திருவாதிரை களி படைக்கப்படும் வழக்கம் வந்த கதை*
'திருவாதிரைக்கு ஒருவாய்க்களி' என்பது பழமொழி. எனவேதான்
மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி உண்டு
மகிழ்கின்றனர்.
புராணங்கள் திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து
படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத்
தரிசித்து வருவது சிறப்பு என்கின்றன. இந்த களி படைக்கப்பட்டதற்கும் ஒரு
கதை உள்ளது.
சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் சேந்தனார் என்றொரு
விறகுவெட்டி வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு
சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.
ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று
அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை.
எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால்
யாரும் தென்படவில்லை.
மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி, நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார்.
சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார்.
சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும்
தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம்
கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; *நடராஜப் பெருமனைச் சுற்றி
எங்கும் களிச் சிதறல்கள்.* உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று
இரவு தான் கண்ட கனவை எண்ணினார்.
கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத்
தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி
அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின்
தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.
எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும்
தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச்
சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது
*அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும்
அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார்.
எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.*
*சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள்
வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப்
பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.*
சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும்,
சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச்
சேந்தனாருக்குத் தெரிவித்தார்.
சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண *நடராஜப் பெருமானே
வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார்.* அன்றைய தினம் திருவாதிரை நாள்
என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களி படைக்கபடுவதாகச்
சொல்லப்படுகின்றது.
திருச்சிற்றம்பலம் நமச்சிவாயம்...