Sunday, 29 October 2017

வைகுண்ட ஏகாதசி



வைகுண்ட ஏகாதசி

     மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. டிசம்பர்-சனவரி மாதங்களில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
     திரேதாயுகத்தில் முரன் என்ற பெயரில் ஒரு கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களுக்கும், தவ முனிவர்களுக்கும் பல கொடுமைகள் செய்தான். அவனது தொல்லைகளைத் தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அரக்கன் முரனை அழித்து தேவர்களைக் காக்க திருமால் முடிவு செய்து சக்கராயுதத்துடன் முரனுடன் போருக்கு புறப்பாட்டார். அசுரனுக்கும், திருமாலுக்கும் கடும்போர் நடந்தது. ஆண்டவனின் சக்கராயுதத்திற்கு முன் அரக்கன் சக்தியற்றுப் போனான். இருந்தாலும் அவன் பல மாய வடிவங்களில் போர் புரிந்து வந்தான். தினமும் காலையில் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் ஆகும்வரை போர் நடக்கும். தினமும் போர் முடிந்ததும் திருமால் வத்திரிகாசிரமத்தில் உள்ள ஒரு குகைக்கு சென்று இளைப்பாறுவார். பொழுது விடிந்ததும், அரக்கனுடன் போர் புரிய போர்களத்திற்கு செல்வார்.ஒரு நாள் ஆசிரமத்தில் திருமால் படுத்து இருந்த போது அங்கு வந்த முரன், அவரை திடீரென்று தாக்கத் தொடங்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து அரக்கன் முன் வந்து நின்றாள். அழகியைக் கண்டதும் அவளது அழகில் அரக்கன் மயங்கினான். ஆனால் படைக்கலங்களுடன் விசுவரூபத்துடன் தோற்றமளித்த அந்தப் பெண் ஆங்காரத்துடன் அரக்கனை அழித்தாள். இதனால், திருமால் மனம் மகிழ்ந்தார். தமது எதிரில் நின்ற சக்தியை நோக்கி, சக்தியே, அசுரனை அழித்த உனக்கு ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். அரக்கன் முரனை அழித்த இம்மார்கழி மாதத்தில் உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்று கூறினார். திருமால் கொடுத்த வரமே ஏகாதசியின் மகிமைக்கு காரணமாயிற்று. அரக்கனை வென்று சக்தி வெளி வந்த மார்கழி மாதம் பதினோராவது நாளாக இருந்ததால், திருமாலின் சக்திக்கே ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்டது.தேவர்களும், முனிவர்களும் ஏகாதசியன்று விரதம் இருந்து இழந்த தங்களது சக்தியை மீண்டும் பெற்றனர்.

     ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார். அந்த நான்முகனை அழிக்க மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்களைத் தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். பின்னர் நல்லறிவு பெற்ற அவர்கள் திருமாலிடம் “நாங்கள் உம் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்” என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள் “மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் அனுஷ்டிக்க வேண்டும். அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் அர்ச்சாவதாரப் பெருமாளை (விக்ரஹம்) தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கு ஆசி வழங்கினார். அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக திருமால் உறையும் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
     இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
     தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்ற மஹாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு, திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார். அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாக புராணங்களில் கூறப்படுகிறது.
     தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது. ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரம்பத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்..


வரமும் வாழ்வும் அருளும் வைகுண்ட ஏகாதசி!
கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை. 

விஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை.

காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை.

தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை.

ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை.

என்கின்றன ஞான நூல்கள். ஆமாம் ஏற்றங்கள் மிகுந்தது ஏகாதசி. தேய்பிறையில் வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு. இவற்றுள் மார்கழி மாதம் வளர் பிறையில் வருவது 'மோட்ச ஏகாதசி'. இதையே வைகுண்ட ஏகாதசியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.

