் கொலுசு  சத்தம் கேட்க,கைகளில் தீச்சட்டி ஏந்தி அனுதினமும்
நகர்வலம் வரும் சமயபுரத்தாள்"......"சமயபுரம்
மாரியம்மன் திருக்கோயில் "..ஆலய தொடர்புக்கு:04312670460..

உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களின் தலைமைபீடம் இது."ராபர்ட் கிளைவ் வணங்கி பேறுபெற்ற சமயபுரம் ரெங்கநாதன் தங்கச்சி".."சமயபுரம்"என்றாலே "நமக்கு நல்ல காலம் "தான்..உலகின் எந்த ஒரு மூலையில் இருந்து கொண்டும் , எந்த
வேளையில் அன்புடன் நினைத்தாலும் தக்க சமயத்தில் ஓடி வந்து காப்பாள்
சமயபுரத்தாள் என்பது பல கோடி பக்தர்களின் வாழ்வில் நடந்த,நடந்து
கொண்டுஇருக்கின்ற சிலிர்க்கவைக்கும் உண்மை.

ஆம்!"சமயபுரம் ஆத்தா நீ சகலத்துக்கும் சாட்சி..சமயபுரத்தாளே சாட்சி".."நள்ளிரவில் கொலுசு  சத்தம் கேட்க, கைகளில் தீச்சட்டி ஏந்தி அனுதினமும் நகர்வலம் வரும்
சமயபுரத்தாள்". திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தில் இருந்து திருவானைக்காவல் வழியாக  15 கி.மீ. தொலைவில் சமயபுரம் அமைந்துள்ளது..திருக்கடையூரில்  தன்னை அண்டிய மார்க்கண்டேயரை எமனிடமிருந்து காப்பாற்ற ஈசன்  கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து
எமதர்மனை அழித்தார்.இதனால்  உலகில் ஜனன மரண நிலையில் பெரிதும் மாற்றம்
ஏற்பட்டது. இதனைக்கண்ட  எமதர்மனின் சபையில்  நோய்களின் அதிபதியாக  இருந்த
மாயாசூரன் என்பவன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப்
பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.இதனைக்கண்ட ஈசன் பார்வதி தேவியை
பார்க்க ,பார்வதி தேவி தன் அம்சமாக  மாரியம்மனை மாயாசூரனை வதம் செய்ய
அனுப்பி வைத்தாள். மாரியம்மன் மாயாசூரனையும் அவனது சகோதரர்களையும் வதம்
செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து
மக்களைக் காப்பாற்றி,ஈசனின் அருளுடன் தனது தமையன்  ஸ்ரீரெங்கம்
ரெங்கநாதர் திருக்கோயிலில் முதலில் “வைஷ்ணவி” என்ற பெயரில்
அமர்ந்து,பின்னாளில் இப்போது உள்ள சமயபுரத்தில் வந்தமர்ந்து மாரியம்மனாக
அருள்பாலிக்கிறாள்.இன்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச நன்னாளில்
ஸ்ரீரெங்கம் ரெங்கனாதரிடம்  இருந்து சீர்வரிசைகள் வருகின்றன.

அதுபோல மாசியில் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது,சமயபுரத்தில்
பூச்சொரிதல் விழா நடைபெறும்.அப்போது நம் சமயபுரம் மாரியம்மனுக்கு முதல்
பூவாக ஸ்ரீரெங்கம் ரெங்கநாதரிடம் இருந்து வரும் பூவே சொறியப்படுகிறது. சமயபுரத்தாளின் பேரழகு ததும்பும் அந்த செந்தூர
திருமுகத்தை  நாம் கண்டு அவளை நாம் சந்தித்தவேளையில், நம் குறைகளைப் பற்றி
சிந்திக்கவே முடியாது .

