Friday 27 January 2017

‘தை அமாவாசை’ – அதன் சிறப்பு என்ன? அன்று என்ன செய்யவேண்டும்?

‘தை அமாவாசை’ – அதன் சிறப்பு என்ன? அன்று என்ன செய்யவேண்டும்?


👉27/01/2017 வெள்ளிக்கிழமை ‘தை அமாவாசை’. முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும்.
🌸கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்கவேண்டும் என்பது விதி. இதன் காரணமாக, இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
🌸 தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும்.
⛄ தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.
🎀 ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
👫 பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
♻ அமாவாசை, பௌர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும்.
🌷 அமாவாசை வழிபாடுகளில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்து சூரிய காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குவது சிறப்பு.
💧 பிதுர்க்காரகனாகிய சூரியன் நாம் செய்யும் தான தருமங்களுக்கான பலன்களை பிதுர் தேவதைகளிடம் வழங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
🎀 கோதுமையில் செய்த உணவுகளை தானம் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும்.
🐄 பிதுர் வழிபாட்டில் காகம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, பசு மாட்டுக்கும், காகத்துக்கும் முதலில் உணவளிப்பது மிகவும் சிறப்பானதும், புண்ணியம் சேர்ப்பதும் ஆகும்.
முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர்:
⛱ முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
💦  அமாவாசை நாட்களில் தீர்த்தக் கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக  பெறமுடியும்.
🌹 எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
🌵 ராகுகேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.
🎀 சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது.
👫 முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.
💦 மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது.
⛱  இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது.
🌿 இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!
பிள்ளைக்குரிய முழு தகுதி எது?
👉கிருதயுகம், திரேதாயுகங்களில் வருஷதிதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். அந்த யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்தால் இந்நிலை இருந்தது.
👫 ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.
🍄 துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டனர். ஆனால், சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரநூல்கள் குறிப்பிடுகின்றன.
🍄  ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகிவிட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்குப் பிறகும் பிதுர்கடனை முறையாகச் செய்யவேண்டும். தனது பித்ருக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று எவன் நினைக்கிறானோ அவன் புத்தியில்லாத மூடனாவான் என்று கடோபநிஷதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் கூறுகிறார்.

தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு:
🐚முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம். முன்னோர் வழிபாடு மிக முக்கியமானது என்கிறார் தெய்வப்புலவர் வள்ளுவர்.
👉தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும். அதற்குரிய சிறந்த நாள் அமாவாசை. பிற அமாவாசைகளில், மறைந்த முன்னோருக்கு… குறிப்பாக பெற்றோருக்கு தர்ப்பணம் செய்யவிடுபட்டு போனாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நாளில், நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழியும் ஒன்று உண்டு.
👉ஒரு வீட்டில் இரண்டு சகோதரர்கள். ஒருவன் குடிகாரன், முரட்டுப்பயல். இன்னொருவன் பரமசாது, நல்லவன், பக்தன். ஒரு பெரியவர் வீட்டுக்கு வந்தார். குடிகாரனிடம், ஏனப்பா, இப்படி இருக்கிறாய்? தம்பியைப் போல் சாதுவாக இருக்கலாமே! என்றார்.
ஐயா! இந்த புத்திமதி சொல்ற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். எங்க அப்பா குடித்தார், பெண் பித்தராக இருந்தார், வம்பு சண்டைக்குப் போவார். அப்பா செய்ததை நானும் செய்றேன், இதிலென்ன தப்பு , என்று சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டான். இளையவனிடம், அப்பா, அப்படிப்பட்டவராக இருந்தும், நீ அப்படி நடந்து கொள்ளவில்லையே, ஏன்? என்றார்.
👉ஐயா! அப்பா செய்த அந்தக் காரியங்களால் அம்மாவும், குழந்தைகளான நாங்களும், உறவினர்களும், அயல் வீட்டாரும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல! ஒரு மனிதன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக அவர் வாழ்ந்தார். எனவே, அந்தக் குணங்களையெல்லாம் விட்டு, நல்லவனாக வாழ நான் முயற்சிக்கிறேன், என்றான்.
நாமும் அப்படித்தான்!
👉நம் முன்னோர் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நம் வாழ்க்கை போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை தை அமாவாசை நன்னாளில் எடுத்துக் கொள்ளுங்கள்.
🌹 தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே: தை அமாவாசைக்கு ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, கன்னியாகுமரி ஆகிய கடல் க்ஷத்ரங்களுக்கும், காவிரி, தாமிரபரணி நதிக்கும் பிற புண்ணிய தீர்த்தங்களுக்கும் மக்கள் தர்ப்பணம் செய்வதற்காக செல்கின்றனர். அங்கு சென்றவுடனேயே தண்ணீரில் இறங்கி விடக்கூடாது. கரையில் நின்று தண்ணீரை முதலில் தெளித்துக் கொள்ள வேண்டும். புனித நீர்நிலைகளும் கடவுளும் ஒன்றே. தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே என்று  சொல்வர். புனித தீர்த்தங் களை நம் தாய்க்கும் மேலாக கருதும் வழக்கத்தை நம் குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். நதிகளை அசுத்தமாக்கக்கூடாது.
தர்ப்பணம் செய்ய அமாவாசை சிறந்தது ஏன்?
🎀 பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் உள்ளது.
💦 அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுது பூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு.
👉(தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் (கவனம்) செய்வது என்று அர்த்தம்) அவ்வாறு இயலாத பட்சத்தில், மந்திரம் ஏதும் சொல்லாமல் பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை வேறு யாருக்கேனும் தானம் செய்யலாம்.
🎀 ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். பித்ரு பூஜையைச் சரியாகச் செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபம் ஏற்படும். அவ்வாறு சாபம் பெற்ற குடும்பங்களில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.
🌵 உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது.
🔥 அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. (இவையன்றியும் பல தலங்கள் உள்ளன.)
தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்