புண்ணியமிகு இந்தத் திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர் களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும். அன்றைக்கு ஏகாதசியின் மகிமையையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும் விவரிக்கும் திருக்கதைகளைப் படிப்பது வெகு விசேஷம் என்பார்கள். நாமும் ஏகாதசி குறித்த சில திருக்கதைகளைப் படித்து  மகிழ்வோம்.
அசுரர்களுக்கு அருளிய ஏகாதசி!

ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ''பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்'' என்றார்.

கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர் களின் சுபாவம் போலிருக்கிறது. அசுரர்கள் அலட்சிய மாக, ''நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உனக்கே வரம் தருவோம்'' என்றார்கள்.

ஸ்வாமி சிரித்தார். ''அப்படியா? சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்'' என்றார்.

அசுரர்கள் திகைத்தார்கள். ''ஸ்வாமி! தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என வேண்டினார்கள்.

அவர்கள் வேண்டியபடியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ''தெய்வமே! தங்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.

அங்கே ஆதிசேஷன் மேல் இருக்கும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவம் கண்டு பரம ஆனந்தம் அடைந்தனர் அசுரர்கள்.

''ஸ்வாமி! பிரம்மா முதலான எல்லோருக்கும் பகவானான தங்களை அர்ச்சாவதாரமாக (விக்கிரக வடிவமாக)ப் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை!'' என்று வேண்டினார்கள்.

''அப்படியே ஆகும்!'' என அருள் புரிந்தார் அச்சுதன். 'வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டி இருக்கிறார்கள். ஒப்பில்லாத ஸ்வாமியும் அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்.

எனவே, வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வதாலும், பெருமாளைத் தரிசித்து வழிபடுவதாலும் இம்மை செழிக்கும்; மறுமை சிறக்கும்.  சகல செளபாக்கியங்களும் ஸித்திக்கும்.

முன்னோருக்கும் அருளும் ஏகாதசி

கம்பம் எனும் நகரை மன்னர் வைகானஸர் ஆண்டு வந்தார். குடிமக்களுக்குக் குறையேதும் இல்லாத ஆட்சி. ஆனால், மன்னருக்கு?

ஒரு நாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்டார். அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது. பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.

''உத்தமர்களே! நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, 'மகனே! நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்ய மாட்டாயா?’ என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்'' என்று வேண்டினார் மன்னர்.

''மன்னா! பர்வதர் என்று ஒரு முனிசிரேஷ்டர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். அவரிடம் போ!'' என்று வழி காட்டினார்கள் உத்தம வேதியர்கள்.

மன்னர் உடனே பர்வதரைத் தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார்.

உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்களைத் திறந்து, எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்:

''வைகானஸா! உன் தந்தை, அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான். 'இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும்’ என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.'
'நீ உன் மனைவி மக்களுடன், மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, பரவாசுதேவனான பகவானை பூஜை செய்! அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்! அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்!'' என்று சொன்னார் பர்வதர்.

வைகானஸனும் மோட்ச ஏகாதசி விரதம் இருந்து, பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் வைகானஸன் மோட்ச ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். ஆம், நமக்கும் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது.

ஏகாதசி விரத நியதிகள்

தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும். ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட் பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.

ஏகாதசிகள் - 25

உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, ஸபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமதா ஏகாதசி, வரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி, சயினி ஏகாதசி, காமிகா ஏகாதசி, புத்ர(ஜா)தா ஏகாதசி, அஜா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி, இந்திரா ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி, ரமா ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி, கமலா ஏகாதசி ஆகியவையே 25 ஏகாதசிகளாகும்.
பச்சைமா மலைபோல் மேனி

 பவள வாய்க் கமலச் செங்கண்

அச்சுதா! அமரரேறே! ஆயர் தம்

 கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய்

 இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்

 அரங்கமா நகருளானே!”

