Friday 18 January 2019

"பார்வையால் பசுங்கன்றைப் பிழைக்கச் செய்த பரமாசார்யா"

"பார்வையால் பசுங்கன்றைப் பிழைக்கச் செய்த பரமாசார்யா" (ஆறு டாக்டர்களுக்கும் அதை நம்பவே முடியலை. இது தெய்வத்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம் என்று சிலாகிச்சு,சிலிர்த்துச் சொன்னார்கள்)

( "ஸதகோடி காயத்ரீ மஹாமந்திர ஜபம் செய்த மஹான். மகாபெரியவா. பரமேஸ்வரனோட திருவிளையாடல் மாதிரி சாட்சாத் மகேஸ்வர அம்சமான ஆசார்யாளோட எத்தனை எத்தனையோ மகிமைகள்ல இதுவும் ஒண்ணு. இதையெல்லாம் நேர்ல பார்க்கும் பாக்யம் நமக்கு இன்னிக்கு கிடைச்சிருக்கு!" என்பதுதான் -மடத்து சிப்பந்திகள்


நன்றி- குமுதம் லைஃப்-சீதா முரளி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.



கோ தர்சனம் கோடி ஜன்ம சாபல்யம் என்பது சாஸ்திர விதி. அதாவது கார்த்தால கண்விழிச்சு எழுந்ததும், பசுவைப் பார்த்தா, பல ஜன்மத்துப் பாவமும் விலகிவிடும் என்பது ஐதிகம்.

மகாபெரியவாளுக்கு கோமாதாக்கள் மேல் அலாதி ப்ரியம் உண்டு. கோ சம்ரக்ஷ்ணம் பண்றதைப்பத்தி அவர் பேசாத நாளே கிடையாதுன்னு கூட சொல்லலாம். மடத்துல இருக்கிற சமயங்கள்ல தினமும் கார்த்தால அவர் தரிசனம் பண்ணறது கோமாதாவைத்தான் . அதேமாதிரி பல சமயம் பசுக்கள் பராமரிக்கப்படற கொட்டகைல போய் அமர்ந்துண்டுடுவார்.

ஒரு சமயம் மடத்துக் கொட்டில்ல இருந்த பசுக்கள்ல ஒண்ணு நிறைமாத கர்ப்பமா இருந்தது. பேறுகாலம் நெருங்கிட்டதால, பசு வேதனைப்பட்டுக்கொண்டே இருந்தது. குறிப்பிட்ட நாள் கடந்தும் எதனாலயோ அந்தப் பசுவால் கன்றை ஈன்றெடுக்க முடியலை. மூச்சு இரைக்க முனகலும், கத்தலுமா அவஸ்தைப்பட்டது பசு.மடத்துப் பசுக்களைப் பார்த்துக்கற கால்நடை மருத்துவர் வந்தார். அவர் முகத்துல ஒரு கேள்விக்குறி எழுந்தது. இருந்தாலும் வெளீல காட்டிக்காம, மேலும் சில கால்நடை மருத்துவர்களை வரவழைச்சார்.ரொம்பவே அனுபவம் உள்ளவர்களான அந்த டாக்டர்களும் பரிசோதனை பண்ணினாங்க.

ஒருத்தர் ரெண்டுபேர் இல்லை. மொத்தம் ஆறுபேர். பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்துட்டு, பசு ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தை கண்டுபிடிச்சா. அது என்னன்னா, கன்றுக்குட்டி ,பசுவோட வயிற்றுக்குள்ள இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும்.அந்த ஆறு டாக்டர்களும் ஊர்ஜிதமாக இந்த விஷயத்தைச் சொன்னார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டதும் மடத்தோட நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி.பரமபவித்ரமான மடத்துக்குள்ளே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு அப்படிங்கற திகைப்பு.. அது மட்டுமல்லாம, இந்த விஷயத்தை மகா பெரியவாகிட்டே எப்படிப் போய்ச் சொல்வது? யார் போய் சொல்றதுன்னு ஒரே குழப்பம் எல்லாருக்கும்.

