Saturday, 1 August 2020

தாம்பத்திய தோஷம் நீக்கும் மோகனூர் மோகனன்!

தாம்பத்திய தோஷம் நீக்கும் மோகனூர் மோகனன்!

வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி நதி பாய்ந்தோடும் கொங்கு மண்டலத்தில், பொங்கி வரும் காவிரியின் புதுப் புனலை தனது மோகனப் புன்னகையால் ரசித்தபடி, `ஶ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமணப் பெருமாள்' எனும் திருநாமத்துடன் எம்பெருமான் திருக்காட்சி தரும் தெய்விகத் தலம் மோகனூர்.
புராணக் காலத்தில் `வில்வாரண்ய க்ஷேத்திரம்' என்று பூஜிக்கப்பட்ட இத்தலத்தில், பெருமான் தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் `மோகன அவதாரக் கோலத்தில்' காட்சி தந்ததால், மோகனபுரி என்று போற்றப்பட்டு, தற்போது மோகனூர் என்று வழங்கப்படுகிறது இத்தலம்.

மண்மகளின் மடியில் மாலவன் தரிசனம்
இத்தலத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பருகும் நீர், பார்க்கும் பொருள், தின்னும் வெற்றிலை அனைத்திலும் கண்ணனையே காணும் தவநெறிச் சீலா் ஒருவா் வாழ்ந்து வந்தாா். ஆண்டுதோறும் திருப்பதி பிரம்மோத்ஸவத் தின்போது, ஆதிக்கும் ஆதியாய் விளங்கும் வேங்கடவனைக் கண்குளிர தரிசித்து வருவதைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்தாா் இந்த அடியார். இவருக்கு வயோதிகம் காரணமாக வாதநோய் ஏற்பட, திருமலைக்குச் சென்று வேங்கடவனை தரிசிக்க இயலாத நிலை ஏற்பட்டது.
பச்சைமாமலா் மேனியனைத் துதிக்க முடியாத வாழ்க்கை இனி தனக்கு வேண்டாம் என முடிவு செய்து, கரைபுரண்டோடும் காவிரியில் குதித்து தன் இன்னுயிரை நீக்கத் துணிந்தாா் அம்முதியவா். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மிகப்பெரிய நாகம் ஒன்று அவா் முன் தோன்றி சீற்றத்துடன் விரட்ட ஆரம்பித்தது!



நடக்க முடியாத இப்பெரியவரும் தள்ளாடித் தவழ்ந்த படி இயன்றவரை பின்வாங்கி நகர்ந்தார். அவரது இல்லம் வரை விரட்டி வந்த நாகம், அவா் வீட்டுக்குள் சென்றதும் வநத வழியே திரும்பிவிட்டது. முதியவரோ, களைப்பினால் ஏற்பட்ட அயா்வில் தன்னை மறந்து தூங்கி விட்டாா். அப்போது அவரது கனவில் தோன்றிய திருவேங்கடத்து இன்னமுதன், ``அன்பனே! உன்னால் திருமலை வர இயலாது என்பதால், நானே உம்மை நாடி இங்கு வந்து விட்டேன்” என திருவாய் மலா்ந்து அருளினாா்.



அத்துடன், அருகிலுள்ள புற்றுமண்ணில் மறைந்திருக்கும் தன் திருவுருவச்சிலையைப் பிரதிஷ்டை செய்து, திருக்கோயில் அமைத்து தரிசித்து வரவும் அருள்புரிந்தாா் எம்பெருமான்.






தேவாதி தேவா்களுக்கும் எளிதில் கிட்டாத எம்பெருமானின் தரிசனத்தைப் பெற்றுவிட்ட அந்தப் பெரியவர், விஷயத்தை ஊராரிடம் தெரிவித்தார். அனைவரும் பாம்புப் புற்றுக்குச் சென்று பாா்த்தனா். அங்கு பேரானந்தத்துடன் உதடுகளில் புன்னகை தவழ, மோகன அவதார ரூப லாவண்யத்துடன், ஈரேழு பதினான்கு உலகத்தினரையும் மயக்கும் பேரழகுடன் தரிசனம் அளித்தார் ஶ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமணப் பெருமாள்.

தாம்பத்திய தோஷம் நீக்கும் ஶ்ரீசம்மோஹன கிருஷ்ணன்
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ஒருவரது ஜாதகத்தில் 2, 5, 7, 8-ம் இடப் பொருத்தங்கள் மிகவும் முக்கியமானவை என்பதை ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால், சில ஜாதகா்களுக்கு இந்த இடங் களில் பாவ கிரகங்களின் சேர்க்கை அமைந்து, இல் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது.

இவா்கள் மோகனூா் திருத்தலம் சென்று இங்கு எழுந்தருளியுள்ள ஶ்ரீசம்மோஹன கிருஷ்ணனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், துயரங்கள் நீங்கி தம்பதியினரிடையே மன ஒற்றுமை ஏற்படும்.

