Saturday 1 August 2020

தென்முக தெய்வம்! - தட்சிணாமூர்த்தி தரிசனம்

தென்முக தெய்வம்! - தட்சிணாமூர்த்தி தரிசனம்


தெற்கு முகம் நோக்குவது ஏன்?
ஞானாசாரியனாக- ஞான திருவடிவாக வழிபடப்படும் சிவ பெருமானின் திருக்கோலமே ஶ்ரீதட்சிணாமூர்த்தி திருவடிவம்.

‘தட்சிணம்’ என்பதற்கும் ‘தென்னன்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கும் தெற்கு, ஞானம், சாமர்த்தியம், ஆற்றல், ஆளுமை, யோகம் மற்றும் வீரம் என்று பல பொருள்கள் உண்டு. இவை யாவற்றையும் உடையவர் ஆதலால் ஶ்ரீதட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர்.

தெற்கு- அழிவைக் குறிப்பது; வடக்கு- அழியாத அமுத வாழ்வைக் குறிப்பது. ஆன்மாக்கள் அமுத வாழ்வை வேண்டி வழிபட ஏதுவாக, இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அமரத் தன்மையை அருளுகிறார். ஆனந்த வடிவினான ஆடல்வல்லானும், சாந்த வடிவினரான ஶ்ரீதட்சிணாமூர்த்தியும் தெற்கு நோக்கியே விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. அஞ்ஞானமாகிய அறியாமையைப் போக்கி ஞானத்தை போதிக்கும் திருவடிவே ஶ்ரீதட்சிணாமூர்த்தி.







சிவனிடத்தில் சக்தி அடங்கிய வடிவம்!
ஆலமர்ச் செல்வனாக- ஆலமரத்தின் அடியில்... சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் மௌனமாக- சொல்லாமல் சொல்லி உபதேசிக்கும் ஞான வடிவம் இது.

சிவனிடத்தில் சக்தி அடங்கிய வடிவமும் இதுவே. ஆம், வெளித் தோற்றத்தில் சலனம் அற்ற சிவ வடிவமாகத் திகழ்ந்தாலும் உள்ளே ஞானமே வடிவான அருட்சக்தி நிறைந்து விளங்கும் சச்சிதானந்த வடிவம் இது.

திருக்கோலத் தத்துவம்...
மோனம் (மௌனம்) நிலை: மோனம் என்பது ஞான வரம்பு. தனது மோனத்தால் நம்மை அழைத்து, திருக்கண் பார்வையிலேயே சிவஞானத்தை தந்தருளும் ஶ்ரீதட்சிணாமூர்த்தியின் வடிவமே பெரும் தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது.

திருமேனி: பளிங்கு போன்ற வெண்ணிறம். இது தூய்மையை உணர்த்தும்.






முயலகனை மிதித்திருக்கும் வலப் பாதம்: ஆணவ மலம் ஆகிய அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் ஆற்றல். அறிவுப் பிழம்பாகிய வடிவம்.

திருக்கரத்தில் உள்ள நூல்: இது சிவஞான போதம். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு திகழ்கிறது. ஞானத்தாலேயே வீடுபேறு கிட்டும். நோயாளி யைக் குணப்படுத்தும் மருத்துவர் மருந்துப் பெட்டியைக் கைக்கொண்டு சுமப்பது போல, உயிர்களை உய்விக்க சிவஞான போதத்தைத் தன் கையில் ஏந்தியுள்ளார் இவர்.

திருக்கரத்தில் ருத்ராட்ச மாலை: இது 36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. இந்த மாலையைக் கொண்டு பஞ்சாட்சரத்தை பன்முறை எண்ணி, பலகாலும் உருவேற்றி தியானிப்பதே, ஞானம் பெறுவதற்கான நெறி என்பதை உணர்த்துகிறது.

சின் முத்திரை ஞானத்தின் அடையாளம். பெரு விரலின் (கட்டை விரலின்) அடிப் பாகத் தைச் சுட்டு விரல் தொட... ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது.

அமிர்தக் கலசம்: அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்லது.

தீ அகல் அல்லது தீச்சுடர்: உயிர்களது பிறவித் தளைகளை (பிறப்பு இறப்பு வட்டத்தை) நீக்கும் பொருட்டு ஈசன் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.



நெற்றிக் கண்: காமனை எரித்த கண்ணுதல்.

