மகாபிரதோஷம்: நந்தி பகவானை வணங்கி நலம்பெற வேண்டிய நாள் இன்று!
பிரதோஷ வழிபாடுகளில் முக்கிய இடம் பிடிப்பவர் நந்தி தேவர். அதிலும் மகாபிரதோஷம் என்றால் சிவாலயங்கள் களைகட்டும். நந்திக்கு விஷேஷ அலங்கார அபிஷேகங்கள் நடைபெறும்.
மாதம்தோறும் இரண்டு பிரதோஷங்கள் வந்தாலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் முக்கியமானது. இதை சனி மகாபிரதோஷம் என்று போற்றுவர். பொதுவாகவே பிரதோஷ வேளையில் செய்யப்படும் நந்தி வழிபாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும். சிவாலயங்களில் இந்த நாளில் நந்திபகவானுக்குப் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.
நந்தி பகவான் சிவபெருமானின் கருணையால் தோன்றியவர். கற்களை மட்டுமே உணவாகக் கொண்டு தவம் செய்த சிலாதர் என்பவர் யாகம் செய்வதற்காக பூமியைத் தோண்டியபோது, ஒரு பொற்பெட்டி கிடைத்தது. அதில் அழகிய குழந்தை ஒன்று இருந்தது. அந்தக் குழந்தையை வீரகன் என்னும் திருநாமம் சூட்டி சிலாதர் வளர்த்துவந்தார். வீரகன் அழகிய இளைஞனாக மாறிவரும் காலத்தில் சிலாதரின் முன்பாகத் தோன்றிய மித்ரன், வருணன் ஆகிய தேவர்கள் வீரகன் விரைவில் மரணமடைவான் என்று கூறி மறைந்தனர். இதைக்கேட்டு சிலாதர் வருத்தமடைந்தார். ஆனால் வீரகனோ, தான் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமானாகிய சிவபெருமானை எண்ணித் தவம் செய்யப் போவதாகக் கூறினார்.
அதே போன்று ஸ்ரீ ருத்ர ஜபத்தை ஏழுகோடிமுறை ஜபம் செய்தார். இளமையில் மனம் கூடி வீரகன் செய்த இந்த ஜபத்தைக் கேட்ட சிவபெருமான் அவருக்குக் காட்சியருளி நந்தி என்று திருநாமமிட்டுத் தன் வாகனமாக ஏற்று, கணங்களுக்கெல்லாம் அவரைத் தலைவராக மாற்றி சாகாவரமளித்தார். சிவபெருமானே ஆசார்யனாக இருந்து அனைத்துக் கலைகளையும் நந்திக்கு அருளிச் செய்தார். பிற்காலத்தில் பூமியில் குருபரம்பரை தொடங்க நந்தியே முதல் காரணமானார்.
இத்தகைய சிறப்புகள் உடைய நந்திபகவானை வணங்க உகந்த தினம் பிரதோஷம். மகாபிரதோஷ தினத்தன்று நந்திக்குக் காப்பரிசி படைத்து வழிபடுவது வழக்கம். தற்காலத்தில் கோயில்கள் சென்று வழிபட முடியாத சூழல் நிலவுவதால், அனைவரும் வீட்டிலேயே சிவபூஜை செய்யவேண்டிய சூழலில் இருக்கிறோம். நந்திபகவான் ருத்ர ஜபம் செய்ததுபோல, ஸ்ரீ ருத்ரத்தின் பொருள் அனைத்தும் பொதிந்த சிவபுராண பாராயணம் செய்வதன் மூலம் சிவனருளையும் நந்திதேவரின் அருளையும் பெறமுடியும். இன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை வீட்டில் அனைவரும் சிவபுராணம் பாடி சிவபெருமானைத் துதித்து இந்த சனிபிரதோஷ தினத்தைக் கடைப்பிடிக்கலாம்.