இருந்தாலும் இந்த முக்யமான விஷயத்தை அவர்கிட்டே சொல்லாமல் இருக்க முடியாது. அதானால தயங்கித் தயங்கி மெதுவாப்போய் ஆசார்யாளிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.

சொன்னதையெல்லாம் அமைதியாகக் கேட்ட பரமாசார்யா, மெதுவா தன் இருக்கையை விட்டு எழுந்தார். நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார்.கீழே பலகையைப் போடச் சொன்னார்.பசுவுக்கு நேரா அமர்ந்தார்.கண்களை மூடிண்டு தியானத்துல அமர்ந்தார்.

பத்து பதினைஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் கண்ணைத் திறந்தவர் வேற எந்தப் பக்கமும் கவனத்தை திசை திருப்பாம, பரிதாபமா வேதனைப்பட்டுண்டு இருந்த அந்தப் பசுவையே உத்துப் பார்க்க ஆரம்பிச்சார்.

எல்லாரும் பரபரப்பா ஏதோ நடக்கப் போறதுன்னு பார்த்துக் கொண்டு இருந்தார்கள். மகானோட பார்வை,பசுவைத் தவிர வேறு பக்கம் திரும்பவே இல்லை.

கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒரு பக்கம் நின்று, மகானையும் ,பசுவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் .கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சு. இப்படியும் ,அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு சட்டுன்னு ஓர் இடத்தில் நின்றது.

அதேசமயம், அதோட வயித்துல இருந்து மெதுவா,மெதுவா கன்றுக்குட்டி வெளியே வர ஆரம்பிச்சுது. ஒண்ணு ரெண்டு நிமிஷத்துக்குள்ளே ,அழகான கன்றுக்குட்டி வெளியே வந்தது. அதுமட்டுமல்லாம, வெளியே வந்து விழுந்த கன்று அதற்கே உரிய துள்ளலுடன் எழுந்து நின்று, கொஞ்சம் தள்ளாடி தடுமாறி பிறகு நேரா நின்னு, தாய் மடியைத் தேடி, முட்டி,முட்டி பால் குடிக்க ஆரம்பிச்சது.தாய்ப்பசு சந்தோஷமா கன்னுக்குட்டியை நக்கிக் குடுத்தது.

நடந்தை எல்லாரும் ஆச்சரியமா பார்த்துண்டு இருந்த அதே சமயம், ஆறு டாக்டர்களுக்கும் அதிர்ச்சி. இது எப்படி நடந்தது? எப்படி உயிர் வந்தது?

அறிவியலுக்கும் தெரியாத ஆச்சரியத்தோட பார்த்துக் கொண்டிருந்த சமயத்துல, இதெல்லாம் ஒரு ஆச்சரியமும் கிடையாதுங்கற மாதிரி, மெதுவா எழுந்தார். பரமாசார்யா. பசுமாட்டை நெருங்கினார். வாஞ்சையோட அதோட கழுத்தில நன்றாகத் தடவிக் கொடுத்தார். பிறகு எதுவுமே நடக்காத மாதிரி அவர் பாட்டுக்கு உள்ளே போய்விட்டார்.

அந்த ஆறு டாக்டர்களுக்கும் அதை நம்பவே முடியலை. இது தெய்வத்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம் என்று சிலாகிச்சு,சிலிர்த்துச் சொன்னார்கள்.

சிலர் மடத்தோட சிப்பந்திகள்கிட்டே எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்ததுன்னு கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்;

"ஸதகோடி காயத்ரீ மஹாமந்திர ஜபம் செய்த மஹான். மகாபெரியவா. பரமேஸ்வரனோட திருவிளையாடல் மாதிரி சாட்சாத் மகேஸ்வர அம்சமான ஆசார்யாளோட எத்தனை எத்தனையோ மகிமைகள்ல இதுவும் ஒண்ணு. இதையெல்லாம் நேர்ல பார்க்கும் பாக்யம் நமக்கு இன்னிக்கு கிடைச்சிருக்கு!" என்பதுதான்