Thursday, 16 August 2018

நீங்கள் பணிபுரியும் இடம் இதுபோல் உள்ளதா?

நீங்கள் பணிபுரியும் இடம் இதுபோல் உள்ளதா?

அதிகாரியின் செயல்..!
  ராமு என்பவர் தன் கல்லூரி படிப்பை முடித்து ஒரு அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். அலுவலகத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே அந்த அலுவலகத்தில் ப‌ணியா‌ற்று‌ம் மேல‌திகா‌ரி, அங்கு வேலை செய்யும் சக ஊழியர்களை எ‌ப்போது‌ம் தி‌ட்டி‌க் கொ‌ண்டே இரு‌ப்பதையும், அவர்களின் மேல் மிகவும் கோபமாக நடந்து கொ‌ண்டு‌ம், ‌வா‌ய்‌க்கு வ‌ந்தபடி திட்டி‌க் கொ‌ண்டு‌ இருந்ததையும், இதனா‌ல் அவருட‌ன் ப‌ணியா‌ற்று‌ம் சக ஊ‌ழிய‌ர்க‌ள் எ‌ப்போது‌ம் மன வருத்த‌த்துட‌னேயே பணிபுரிந்து கொண்டு இரு‌ப்பதையும் பார்த்தார்.

இப்படியே பல மாதங்கள் கடந்தன. ஒரு நாள் சேகர் என்பவர் அந்த அலுவலகத்திற்கு பு‌திதாகப் ப‌ணி‌க்கு சே‌ர்‌ந்தா‌ர். சேகரையும் அ‌ந்த மேல‌திகா‌ரி திட்டினார். ஆனா‌ல், பு‌திதாக பணியில் சேர்ந்த சேகரின் முக‌த்‌தில் சோகமோ, கவலையோ இ‌ல்லாமல் எ‌ப்போது‌ம் போல தனது வேலையை அவ‌ர் சிறப்பாக செய்து வந்தார். சேகரின் செயலைப் பார்த்த ம‌ற்ற ஊ‌ழிய‌ர்களு‌க்கு ‌ஒரே ஆ‌ச்ச‌ரி‌ய‌ம்.

அவர்கள் சேகரிடம் சென்று, மேலதிகாரி உ‌ன்னை கடுமையான வார்த்தைகளால் தி‌ட்டு‌கிறா‌ர். அவர் திட்டியதை எண்ணி கவலைப்படாமல் எ‌ப்போது‌ம் முக‌த்தை ‌சி‌ரி‌த்தபடியே வை‌த்து‌க் கொ‌ண்டு வேலை செ‌ய்ய உ‌‌ன்னா‌ல் ம‌ட்டு‌ம் எ‌ப்படி முடி‌கிறது எ‌ன்று கே‌ட்டா‌ர்க‌ள். அதற்கு சேகர் அவர்களிடம், அந்த தெருவின் முனையில் இரு காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, அங்கே பாருங்கள் புரியும் என்றான்.

அங்கே பார்த்தும் சக ஊழியர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் சேகரிடம் எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்றனர். அதற்கு சேகர், அந்தக் காதலன் தன் காதலியிடம் ஏதோ ஒன்றைக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருப்பது தெரிகிறதா? என்று கேட்டான். ஆமாம் அவன் ஏதோ பரிசுப் பொருள் ஒன்றை கையில் வைத்திருப்பது போல் தெரிகிறது என்றனர். 

ஆனால் அவன் காதலி அவன்மீது உள்ள கோபம் காரணமாக அவன் எவ்வளவுதான் கொடுக்க முயற்சி செய்தாலும் காதலி அந்தப் பரிசுப்பொருளை வாங்கவே இல்லை பார்த்தீர்களா? என்றார். சக ஊழியர்கள் ஆமாம் என்றனர்.

உடனே சேகர் சக ஊழியர்களிடம் அந்தப் பெண் அந்த பரிசை வாங்காதவரை அந்த பரிசுப்பொருள் யாருக்கு சொந்தம்? என்று கேட்டான். அதற்கு அவர்கள் நிச்சயம் அது அந்த காதலனுக்குத் தான் சொந்தம் என்று சொன்னார்க‌ள். உடனே சேகர் இதேப்போல் தான் மேல‌திகா‌ரி தனது கோபத்தையும், கடுமையான சொற்களையும் என்னிடம் தருவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவ‌ர் எ‌ன்‌னிட‌ம் தந்த கோபத்தை நான் வாங்கிக் கொள்ளவில்லை என்றார்.

இதை‌ கே‌ட்ட ம‌ற்ற ஊ‌ழிய‌ர்க‌ள் ‌திகை‌த்து‌ நி‌ன்றன‌ர். மேலும் எ‌ந்த ஒரு பிர‌ச்‌சனையு‌ம், அத‌ன் ‌மீது நா‌ம் கா‌ட்டு‌ம் ஆ‌ர்வ‌த்தை‌ப் பொறு‌த்தே அமையு‌ம். அது ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி, கடுஞ்சொற்களாக இருந்தாலும் சரி. எதையுமே நா‌ம் ஏ‌ற்று‌க் கொ‌ள்ளாம‌ல் ந‌ம்‌மிட‌ம் வ‌ந்து சேராது என்று கூறினார்.


நீதி :

வேதனைப்படுத்தும் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.