மனிதப் பிறவியின் பயனே, மறுமையில் மோட்சம் அடைவதுதான் என்ற தத்துவத்தின் ஒத்திகை அந்த நாளில் நடைபெறுகிறது. மோட்சத்துக்கு எப்படிப் போவது? இப்பிறவியில் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காது வாழ்ந்தால் போகலாம். சரி, யார் அழைத்துப் போவார், நம்மை? அந்த பரந்தாமனேதான். அவ்வாறு பரந்தாமன் அழைத்துப் போகும் அந்த சம்பவம்தான் இப்போது ஒரு ஒத்திகையாக ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி தினத்தன்றும் நடத்தப்படுகிறது. அதாவது சொர்க்க வாசல் திறக்க, அதனுள் முதலில் பெருமாள் புக, பின்னால், அவர் அழைத்துவரும் அத்தனை பக்தர்களும் புகும் புண்ணிய வைபவம். பொதுவாக எல்லா பெருமாள் கோயில்களிலும் இந்த உற்சவம் விமரிசையாக நடந்தேறும் என்றாலும், ஸ்ரீரங்கம், திருப்பதி, சென்னை திருவல்லிக்கேணி போன்ற தலங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. இங்கே ஸ்ரீரங்கத்து வைகுண்ட ஏகாதசி உற்சவ காட்சிகளைக் காணலாம்.
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக மார்கழி பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள். இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்ஸவம் என்று அழைக்கப்படும். பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைப்பர். வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த பத்து நாட்கள் உற்சவம் ராப்பத்து உற்சவம் என அழைக்கப்படுகிறது. அப்போது அரங்கனுக்கு நாச்சியார் திருக்கோல அலங்காரம் செய்யப்படுகிறது. பகல்பத்துக்கு முதல் நாள் இரவு திருமங்கையாழ்வாரால் அருளப்பட்ட திருநெடுந்தாண்டகம், அரங்கன் முன் பாடப்படுகிறது. இந்த உற்சவ நாட்களில் திருமால் அர்ஜுன மண்டபத்திற்கு எழுந்தருளி அரையர் சேவை, திருப்பாவை கோஷ்டி சேவையை ஏற்பார். பெருமாளை சுமக்கும் பாக்கியம் பெற்ற ஸ்ரீபாதம் தாங்கிகள் ஒரே மாதிரியான தலைப்பாகையைக் கட்டியிருப்பது கண்களைக் கவரும். சன்னதி திரும்பும்போது ஒய்யாளி சேவையில் சர்பகதி எனும் பெருமாளைக் கீழே தாழ்த்தி அதன் பின் மேலே உயர்த்தி பாம்பு போல் செய்வது கண்களுக்கு விருந்தாகும். தாளம், நடிப்பு, பாட்டு மூன்றும் இணைந்தது அரையர் சேவை. பகல்பத்து உற்சவத்தில் தினந்தோறும் இருமுறை அரையர் சேவை நடக்கும். நாலாயிர திவ்யபிரபந்தத்தை ராக தாளத்தோடு இசைக்கும் அரையர் சேவை கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்து. அரங்கன் சொர்க்க வாசல் கதவுக்கு நேர் எதிரே வந்து நின்றதும், பட்டர், ‘திற’ என குரல் கொடுக்க, பரமபதவாசலில் பக்தர்களோடு அந்த பக்தவத்சலனும் நுழைவான். அப்போது ‘ரங்கா! ரங்கா!’ கோஷம் விண்ணை முட்டும். ஏகாதசியன்றும், அதையடுத்த தினங்களிலும், முத்தினாலான  முத்தங்கியை தரித்திருக்கும் மூலவரை கருவறையில் தரிசிக்கலாம்.
ஆடி ஏகாதசி பண்டரிபுரத்தி லும், கைசிக ஏகாதசி திருக்குறுங் குடியிலும், விருச்சிக ஏகாதசி குருவாயூரிலும், வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்திலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.
