Friday 10 January 2020

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்



காமேச பத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா

ஸாக்ஷாத் ஈச்வரன் அம்பாளுக்கு மங்கல்ய தாரணம் செய்தான் அல்லவா?

"விவாஹ வ்யாநத்த ப்ரகுண குண-ஸங்க்யா ப்ரதிபுவ:"

“விவாஹ வ்யாநத்த”: விவாஹத்தில் கட்டப்பட்டது. அந்த மங்கள ஸூத்ரம் எப்படிப்பட்டது? ; “குண-ஸங்க்யா” – குணங்களின் என்ணிக்கையைக் கொண்டது; “ப்ரகுண” – உயர்ந்த குணத்தைக் கொண்டது.”

மங்கள ஸூத்ரம் குணங்களின் எண்ணிக்கை கொண்டது, உயர்ந்த குணம் கொண்டது என்றால் ஒன்றும் புரியவில்லையே! குணங்களின் எண்ணிக்கை என்னும்போது ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றைச் சொல்கிறார். மறுபடி ‘ப்ரகுணம்’ என்கிறபோது ‘குணம்’ என்றால் ‘நூலிழை’ என்று அர்த்தம்.

‘ப்ரகுணம்’ என்றால் முக்யம் வாய்ந்த நூலிழை; ஸாதாரண நூலாயில்லாமல் மங்கள ஸூத்ரமாக இருப்பது என்று அர்த்தம். அதாவது, குணங்களின் எண்ணிக்கையான மூன்று உயர்ந்த இழைகளை முறுக்கி அம்பாளின் மாங்கல்ய ஸூத்ரம் பண்ணப்பட்டிருக்கிறது என்கிறார்.

அந்த மூன்று இழைகளையும் ஞாபகப்படுத்துவதாக, அவற்றுக்கு உத்தரவாதமாக – “ப்ரதிபுவ:” என்றால் ‘காரண்டி’  (guarantee) கொடுப்பது’ அப்படிப்பட்ட காரண்டியாக – அம்பாளுடைய கழுத்து ரேகை மூன்றும் இருக்கின்றனவாம்! இங்கே முக்குணங்களுக்கும் அவை ரூபகமாக இருப்பதாக இன்னொரு உள்ளர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.

“பாணிக்ரஹணந்தான் விவாஹத்தில் முக்யம். அதுதான் சுத்த வைதிகம். நம் தேசத்தின் ஸகலப் பிராந்தியங்களிலும், ஸகல ஜாதியார் கல்யாணங்களிலும் அதுதான் இருக்கிறது. தாலி கட்டுவது என்பது சில பேருக்கு இல்லை” என்று சொல்கிறவர்கள் சொன்னாலும், ஆசார்யாள் அம்பாளுக்கு ஈச்வரன் மங்கள ஸூத்ரம் கட்டியதாக இங்கே சிறப்பித்துச் சொல்லிவிட்டதால் அதற்கு முக்யத்வம் உண்டாகிவிடுகிறது!

பாணிக்ரஹணம் என்பதில் ஸுமங்கலித்வத்துக்கான பெர்மனெண்ட் அடையாளம் எதுவும் இல்லை. கையைப் பிடித்து, விட்டு விட்டால் அதோடு போகிறது!

“தொங்கத் தொங்கத் தாலியுடன்” என்று மங்கள ஸூத்ரந்தான் ஸுமங்கலித்வத்துக்கு அடையாளமாக என்றைக்கும் இருக்கிறது. ரொம்பவும் பூஜிதம் என்று கார்த்தாலே எழுந்தவுடன் ஸ்திரீகள் அதைக் கண்ணிலே ஒற்றிக் கொள்வார்கள். காரடை நோன்பு என்று மாசி-பங்குனி ஸந்தியிலே அதற்குத்தான் பூஜை நடக்கிறது.

ஸஹஸ்ரநாமத்திலேயும், “காமேச பத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா” [காமேச்வரனால் கட்டப்பட்ட மங்கள ஸூத்ரத்தால் சோபிக்கிற கழுத்தை உடையவள்’] என்று வருகிறது.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 12 / நாமம் 30 – காமேச பத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா

பெரியவா சரணம்!