ஆம்!நாம் அவளிடம் நம் எந்தக் குறையை போக்க தேடி ஓடி வந்தோமோ  அவைகளை அவளிடம் கூறிட நாம் மறந்து போஓம்....ஆனால் நாம் அவளின் அழகை பார்த்து அவளிடம் சொல்ல மறந்த நம் குறைகளை எல்லாம் களைந்து நமக்கு அருள்மழை பொழிவாள்அம்மன் ..கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் இத்தலத்தை காவல் புரிகிறார். இந்த கோவிலில் மூன்று விநாயகர்கள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக  ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர். இரவில் இத்தலத்தில் தங்கும்   பக்தர்கள் இன்றும்    நடு இரவில் அம்மனின் கொலுசு சத்தம் கேட்டு வியப்பில் ஆழ்கின்றனர். ஆம்!அந்த நேரத்தில் அம்மன்
நகர்வலம் வருவதாக  ஐதீகம். 

கருவறையில் சமயபுரம் மாரியம்மனின்   வலது திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது பதிந்துள்ளதைக்  காணலாம். சமயபுரம் மாரியம்மன் தனது எட்டுக் கரம்களில்  இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள்.இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் மாயாசூரனின் தலைமீது பதித்து ,அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி , வளம்களை அளிக்கிறாள் மாரியம்மன்.

இங்கு இரண்டு தீர்த்த குளங்கள் உண்டு. ஒன்று பெருவளை வாய்க்கால் தீர்த்தம், மற்றொன்று மாரி தீர்த்தம்.  இத்தலஅம்மன் சிவரூபமாக அறியப்படுவதால், விபூதியே  பிரசாதமாக
தரப்படுகிறது. வேப்பமரம்தான் இங்கு தல விருஷம்.உற்சவர் அம்மனின் திருநாமம்
"ஆயிரம் கண்ணுடையாள்"என்பதாம்.  

ராபர்ட் கிளைவ், பிரெஞ்ச்காரர் சேனைகளைச் சமயபுரத்தில் தோல்வியுறச் செய்து ஆங்கிலேயர் ஆட்சியை நிறுவினார். இதனால் அவர் அம்மனிடத்தில் தான் வேண்டிக் கொண்டபடி திருப்பணிகள் செய்ததாகத் தெரிகிறது. கிபி 18அம் நூற்றாண்டில் நடந்த இந்த சம்பவத்தால் சமயபுரம் பிரசித்தி பெற்றது. அது முதற்கொண்டு ஆங்கிலேயருக்கு இந்த அம்மனிடம் மிகுந்த பக்தி இருந்து வந்தது. 1959-ல்  கண்பார்வை பாதிப்படைந்த தியாகராஜ
பாகவதர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பிரகாரத்தில் தொடர்ந்து 48 நாட்கள் தங்கி இருந்து மீண்டும் இழந்த தன் கண் பார்வையை பெற்றார்.

பிரபல சரித்திர நாவலாசிரியர், கோவி.மணிசேகரனுக்கு பார்வை குறைந்த போது, அம்மனை வேண்டி பூரண குணம் பெற்றதால் அம்மனை புகழ்ந்து பாடி உள்ளார். அதே போன்று, சிவந்திலிங்க சுவாமிகளுக்கும் பார்வை திரும்பியதால் அம்மனை புகழ்ந்து பாடி உள்ளார்.சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் மருத்துவரால் கைவிடப்பட்ட வியாதிகள் கூட நீங்கும்.."திக்கற்றவர்க்கு தெய்வமே துணை"சமயபுரத்துக்கு வாங்க அப்புறம் நீங்களும் சொல்வீங்க "திக்கற்றவர்க்கு தெய்வமே துணை"அப்படின்னு ..ஆம்!கருவறையில் சிவசொரூபமாக அருள்பாலித்து ,பக்தர்களுக்கு ஈசனின் விபூதியையே பிரசாதமாக தரும்
சமயபுரம் மாரியம்மன் நாம் வாழ்வின் திக்கற்றநிலையில் இருந்தாலும் உடனே
வந்து கைகொடுத்து நம் வாழ்வை உயர்த்திவிடுவாள் பாருங்கள்.

என் தாய் சமயபுரத்தாளைக் காண அனுதினமும் வரும் பக்தர்களின் திருபாதம்களை என்
இதயத்தில் சூடுகிறேன்.