Tuesday, 5 December 2017

நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும்!

நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும்!
எனக்கு தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதை என்னால் சரி செய்ய இயலாது என நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக அதை உங்களால் செய்ய முடியாது. இங்கும் ஒரு தொழிலதிபருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதை அவர் தன்னபிக்கையுடன் எதிர்கொள்வாரா? மாட்டாரா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் மிகவும் சோர்ந்துபோய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்றார். அப்போது பெரிய மனிதர் ஒருவர் இவரின் அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்ட பெரிய மனிதர், ஏன் சோகமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு இவர், எனது தொழில் மிகவும் நஷ்டம் அடைந்து விட்டேன். அதனால் மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் என்றார். பெரிய மனிதர், எவ்வளவு ரூபாய் நஷ்டம்? என்று கேட்டார். இவர் 50 கோடி ரூபாய் என்றார். பெரிய மனிதர், அப்படியா, சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகிவிடுவாயா ? என்று கேட்டார் பெரிய மனிதர். உடனே இவர், எல்லாம் சரியாகிவிடும் என்றார்.


பின் அந்த பெரிய மனிதர், ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி, நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக 500 கோடிக்கு செக் கொடுத்திருக்கிறேன். இதை வாங்கிக் கொண்டு எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் என்று சொல்லிவிட்டு செக்கை இவர் கைகளில் தினித்துவிட்டு சென்றார். பின் அந்த நிறுவனத்தின் தலைவர் தன் அலுவலகத்திற்கு சென்றார். அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதன் பின் வேலைகள் வேகமாக நடந்தன. 

தவறுகள் கண்டுப்பிடிக்கபட்டு களையப்பட்டன. அவருடைய பேச்சு மூச்சு செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது. ஒரு வருடம் கழிந்தது. இந்த வருடத்தில் சரியாக 550 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம்.


அடுத்த நாள் காலை அந்த பெரிய மனிதர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு சென்றார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில் அமர்ந்தார். காலை நேரம் என்பதால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் தூரத்தில் அந்த பெரிய மனிதரும், அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த பெரிய மனிதரை காணவில்லை. 


இவர் அந்த பெண்மணியிடம், அம்மா! உங்களுடன் வந்த அந்த பெரியவர் எங்கே? என்றார். அந்த பெண்மணி பதற்றத்துடன், உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? என்றார். இவர், இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்? என்றார். 

அந்த பெண்மணி, அய்யா! அவர் மனநிலை சரி இல்லாதவர், செக் தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் என்றார். இதை கேட்டபின் அந்த நிறுவன தலைவரால் பேசமுடியவில்லை. நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

தத்துவம் :

எந்த ஒரு விஷயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம்மீது தன்னம்பிக்கையுடன் நம்பவேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேறி, வெற்றிகளை அடைய முடியும்.