Monday, 25 March 2019

அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை,

இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை,

மூலவர் : பிரசன்ன வெங்கடேசர்
உற்சவர் : வெங்கடேசப்பெருமாள்
தாயார் : அலர்மேலுமங்கை
தீர்த்தம் : வராக புஷ்கரிணி
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 500 வருடங்களுக்கு முன்
ஊர் : சவுகார்பேட்டை
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:

சித்திரையில் 10 நாட்கள் உடையவர் உற்சவம், வைகாசியில் வரதர் உற்சவம் 10 நாட்கள், ஆடிப்பூரம், புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், ராமநவமி.

தல சிறப்பு:

பெண் கருட வாகனம் இத்தலத்தின் சிறப்பு 

பொது தகவல்:

இத்தலத்தின் விமானம் பத்ம விமானம் எனப்படுகிறது.

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. 

நேர்த்திக்கடன்:

புத்திர பாக்கியம் அடைந்தவர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.. 

தலபெருமை:

சுவாமி தரிசனம் இல்லாத நாள்:

திருப்பதியில் நடக்கும் பூஜை முறையிலேயே இங்கும் பூஜை நடக்கிறது. மூலஸ்தானத்தில் பஞ்ச பேரர்கள் என்னும் ஐந்து பெருமாள் இருக்கின்றனர். சுவாமி திருமார்பில் 108 லட்சுமி திருவுருவம் பொறித்த மாலை அணிந்திருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு பச்சைக் கற்பூரம் சார்த்தி விசேஷ பூஜை நடக்கிறது. இவரது சன்னதி முன்மண்டபத்தில் ரங்கநாதர், காட்சி தருகிறார்.புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் முதல் நாளில் ராமானுஜரும், சக்கரத்தாழ்வாரும் கொடியேற்ற செல்வது விசேஷம். விழாவின் 5ம் நாளில் சுவாமி அணிந்திருக்கும் லட்சுமி மாலையை, தாயாருக்கு அணிவிக்கும் வைபவம் நடக்கிறது. அப்போது, சுவாமியை தரிசிக்க முடியாதபடி சன்னதியை சாத்தி விடுகிறார்கள். பெருமாளை லட்சுமியுடன் மட்டுமே தரிசிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். அன்று இரவில் கருடசேவை நடக்கிறது.பங்குனி உத்திரத்தன்று சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி, அலர்மேலுமங்கை தாயார், ஆண்டாளுடன் சேர்த்தியாக காட்சி தருகிறார்.

தாயார் கருடசேவை:

அலர்மேலு மங்கை தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறார். சுவாமிக்கு அணிவிக்கப்படும் மாலையே, இவருக்கும் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது.வழக்கமான பெருமாள் கோயில்களில் சுவாமி மட்டும் கருடன் மீது எழுந்தருளி சேவை சாதிப்பார். ஆனால் இக்கோயிலில் தாயார், கருடசேவை சாதிக்கிறார்.

கார்த்திகையில் 9 நாட்கள் தாயாருக்கு தீர்த்த உற்சவம் நடக்கிறது.இவ்விழாவின்போது கருட வாகனத்தில் எழுந்தருளி, பிரகாரத்தை சுற்றி வருகிறார். இதற்கென தனியே பெண் கருட வாகனம் இருக்கிறது.

உற்சவர் சிறப்பு:

யோகி லால்தாஸ் அவர்கள் கோவில் கட்டிய பின்பு, சுவாமியை வழிபட்டு வந்தார்.ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் தான் விக்கிரகமாக இருப்பதாக உணர்த்தினார். அதன்படி சிலையை எடுத்த அவர், இங்கு பிரதிஷ்டை செய்தார். புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின்போது இந்த உற்சவரை, பூமிக்கடியில் கிடைத்த இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது இந்த பெருமாளை, "பிறப்பிடம் செல்லும் பெருமாள்' என்று அழைக்கின்றனர்.அங்கு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. வைகாசியில் 3 நாட்கள் சயனபேரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இந்த பூஜை நடக்கும்போது யாரும் பார்க்க முடியாதபடி 7 திரைகளை கட்டி மறைத்து விடுவர். அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு இவரை உற்சவமூர்த்திக்கு அருகில் வைத்து, 7 வகையான கனிகளை நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். அப்போதுதான் இவரை தரிசிக்க முடியும்.

