""மொதல்ல பெரியவா... அப்றமா…""
[கண்கலங்க வைக்கும் அனுக்ரஹம்]
அந்த முதியவருக்கு, முதுமை, உடல் தளர்ச்சி, துணை இல்லாமல் வெளியே போகமுடியாது. துணை என்ன? ஒரு வாய் ஜலம் குடுக்கக் கூட ஆளில்லை!
பெரியவாளின் நினைவே அவருக்கு மருந்து, உதவி எல்லாம்!
ஆட்டோ, டாக்ஸியில் போக வஸதியும் கிடையாது. ஆனால், அந்த பரம ஏழையான முதியவருக்கு எப்போதும் மனஸ் அடித்துக்கொள்ளும்....
.."அவன்" வர்றதுக்குள்ள, "அவாளை" பாத்துடணும்"......
எவன் வருவதற்குள், எவாளைப் பாத்துடணும்?......
"காலன்" வருவதற்குள் "கால காலனான பெரியவாளை" பார்த்துவிட வேண்டும் !"
இந்த தாபம்... நாளுக்கு நாள் அவர் மனஸில் வளர்ந்ததே தவிர, அது பகல் கனவாகவே இருந்தது.
திடீரென்று ஒருநாள், அவர் வீட்டு வாஸலில் ஏதோ நிழலாடியது.
"காலனோ? அப்பனே! நா..... இன்னும் ஒன்னை தர்ஶனம் பண்ணலியேப்பா! என் ஜன்மா கடைத்தேறணுமே!..."
கண்களைக் கூராக்கி.... "யாரு?" .....என்றார்.
"நாங்க காஞ்சி ஶ்ரீமடத்துலேர்ந்து வரோம் தாத்தா....! ஒங்கள... அழைச்சிண்டு வரச்சொல்லி.... பெரியவா உத்தரவு....."
"காலன் இல்லை! காலஸம்ஹாரமூர்த்தியான பெரியவான்னா.... தூதாளை அனுப்பியிருக்கா!..."
வயோதிகரின் மேனி மட்டுமில்லை, உள்ளிருக்கும் ஆத்மாவே சிலிர்த்தது!
" நா... எனக்குள்ள பேசிண்டது, தவிச்சது, பெரியவாளுக்கு தெரியாதா? அப்பா! க்ருபாளு! நா.... என்ன பெரிய பண்டிதனா? அக்னிஹோத்ரியா? அமைச்சரா? அரஸியல் தலைவரா? எப்பவோ.... தர்ஶனம் பண்ணினப்போ... ஒரு தேங்காயை ஸமர்ப்பிச்சுட்டு, ஒரு நமஸ்காரம் பண்ணினப்போ, இனிமே அத்தனையும் பெரியவாதான்-னு மனஸுல பிடிச்சிண்டது. அவ்ளவ்தான்! அதுக்கு இத்தன... க்ருபையா!"
கண்களில் ஆறாக பெருகும் கண்ணீரை துடைத்து மாளவில்லை...!
ஶ்ரீ மடத்திலிருந்து வந்தவரும், இந்த எளிய பக்தியைக் கண்டு கண்கலங்கினர்.
"மெதுவா.... என் தோளை பிடிச்சிண்டு நடந்து வந்து, கார்ல ஏறிக்கோங்கோ"
பாரிஷதர் சொன்னார்.
இருவரும் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தபோது, பெரியவா காமாக்ஷி கோயிலில் இருந்தார்.
கோவில் வாஸலிலேயே காரை நிறுத்தினார்கள்.
" தாத்தா.... அம்பாளை தர்ஶனம் பண்ணிட்டு போலாமா?"
"இல்லப்பா..... மொதல்ல பெரியவா தர்ஶனம்....! அப்றமா .........."
இதோ! புன்னகையோடு இவருக்காகவே காத்திருக்கும் காஷாயஜோதி......
பெரியவா திருமுன் போய் நின்றார்.
பேச்சே வரவில்லை....
கண்ணீர் பெருக்கெடுத்தது. எத்தனை காலம் தபஸ் பண்ணியிருக்கிறார்!
தாபம்தானே தபஸ்!
இதோ! அவருடைய தபஸ்ஸுக்கு, பகவான் ப்ரத்யக்ஷமாகிவிட்டான்!
பெரியவாளும் எதுவுமே பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இடத்தில் ஏதோ விவரிக்க முடியாத பரவஸமான சூழ்நிலை பரவியது.
ஒரு வழியாக ஸமாளித்துக்கொண்டு பெரியவாளின் பாதகமலங்களுக்கு நமஸ்காரம் பண்ணினார்...
அவருடைய உடல் பல முறை குலுங்கியது.
ஐந்து நிமிஷமாயிற்று............
பத்மபாதங்களில் விழுந்து நமஸ்கரித்தவர், எழுந்திருக்கவேயில்லை!
சுற்றி இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பெரியவாளைப் பார்த்தனர்.
ஒருவர், அவரைத் தூக்கலாம் என்று வந்தார்....
பெரியவா, "வேண்டாம்!" என்று ஸமிக்ஞை செய்துவிட்டு, தன்னுடைய ஒரு காஷாய வஸ்த்ரத்தை எடுத்துக் கொடுத்தார்.....
" அவர் மேல போத்தி விடு"
அவருடைய 'ம்ருதஶரீர'த்தின் மேல் போர்த்த சொன்னார்.
அதற்கும் மேலாக பெரியவாளின் பெருங்கருணை ஒரே பெருக்காக பெருகி,
" இவரோட... தஹன ஸம்ஸ்காரத்தையும் நீங்களே பண்ணிடுங்கோடா..."
ஶ்ரீ மடத்து பணியாளர்களே இறுதி சடங்கு பண்ணும்படி ஆனது.
"மொதல்ல பெரியவா...... அப்றமா......."
பெரியவாளின் தர்ஶனம், அவருக்கு அப்புறமாக இனி எதுவுமே இல்லாமல், எந்த தாயின் கர்ப்பத்திலும் வராதபடி, ஸாக்ஷாத் பெரியவாளிடமிருந்து... இனி பிரியாதபடி கலந்திருக்கும், பரம பாக்யத்தை கொடுத்துவிட்டது!
என்ன பாக்யம்! மஹாமாதாவின் ஶரணகமலங்களில் முக்தி கிடைக்க, அந்த தாத்தா பண்ணின தபஸ் என்ன?
இனிமே அத்தனையும் பெரியவாதான்! ன்னு மனஸில் ஸத்யமாக, ஆழமாகப் பிடித்துக் கொண்டு, ஸதா தாபத்தோடு " பெரியவா! பெரியவா!" என்று ஏங்கியது மட்டுமே!
ஶ்ரீ பரமஹம்ஸர் கூறுவார்....
“கிழக்கு நோக்கி நடப்பவன், மேற்கு நோக்கி நடந்தால், தன் லக்ஷியமான கிழக்கு திசையை விட்டு விலகிப் போகிறான் என்பதே! அதுபோல், இறைவனை நோக்கி செல்பவர்கள், இந்த உலகின் விவகாரங்களில் மனஸை செலுத்துவார்கள் என்றால், அவர்கள் இறை நாட்டத்திலிருந்து விலகிப் போகிறார்கள். என்பதே!”
ஶ்ரீ ஆசார்யாள் பாததூளி🙏
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