மார்கழி மாதம் இருபது நாட்கள் திருவிழா விசேஷமாக நடைபெறுகிறது. பகல் பத்து என பத்து நாட்களும், ராப்பத்து என பத்து நாட்களும் திருவிழா நடைபெறுகிறது. இந்த முதல் பத்து தினங்களில் மூலவர் சன்னதியிலிருந்து நம்பெருமாள் கீழ் நிலைக்கு இறங்கி வந்து நமக்காக யோகத்தைச் செய்து காண்பிக்கிறார். சமாதி நிலையைக் கலைத்து இடை நிலையைக் கலைத்து, இடகலை, பிங்கலை வழியாக சந்திர கலை, சூர்யகலை, மும்மலங்கள் போன்றவற்றைக் கடந்து ஆறு ஆதாரங்களையும் கடந்து அர்ச்சுன மண்டபத்திற்குச் செல்கிறார். இங்கே யோகத்தை அப்பத்து நாட்களும் செய்த பின் பத்தாவது நாள் மோகினித் திருக்கோலம் கொள்கிறார். இதன் தத்துவம் குண்டலினி சக்தி புறப்பட்டு விட்டது என்பதை நமக்கு உணர்த்துவதாகும்.
பத்தாம் நாள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இது பிரம்மந்திரம் திறப்பதைக் குறிப்பதாகும். பிரம்மநிலை என்பது ஆயிரங்கால் மண்டபம். அந்த இடமே ஜெகஜ்ஜோதியாய் திகழும். யோகாக்னி அதிகமாவதால் நல்ல ஆகாரம் வேண்டும். அதனால் பெருமாளுக்கு 8 மணிக்கு பொங்கலும், மதியம் நெய்யிலே செய்யப்பட்ட சம்பார தோசையும் நிவேதிக்கப்படுகிறது. சராசரி உடல் ஆரோக்கியம் கொண்ட ஒருவர் ஒரே வேளையில் விதவிதமான உணவு வகைகளை உண்ணமுடியாது. ஆனால், யோகிகளால் முடியும். எனவேதான் ரங்கநாதருக்கு செல்வரப்பம், அரிசிவடை, தோசை, சர்க்கரைப்பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன. எட்டாம் நாள் வேடுவர்பறி திருவிழா. இது 96 தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்றதைக் குறிக்கும். அன்று நம் பெருமாள் தங்கக் குதிரையில் உலாவருவார். அது வாசியின் ஓட்டத்தைக் குறிக்கும். குதிரை என்பது மனது. குதிரைபோல மனதும் கட்டுக்கடங்காது முன்னும் பின்னும் ஓடும். அதை நினைவுறுத்த குதிரைவாகனம் முன்னும் பின்னும் வேகமாக ஆடும்போது அதில் ஆரோகணித்திருக்கும் அரங்கனைக் காணக் கண் கோடி வேண்டும். ராப்பத்து உற்சவத்தில் பரமபதவாசலைக்கடந்து திருமாமணி மண்டபத்தைச் சேர்வது ஜீவாத்மா சரீரத்தை விட்டு வைகுண்டத்தை அடைவதன் சாட்சியாகக் கருதப்படுகிறது.

யோகத்தில் உள்ள சர்ப்பகதி, வியாக்ரகதி, கஜகதி, விருஷபகதி, சிம்ம கதி எனும் ஐந்து கதிகளிலும் பெருமாளின் ஓய்யாளி சேவை நடைபெறும்.
  வைகுண்ட ஏகாதசித் திருநாளில், ஒரு சொட்டு நீர்கூடப் பருகாமல் விரதம் இருக்கும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர். (ஒரு வருடத்தின் எல்லா ஏகாதசி நாட்களிலும் இவ்வாறு விரதம் இருப்பதும் அவர்கள் வழக்கம்). அன்று முழுப் பட்டினியாக இருந்து பெருமாள் நாமத்தையே சுவாசித்து, புசித்து, உயிர்த்து வாழும் பக்தர்கள், பரந்தாமன் வழிகாட்ட, சொர்க்க வாசல் வழியாக சென்று அந்த நிறைவிலேயே தம் உண்ணா நோன்பை முடித்துக் கொள்வார்கள்.
  வேண்டியதை வேண்டியதற்கும் மேலே அருளும் திருவரங்கனை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தரிசித்தால் இகபரசுகம் நிச்சயம்.