Wednesday 20 November 2019

சனி மகா பிரதோஷம் சக்திவாய்ந்தது தவறவிடாதீர்கள்.


பிரதோஷம் என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? “ப்ர” என்றால் விசேஷமானது என்று அர்த்தம். “தோஷம்” என்றால் எல்லோரும் அறிந்தது தான். உலகத்தில் உள்ள எல்லா விசேஷமான தோஷங்களையும், நீக்கக்கூடியது தான் இந்த பிரதோஷம். இந்த பிரதோஷ தினத்தன்று சிவனை நினைத்து வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது தான் உண்மை. இந்தப் பிரதோஷ நாளானது ஏன் வந்தது. இந்த தினத்தில் எப்படி விரதமிருக்கலாம். மகா பிரதோஷமான சனிப்பிரதோஷத்தின் சிறப்பு என்ன என்பதைப்பற்றி காண்போமா.



தேவர்கள் நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடலால் மிகவும் துன்பப் பட்டார்கள். தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ள தேவர்கள் கடவுளிடம் செல்ல வில்லை. அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர். அது என்னவென்றால் “பாற்கடலை கடைந்தால் அமிர்தம் வரும். அந்த அமிர்தத்தை குடித்து தங்கள் துன்பத்தை தீர்த்துக் கொள்ளலாம்.” என்று நினைத்து பார் கடலைக் கடைய ஆரம்பித்தனர்.


ஆனால் பாற்கடலில் இருந்து அமிர்தம் வரவில்லை. விஷம் தான் வந்தது. (ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும்போது தான் அந்த ஈசனின் நினைப்பு தேவர்களுக்கு வந்துள்ளது) அந்த விஷம் தேவர்களை துரத்த ஆரம்பித்தது. தேவர்கள் வேறு வழியின்றி கைலாய மலையில் உள்ள ஈசனை வந்து தஞ்சம் அடைந்தனர்.


தேவர்கள் ஈசனிடம் கூறியது என்னவென்றால், “நாங்கள் செய்த விவசாயத்தில் முதலில் கிடைத்தது தங்களுக்கு” என்று நாசுக்காக கூறினர். அப்படி தேவர்கள் கொடுத்த விஷத்தை ஈசன் தனக்காக ஏற்றுக்கொண்ட பிறகு, தேவர்களைப் பார்த்த ஈசன் “இனி பாற்கடலில் வரும் அமிர்தத்தை தேவர்களாகிய நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டார். தேவர்களும் அமிர்தத்தை தேடிப்போய் கடைந்து எடுத்து பருகி விட்டு தங்கள் கஷ்டங்களை எல்லாம் போக்கிக் கொண்டனர்.


அமுதத்தை பருகிய தேவர்கள் அடுத்து என்ன செய்திருக்க வேண்டும். விஷத்தை ஏற்றுக்கொண்டு அமிர்தத்திற்கு வழிகாட்டிய ஈசனுக்கு நன்றி கூறி இருக்க வேண்டுமல்லவா? ஆனால், தேவர்களோ அந்த சமயத்தில் ஈசனை மறந்துவிட்டனர்.எம்பெருமானை மறந்து விட்டோமே என்ற நினைவு தேவர்களுக்கு பிறகு தான் தோன்றியது. பின்பு தான் செய்த தவறை உணர்ந்த தேவர்கள் எம்பெருமானிடம் சென்று மன்னிப்பு கேட்டு, ஈசனுக்கு அபிஷேகம் செய்து, பூஜை செய்து, வழிபட்ட நாள் தான் பிரதோஷ தினம்.


பிரதோஷங்களில் நித்ய பிரதோஷம், பக்ஷ் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் இப்படிப் பல வகைப்பட்ட பிரதோஷங்கள் உள்ளன.சனி பிரதோஷ சிறப்புமாதம் தோறும் திரியோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். சிவபெருமான் ஆறுகால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை என்பதால் இந்த சனி பிரதோஷம் மகா பிரதோஷம் ஆகிறது. இந்த பிரதோஷத்தில் ஈசனையும், சனீஸ்வரனையும் சேர்த்து வழிபடுவதால் இந்த பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு. ஒரு சனிப்பிரதோஷ விரதமானது, ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்திற்கு சமம் என்பது தான் ஆன்மிக நம்பிக்கை. இந்தப் பிரதோஷ காலத்தில் நந்திக்கும் சிவனுக்கும் விளக்கேற்றி வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும். நந்திக்கும் சிவனுக்கும் திராட்சை மாலை வில்வ மாலை அணிவிப்பது இன்னும் சிறந்தது.


மகா பிரதோஷத்தில் ஈசனை வழிபடும்போது இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பிரதோஷத்தில் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பயனை கொடுக்கும்.விரதம் இருக்கும் முறைபிரதோஷ தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு அந்த ஈசனின் நாமத்தை சிறிது நேரம் உச்சரித்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும். பிரதோஷ தினத்தன்று விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மாலை 6 மணி வரை உணவு ஏதும் அருந்தாமல் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. அவரவர் உடல்நிலையைப் பொருத்து விரதத்தை மேற்கொள்ளலாம்.பிரதோஷ நேரமானது மாலை 4.30 மணிக்கு தொடங்குகின்றது. அந்த நேரத்தில் கோவிலுக்கு சென்று நந்திக்கும், சிவனுக்கும் அபிஷேகம் நடைபெறும் போது சிவனை நினைத்து “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை கூறி ஆலயத்தில் சிவனை வழிபட வேண்டும்.


நந்தியின் இரண்டு கொம்பிற்கும் இடையே சிவபெருமான் எழுந்தருளி நடனமாடும் நேரம் தான் இந்த பிரதோஷ காலம். நாம் சிவபெருமானை, பிரதோஷ காலத்தில் நந்தியின் இரண்டு கொம்பிற்க்கும் இடையே பார்த்து தரிசிப்பது சிறப்பானது. இந்த பிரதோஷ கால விரதமானது நம் வாழ்விற்கு அனைத்து விதமான நலன்களையும் தேடித்தரும்.

குறிப்பாக கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், நம் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். மாலை 6 மணிக்கு கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு நம் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வரும் மகா பிரதோஷ தினத்தன்று, எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த சிவபெருமானே பிரதோஷ காலத்தில் வழிபடுவோம்.