Saturday, 28 October 2017

மனக்கவலையை எப்படி விரட்டுவது?

மனக்கவலையை எப்படி விரட்டுவது?

மனக்கவலையே இல்லாத மனிதன் இந்த உலகத்தில் இல்லை. எப்பொழுதும் கவலையை மனதில் வைத்து இருந்தால் தேவையற்ற குழப்பங்கள் மனதில் குடிகொள்ளும். மனக்கவலை நீங்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இங்கு மனக்கவலை நீங்க, குரு ஒருவர் சொல்லும் குட்டிக் கதையை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன் எழுந்து, 'குருவே! சில நேரங்களில் மனதில் எழும் கவலையை எப்படி போக்கி கொள்வது?" என்று கேட்டான். குரு சீடனிடம், 'இதற்கான பதிலை ஒரு கதையின் வாயிலாக உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்றபடி கதையை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு காட்டில் குரங்குகள் பல கூட்டமாக வாழ்ந்து வந்தன. அக்கூட்டத்தில் சுட்டித்தனம் செய்யும் ஒரு குட்டிக் குரங்கும் இருந்தது.

ஒரு நாள் அந்தக் குட்டிக்குரங்கு, பாம்பு ஒன்றைக் கண்டது. நௌpந்து, வளைந்து சென்ற அந்தப் பாம்பைக் கண்டதும், அதற்கு குதூகலமாக இருந்தது.

அது ஒரு பெரிய நச்சுப் பாம்பு. குட்டிக் குரங்கானது, மெதுவாகப் போய் அந்தப் பாம்பை தன் கையில் பிடித்து கொண்டது.

பிடிபட்ட பாம்பு, குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக்கொண்டது. தன் விஷப் பல்லைக் காட்டி சீறியது. இதைப் பார்த்த குட்டிக் குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது. இதைப் பார்த்து குரங்குகள் அனைத்தும் அங்கே கூடிவிட்டன. ஆனால் எந்தக் குரங்கும், குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

'ஐயய்யோ.. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு. இது கடித்தால் உடனே மரணம்தான்" என்றது ஒரு குரங்கு. மற்றொன்றோ, 'அவன் தனது பிடியை விட்டதுமே, பாம்பு அவனைக் கடித்துவிடும். பாம்பிடம் இருந்து அவன் தப்பிக்கவே முடியாது" என்றது.

இவ்வாறு ஒவ்வொரு குரங்கும், குட்டிக் குரங்கின் பீதியை அதிகரித்து விட்டு அங்கிருந்து சென்றன.

குட்டிக் குரங்கு, தன்னுடைய கூட்டமே, தன்னை கைவிட்டுவிட்டதால், விரக்தியில் இருந்தது. எந்த நேரமும் கடிக்கத் தயாராக சீறிக்கொண்டிருக்கும் பாம்பைப் பார்த்து பயந்தபடியே, தன் பிடியை விட்டுவிடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டது குட்டிக் குரங்கு.

நேரம் ஆக ஆக மரண பயம் அந்தக் குரங்கை வாட்டி வதைத்தது.

'புத்தி கெட்டுப் போய் இந்தப் பாம்பை கையால் பிடித்துவிட்டேனே" என்று பெரிய குரலெழுப்பி புலம்பியது. நேரம் கடந்து கொண்டே இருந்தது.

உணவும், நீரும் இல்லாமல் குரங்கின் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தது. கண்கள் இருளத் தொடங்கின.

அந்த நேரம் பார்த்து ஒரு ஞானி அந்த வழியாக வந்தார். தன் சொந்தங்கள் கைவிட்ட நிலையில், இந்தத் துறவி நம்மைக் காப்பாற்றுவார் என்று அந்த குட்டிக் குரங்கு நினைத்தது. இதனால் கொஞ்சம் நம்பிக்கையும் வந்தது. குட்டிக் குரங்கின் அருகில் வந்த துறவி, 'எவ்வளவு நேரம்தான் அந்தப் பாம்பை கையில் பிடித்துக் கொண்டே கஷ்டப்படப் போகிறாய்? அதைக் கீழே போடு" என்றார்.

குட்டிக் குரங்கோ, 'சுவாமி! நான் பாம்பை விட்டு விட்டால், அது என்னைக் கடித்துவிடும். பின் நான் இறந்து விடுவேன்" என்றது.

அதற்கு துறவி, 'பாம்பு செத்து ரொம்ப நேரமாகிவிட்டது. அதை கீழே வீசு" என்றார். அவரது வார்த்தையைக் கேட்ட குரங்கு, பயத்துடனேயே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

குரங்கின் இறுகிய பிடியில் நெடுநேரம் இருந்த அந்தப் பாம்பு இறந்து போயிருந்தது. அதைப் பார்த்த பிறகுதான், அந்தக் குட்டி குரங்குக்கு உயிர் வந்தது. பின்னர் குட்டிக் குரங்கு, துறவியை நன்றியுடன் பார்த்தது. துறவி, 'இனிமேல் இதுபோன்ற முட்டாள் தனமான செயல்களை செய்யாதே" என்று அறிவுரை கூறிவிட்டு சென்றார்.

தத்துவம் :

நம்மில் பலரும் இப்படித்தான். மனக்கவலையை பிடித்துக் கொண்டு, விட முடியாமல் குழம்பி கொண்டிருக்கிறோம். கவலையை விட்டு விடுங்கள்;. மகிழ்ச்சி தானாகவே வந்து சேரும்.