ஶ்ரீதன்வந்த்ரி பகவான்
முற்பிறவி வினைகளின் காரணமாக நவகோள்கள் நமக்கு `ரோகம்' எனும் தோஷத்தை ஏற்படுத்துகின்றன. ஶ்ரீதன்வந்த்ரி பகவானைப் பூஜிப்பதால் இத்தகைய தோஷங்கள் விலகும்.

இத்தலத்தில் அருளும் ஶ்ரீதன்வந்த்ரி பகவான் சந்நிதியின் முகமண்டப மேற்கூரையில், நவக்கிரக மூர்த்திகள் அந்தந்த கிரகங்களுக்குரிய மூலிகை விருட்சங்களினால் வடிவமைக்கப் பட்டிருப்பது சிறப்பம்சம்.

ஈடு இணையற்ற தெய்விக சக்தி நிறைந்த இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை, புரட்டாசி மற்றும் மாசி மாதத்தில் அமாவாசையை அடுத்த மூன்று தினங்களிலும் ஆதவன் தன் ஒளிக் கதிர்களால் ஆராதிப்பது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் நிகழ்வாகும்.



`திருமலையில் ஒருநாள்’ வைபவம்!
நவராத்திரி விழாவின்போது வரும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் `திருமலையில் ஒரு நாள்' என்ற சிறப்பான வைபவம், இத்தலத்தில் நடைபெறுகிறது. அன்று, ஆதிபிரானாகிய வேங்கடவன் சேவை சாதிக்கும் திருமலையில் நடைபெறுவது போன்று, அதிகாலை சுப்ரபாத சேவையிலிருந்து இரவு ஏகாந்த சேவை வரை இத்தலத்திலும் சிறப்பாக நடைபெறுகின்றன.

அதேபோல், ஒவ்வொரு வருடமும் ஆனி உத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெறும்.

ஞானத்தைத்தரும் ஶ்ரீலட்சுமி ஹயக்ரீவர்
பிரம்மதேவரின் பத்தினியான ஶ்ரீசரஸ்வதி தேவிக்கு அனைத்து வேதங்களையும் அருளியவா் ஶ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சமான ஶ்ரீஹயக்ரீவர்.

மாணவச் செல்வங்களுக்குப் படிப்பில் கிரகிப்புத்திறன், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை அள்ளித்தரும் மூர்த்தியாக இந்தத் தலத்தில் ஶ்ரீலட்சுமி ஹயக்ரீவப் பெருமான் எழுந்தருளியுள்ளாா். ஒவ்வோர் ஆண்டும் வேதோத்தமர்களைக் கொண்டு, ஶ்ரீசரஸ்வதி தேவிக்கு ஶ்ரீஹயக்ரீவர் உபதேசித்த நிகழ்வைக் கொண்டாடும் விதம், `ஶ்ரீவித்யா மேதா மஹா யக்ஞம்' எனும் வைபவம் மோகனூர் தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

அற்புதமான இந்தத் தலம் நாமக்கல்லிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில், பரம பவித்ரமான காவிரி நதியின் கரையில் அமைந்துள்ளது இத்தலம் (ஆலயத் தொடர்புக்கு: 94429 57143).

பக்தர்களும் பெருமாள் அடியவர்களும் பச்சைமாமலர் மேனியனை, வேதம் போற்றும் ஆதிநாயகனை, ஆகமவிதிகள் தவறாமல் தஙகளின் இரு கண்களாகப் போற்றிக் கொண்டாடும் இந்தத் தலத்துக்கு, நாம் நம் குழந்தைச் செல்வங்களுடன் சென்று வழிபாடு செய்வது அவசியமாகும்.

அதன் மூலம் சிறந்த ஞானத்தையும், மோகனூர் மோகனனின் திருவருளையும், அழியா செல்வ வளத்தையும் பெற்றுச் சிறக்கலாம்.

தாம்பத்திய தோஷம் நீக்கும் சம்மோஹன கிருஷ்ணன் வழிபாடு!
நாராயணன் கண்ணனாகவும் ஶ்ரீமகாலட்சுமி ராதையா கவும் அவதரித்த போது, தம்பதி களுக்கு இடையேயான ஈடு இணையற்ற அன்னியோன்யத்தைக் குறிக்கும் விதமாக `ஶ்ரீசம்மோஹன கோபாலனாக' ஏக ஸ்வரூபத்தில் (இருவரும் ஒன்றே), ஆயர்பாடி ஆய்ச்சியருக்கு தரிசனம் தந்தார்கள்.

அதே கோலத்தில் அருளும் ஶ்ரீசம்மோஹன கோபாலனுக்கு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் தனிச் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. சம்மோஹன கிருஷ்ணனின் தியான ஸ்லோகத் துடன் கூடிய திருவுருவப்படம் இத்தலத்தில் கிடைக்கிறது.

ஶ்ரீசம்மோஹன கோபாலன் படத்தை வாங்கி வந்து, அனுதினமும் நெய் தீபம் ஏற்றிவைத்து மனமுருக வழிபட்டு வந்தால், பிரிந்த தம்பதியர் விரைவில் மனவேற்றுமை நீங்கி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை. மேலும், கோபாலனின் திருவருளால் சகல சந்தோஷங்களும் கிடைக்கும்; வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!