மங்கு சனி, பொங்கு சனி பரிகாரம் செய்வது எப்படி?
சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின் பூரண அருளை பெறலாம். சனிபகவான் உச்சம் பெற்ற திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை தரும்.ஏழரைச்சனி
ஜாதகத்தில் சூரியனும் சனியும் உச்சம் பெற்று இருந்தால் பித்ரு தோஷம் என்று கொள்ள வேண்டும். இதற்கு உரிய பரிகாரம் தில ஹோமம் செய்வதுதான். மேலும் சனிக்கிழமைகளில் சனியையும் ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சிவபெருமானை வணங்கினால் தோஷங்கள் மறையத் தொடங்கும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவர்களுக்கும் சனியின் இருள் விரைவில் கிடைக்கும். அவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு 2+3=7 ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை சிரசு சனி என்றும் 1-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும் கூறுவர்.
ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும். கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்பர்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.
சனி பவானுக்குரிய கோவில்களில் உள்ள தீர்த்ததில் நீராடி தக்கதான தருமங்களை செய்வது பயன்தரும். இவை இரண்டும் செய்ய இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன் எள் தீபம் ஏற்றி வருவது மற்றொரு வகை சாந்தி பரிகாரம் ஆகும்.
சைவர்களாக இருந்தால் சிவபுராணம், பஞ்சாட்சர ஜெபம் செய்வது உத்தமம், வைஷ்ணவர்களாக இருந்தால் சுதர்சன மூல மந்திரம், ஜெபம், சுதர்ஸன அஷ்டகம், ஆஞ்சநேயர் கவசம் போன்றவற்றை வாசிக்கலாம். அல்லது ஜெபிக்கலாம். இதனால் சனியின் இன்னல்கள் நீங்கி சங்கடங்கள் அகன்று சர்வ மங்களம் பெருகும்.
கந்த சஷ்டி கவச பாராயணமும் சனி பகவானின் கோபத்தை தணிக்கும். தாரித்ரிய தஹன ஸ்தோத்திரத்தை வாசிக்க நலங்கள் விளையும். பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் பிறவிப்பிணி அகலும் பிறப்பின் பயன் புலப்படும். சனி பகவான் கோசார ரீதியில் வரும் போது ஏற்படும் நோய்களுக்கு மருந்து என்ன தெரியுமா? காராம் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு அளிக்கலாம்.
இதனை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது ஜென்ம தினத்தன்று வரும் சனிக்கிழமையன்று அல்லது சனி பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம், குரு பிரதோஷம் ஆகிய தினங்களில் அல்லது ஜென்ம, வாரம் அல்லது ஜெனன திதி ஆகிய நாட்களில் அளிக்கலாம். சிவதரிசனம் செய்வதும் சிவனின் உடல் பூராவும் கருத்த பசுவின் பாலை அபிஷேகம் செய்வதும் நலம். சிவதரிசனம் செய்பவரை, சிவபூஜை செய்பவரை சனீஸ்வர பகவான் பாதிப்பது இல்லை.