Wednesday 20 November 2019

கருவறை குகை அமைப்பில் குகநாதீஸ்வரர் கோயில்

கருவறை குகை அமைப்பில் குகநாதீஸ்வரர் கோயில்

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே குகநாதீஸ்வரர் கோயில் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி சென்று அம்மனைத் தரிசித்து விட்டு கோயிலுக்கு வரலாம். கோயிலைப் பார்த்து விட்டு விவேகானந்தபுரம் செல்லலாம். வாகனங்களைக் கோயிலருகே நிறுத்த முடியும். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மரங்களும், செடிகொடிகளும் நிறைந்த அழகிய சூழலில் அமைந்திருக்கும் இக்கோயில் பற்றிய பழம் கதை கன்னியாகுமரி பகவதி அம்மன் தலபுராணத்தில் உள்ளது. இத்தலபுராணத்தில் இக்கோயில் இறைவன் கோனாண்டேஸ்வரன், குகனாண்டேஸ்வரன் எனப்படுகிறான். கருவறை குகைபோல் இருப்பதாலும் சுருங்கிய பிரகாரம் இருப்பதால் குறை ஈஸ்வரன் எனப்பட்டான் அதனால் குகனாண்டேஸ்வரன் ஆனான். கன்னியாகுமரித் தலபுராண ஆசிரியர் குகனாகிய முருகன் தந்தை ஈசனை வழிபட்ட இடம் இது எனக்கூறுகிறார்.
இந்த கோயில் கருவறை அர்த்த மண்டபம், முகமண்டபம், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்னும் அமைப்பை உடையது. கோயிலின் முன் சிறிய தோட்டம் உண்டு. கோயிலைச் சுற்றி மதில் உண்டு. சோழர்காலப்பணி கட்டுமானம், ரதம் போன்ற தோற்றம், நாகர்கோவில் சோழபுரம் கோயிலைப் போன்ற அமைப்புடையது. விமானம் நாகர அமைப்பு, பிற்காலம் கதை. மூலவர் லிங்க வடிவம். கல்வெட்டில் இவர் திருப்ெபாந்தீஸ்வரமுடையார் எனப்படுகிறார்.

இந்த கோயிலில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், கஜலட்சுமி, வள்ளி, தெய்வானை சமேத முருகன், துர்க்கை, நவக்கிரகங்கள், காலபைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர். இக்கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டவை. இக்கோயிலில் 16 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழைய கல்வெட்டுகள் முதல் ராஜேந்திரன்(கி.பி 1038, 1042), இரண்டாம் ராஜேந்திரன் (1057), முதலாம் ராஜாதிராஜன் ஆகிய அரசர்களின் காலத்தவை. ஒரு கல்வெட்டு கோயில் இறைவனை ராஜராஜபாண்டிநாட்டு உத்தரசோழ வளநாட்டுப் புறத்தாய நாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வரமுடையார் எனக் கூறும். இக்கல்வெட்டுகளின் படி 10ம் நூற்றாண்டுக்கு முன்பே இது வழிபாட்டு கோயிலாக இருந்தது என்று தெரிகிறது. பிற்கால சோழரின் ஆரம்பத்தில் இது கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. குகநாதீஸ்வரர் கோயிலுக்குத் தென்கீழ் மூலையில் வேதியன் சாத்தருக்குக் கோயில் இருக்கிறது. இதன் தெற்கே ஒரு சாலை இருந்தது. இது 862 வரை முற்காலப் பாண்டியபுரம் பேணப்பட்டு வந்தது. முதல் ராஜராஜன் இதைக் கைப்பற்றி விரிவுபடுத்தினான். இது ராஜராஜப் பெருஞ்சாலை எனப்பட்டது. இங்கு வேதங்கள் கற்பிக்கப்பட்டன. இந்த கோயிலில் காலை 5.30 மணி நடைதிறப்பு, 7, 11 மணிக்கு தீபாராதனை, பகல் 12 மணிக்கு நடை சார்த்துதல், மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு நடை சார்த்துதல் நடக்கிறது.