தீர்த்த விசேஷம்:

லட்சுமி நரசிம்மர் மேற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரது திருவடியில் நரசிம்மர் யந்திரம் இருக்கிறது. பொதுவாக கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, கையில் கொடுப்பார்கள். ஆனால் இவரது சன்னதியிலுள்ள தீர்த்தத்ததை பக்தர்கள் மீது தெளிக்கிறார்கள். இதனால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. வரதராஜர், ராமர், வராகர், ஆண்டாள், ரங்கநாதருக்கு சன்னதிகள் இருக்கிறது. திருமங்கையாழ்வார் தனிச்சன்னதியில் மனைவி குமுதவல்லியுடன் காட்சி தருகிறார். கோயில் முகப்பு மண்டபம் தேர் போன்ற அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. வடமொழியில் "பைராகி' என்றால் "சந்நியாசி' என்று பொருள்.சந்நியாசிக்காக பெருமாள் காட்சி தந்த தலமென்பதால் இக்கோயில் "பைராகி வெங்கடேசப்பெருமாள் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.

தல வரலாறு:

பல்லாண்டுகளுக்கு முன்பு லால்தாஸ் என்ற பெருமாள் பக்தர் இப்பகுதியில் வசித்து வந்தார். சந்நியாசியான இவர் தினமும் திருப்பதி பெருமாளை மனதில் நினைத்து வணங்கியபின்பே, பணிகளை துவக்குவார். இவ்வழியாக தலயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தன்னால் இயன்ற சேவை செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.அவருக்கு திருப்பதி சென்று பெருமாளை வணங்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் நீண்டநாட்களாக அந்த ஆசை நிறைவேறவில்லை. நாளடைவில் அந்த ஆசையே ஏக்கமாக மாறியது. அவருக்கு அருள்புரிய எண்ணினார் திருமால். ஒருநாள் இரவில் லால்தாஸின் கனவில் தோன்றிய சுவாமி, தனக்கு அவரது இருப்பிடத்திலேயே கோயில் எழுப்பி வழிபடும்படி கூறினார். மகிழ்ந்த சந்நியாசி, கோயில் கட்ட ஆயத்தமானார். ஆனால், அவரிடம் பணமில்லை. எனவே மக்களிடம், கோயில் கட்ட உதவும்படி கேட்டார். யாரும் பணம் கொடுக்க தயாராக இல்லை. எனவே தனக்கு தெரிந்த வித்தையை பயன்படுத்தி செம்பை, தங்கமாக மாற்றினார். அதை விற்று கிடைத்த பணத்தில் கோவில் கட்டும் பணியை தொடங்கினார். அவரது மகிமையை அறிந்த மக்கள் கோவில் கட்ட பணம் கொடுத்தனர். அதன்பின்பு இவ்விடத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியைப் போலவே சுவாமி சிலை அமைத்து, கோவில் எழுப்பப்பட்டது.
அலர்மேலுமங்கை தாயாருக்கும் சன்னதி அமைக்கப்பட்டது. சுவாமி,

லால்தாஸின் மனதில் பிரசன்னமாக தோன்றி காட்சி கொடுத்தருளினார். பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்றும் பெயர் பெற்றார்.

முகவரி:

அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், பைராகி மடம் ஜெனரல் முத்தையா 6வது தெரு, சவுகார்பேட்டை, சென்னை 600 079. சென்னை

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

இருப்பிடம் :

சென்னை எக்மோரில் இருந்து 14 கி.மீ., சென்ட்ரலில் இருந்து 1 கி.மீ.,
தூரத்தில் சவுகார்பேட்டை உள்ளது. இங்குள்ள ஜெனரல் முத்தையா 6வது தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. யானைக்கவுனி பஸ் ஸ்டாப்பிற்கு சென்று அங்கிருந்து 5 நிமிட நடையில் கோயிலை அடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :

சென்ட்ரல், எக்மோர்

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை மீனம்பாக்கம்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழும் மண்.

ஓம் நமோ நாராயணாய நம: