துளசி பூஜை | ஆன்மிக தகவல்கள் | ஆன்மிக செய்திகள்,
அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம். அதைப்போல் அலங்கார பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி. திருமாலின் திருமார்பில், மாலையாக மகிழ்வோடு காட்சி தருபவள் துளசி தேவி. ‘துளசி’ என்ற சொல்லுக்கு ‘தன்னிகரற்றது’ என்று பொருளாகும்.‘துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன்’ என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார்.
துளசி செடியின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்கின்றனர். இவர்கள் தவிர சூரியன், தேவர்கள், கங்கை உள்ளிட்ட புனித நதிகளும் துளசி செடியில் வசிப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்கு சமமானதாக கருதப்படுகிறது. துளசி பூஜை செய்வதால் எட்டு வகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். துளசி திருமாலுக்கும், திருமகளுக்கும் மிகவும் பிடித்தமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு நிறைந்து இருப்பார் என்பது ஐதீகம்.
பார்வதி தேவி, துளசி பூஜை செய்ததால் சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதைப்போல் துளசி பூஜை செய்ததால் அருந்ததிதேவி வசிஷ்டரை மணந்தாள். ருக்மணி கிருஷ்ணரை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள். கருட பகவான் விஷ்ணுவுக்கு வாகனமாக மாறியதும், அவர் செய்த துளசி பூஜையின் மகிமையால் தான். சாவித்திரி துளசி பூஜை செய்ததால் தான் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். விநாயகர் கஜாக சூரனை வென்று விக்னேஷ்வரன் என்ற பட்டத்தை பெற்றதும் துளசி பூஜையால் தான்.
துளசியின் கதை
இத்தனை மகிமையும் மகத்துவமும் வாய்ந்த துளசி, பூலோகம் வந்த கதை தெய்வீகமானது.
துளசித்தாய் பூமியில் ‘பிருந்தை’ என்ற பெயரில் பிறந்து, ஜலந்தரன் என்ற அரக்கனை திருமணம் செய்து இருந்தாள். ஜலந்தரன் கடும் தவம் செய்து அதனால் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஜலந்தரன் சிவனிடம் போரிட வேண்டி கயிலைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தான். அவன் முன் ஒரு அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவன் அவனிடம் பேசினார். அப்போது ஜலந்தரன் தன்னால் எதையும் செய்யமுடியும். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று இறுமாப்புடன் கூறினான்.
உடனே அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து தலைமீது வைக்கவேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அந்த வட்டத்தை பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். இருகரங்களாலும் அதனைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்கி தாங்கினான். உடனே அந்த வட்ட சக்கரம் அவன் உடலை இரு கூறுகளாக பிளந்து, மீண்டும் அனல்கக்கும் தீப் பிழம்பாக மாறி சிவனின் திருக்கரத்தை சென்றடைந்தது. இதற்கிடையில் கயிலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததை கண்ட பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்று தான் ஜலந்திரன் அழிவான் என்ற நிலை இருந்தது. இதைத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பைச் சோதிக்க ஒரு தவ முனிவர் வடிவில் பிருந்தை முன் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இருகூறாகி இறந்து விட்டதை கூறி அவள் முன் அந்த இருகூறுகளும் மாயையினால் வரும்படி செய்தார்.
பிருந்தை தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டாள். உடனே திருமால் ஜலந்தரனின் உடற்கூறுகளை ஒன்றாகச் சேர்த்து, தான் அந்த உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாக நம்பும்படி செய்தார்.
பின்னர் திருமால் சிலகாலம் பிருந்தையுடன் குடும்பம் நடத்தினார். காலப்போக்கில் தன்னுடன் வாழ்பவர் தன் கணவன் இல்லை. மாயையில் வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிருந்தை தீயில் புகுந்து உயிர் துறந்தாள்.
இதனால் மிகவும் மனம் வருந்திய திருமால் பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே அமர்ந்து இருக்க, இதை பார்த்த பார்வதி தேவி தனது இடது கை சிறு விரலில் இருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுக்க, அதை பிரம்மா பெற்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே துளசி செடி உண்டாயிற்று. திருமால் அந்தத் துளசியை எடுத்து தன்மேல் அணிந்து மீண்டும் சகஜ நிலையை அடைந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த இடம் ‘திருவிற்குடி’ என்றத் திருத்தலமாகும். துளசித்தாய் தோன்றிய திருவிற்குடி சிவதலம் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூருக்கு செல்லும் வழியில் உள்ளது. ஜலந்தரனை சம்ஹாரம் செய்த திருவிற்குடி சிவபெருமானின் அட்டவிராட்டான தலங்களுள் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற இக்கோவில் பிருந்தையை திருமால் துளசியாக ஏற்றுக் கொண்ட தலம். இக்கோவிலில் இறைவன் பெயர் விரட்டானேசுவரர். இறைவியின் நாமம் ஏலவார் குழலி பரிமளநாயகி. தலமரம் துளசி.
துளசி வழிபாடு
கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித்தாய்க்கு பூஜை செய்வது மிகுந்த பலனை தரும். துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.
கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை ‘‘பிருந்தாவன துளசி’’ அல்லது ‘துளசிக்கல்யாணம்’ எனக் கொண்டாடுவார்கள். அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும்.
சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும். துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) சேர்த்து வைக்க வேண்டும்.
வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்து கொடுக்க வேண்டும். ஒரு ஏழை அந்தண சிறுமியை மனையில் அமரவைத்து சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத்துணி கொடுக்க வேண்டும். பால் பாயாசத்தை பாத்திரத்துடன் தானம் கொடுக்கலாம்.
துளசியை ஒவ்வொரு இலையாக இட்டு பூஜை செய்ய வேண்டும். ஒரே இலையை கிள்ளி கிள்ளி போடக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, ஞாயிற்றுக்கிழமை, கிரகண காலம், மதியம், சந்தியா காலம், இரவு முதலிய காலங்களில் துளசியை பறிக்கக் கூடாது.
கார்த்திகை மாதம் துளசி பூஜை செய்பவர்களுக்கும், துளசியால் பகவானை அர்ச்சனை செய்பவர்களுக்கும் அவர்கள் நினைத்தது நிறைவேறும். அவர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறப் பெறுவார்கள் என புராணம் கூறுகிறது.
கீழ்க்கண்ட நாமாவளிகளை கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்
ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம
ஓம் விஸ்வ பூஜதாயை நம
ஓம் விஷ்ணுப்ரியாயை நம
ஓம் தேவ மூலிகாயை நம
ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம
ஓம் சவுபாக்ய நிலயாயை நம
ஓம் புஷ்பசாராயை நம
ஓம் நந்தவன நாயகாயை நம
ஓம் விஸ்வ பாவணாயை நம
ஓம் தான ப்ரதாயின்யை நம
ஓம் மகாலட்சுமி வாசாயை நம
ஓம் சகல மாட கலாலங்கார்யை நம
ஓம் ஸ்ரீராமப்ரியாயை நம
ஸ்ரீதுளசி தேவ்யை நமோ நம.
பக்தியுடன் துளசி பூஜை செய்து வழிபடுபவர்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். துர்மரணங்கள் ஏற் படாது. இப்பிறவியில் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெற்று முக்தி பேற்றினை பெறுவார்கள்.