ஞானமும் வீடுபேறும் அடைய விரும்புவோர், புலன் அடக்கம் உடையவராகி, ஐம்பொறி களைக் கட்டுப்படுத்துதல் வேண்டும்; இதுவே துறவின் சிறப்பு. இதை உணர்த்துவது.

ஆலமரமும், அதன் நிழலும்: மாயை மற்றும் அதன் காரியமாகிய உலகத்தை உணர்த்துவன.

தென்முகம்: நாம் வடக்கு முகமாக சிவனாரை நோக்கி தியானிக்க வேண்டும் என்பது குறிப்பு.

சூழ்ந்துள்ள விலங்குகள்: பசுபதித்தன்மை. அதாவது அனைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர் என்பதைக் குறிக்கும்.

வெள்விடை: தருமத்தைக் குறிப்பது.

ஆகமங்கள் போற்றும் மூர்த்தங்கள்
ஆகமங்கள், சிற்ப நூல்களில் ஶ்ரீதட்சிணா மூர்த்தியின் பல்வேறு வகைகள் குறிப்பிடப் பெறுகின்றன. ஆகமங்களில் இவரது சக்தி, ‘மேதா ப்ரஞ்யா ப்ரதாயினி’ என்று அழைக்கப் பெறுகிறார்.



ஆகமங்கள் மற்றும் சிற்ப நூல்களில் குறிப்பிடப்படும் ஶ்ரீதட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள்: 
  • ஞான தட்சிணாமூர்த்தி, 
  • யோக தட்சிணா மூர்த்தி, 
  • வீணாதர(கேய) தட்சிணாமூர்த்தி, 
  • மேதா தட்சிணாமூர்த்தி, 
  • வியாக்யான தட்சிணா மூர்த்தி, 
  • வீர தட்சிணாமூர்த்தி, 
  • லட்சுமி தட்சிணாமூர்த்தி. 
  • ராஜ தட்சிணா மூர்த்தி, 
  • கீர்த்தி தட்சிணாமூர்த்தி, 
  • சக்தி தட்சிணா மூர்த்தி, 
  • பிரம்ம தட்சிணாமூர்த்தி, 
  • சுத்த தட்சிணாமூர்த்தி, 
  • திவ்ய தட்சிணாமூர்த்தி.


கேய தட்சிணாமூர்த்தி !

இசை வல்லுனராக, வீணாதர வடிவில் இருப்பவரே வீணாதர தட்சிணாமூர்த்தி.

சிவபெருமான் மீட்டும் வீணையின் நாதமே உயிர்களுக்கு ஆத்ம ஞானத்தை அளிக்கிறது. இவரை ‘கேய தட்சிணாமூர்த்தி’ என்று உத்தர காமிக ஆகமம் கூறுகிறது.

‘கேயம்’ என்பதற்குப் பாடுதல், இசைக்கருவி வாசித்தல் என்றும் பொருள். இந்த வடிவில் முன் இரண்டு கரங்களும் வீணை மீட்டிக் கொண்டிருக்க, பின்னிரு கரங்களில் அட்ச மாலையும், தீ அகலும் உள் ளன.

இவரது இடது கால், ‘உத்குடிகாசன’ அமைப்பு கொண்டதாக இருக்கும்.

சுகர், நாரதர், கந்தர்வர்கள், கின்னரர்கள் ஆகியோருடன் பிராணிகள், விலங்குகள் மற்றும் பூதங்கள் ஆகியனவும் இவரைச் சூழ்ந்திருக்கும்.

இவர் நின்ற அல்லது அமர்ந்த கோலத்திலோ, முனிவர்களால் சூழப்பட்டோ அல்லது அவர்கள் இல்லாமலோ, முயலகன் மீது கால் பதித்தோ அல்லது பதிக்காமலோ ஆல மரத்தின் கீழோ அல்லது ஆலமரமே இல்லாமலோ காட்சி தருவார்.

திருமறைக்காடு (வேதாரண்யம்), நாகலாபுரம், திருப் பாற்றுறை, பெருவேளூர் (மணக்கால் ஐயன்பேட்டை) ஆகிய தலங்களில் இந்த வடிவத்தைக் காணலாம்.

திருப்பூந்துருத்தி- புஷ்பவனேஸ்வரர் கோயிலில் உள்ள வீணாதர தட்சிணாமூர்த்தியை அப்பர் சிறப்பித்துப் பாடி இருக்கிறார்.

திருத்தரும புரத்தில் உள்ள ‘யாழ்மூரிநாதர்’ வடிவம், வீணாதர தட்சிணாமூர்த்தியின் வடிவமே! ரிஷபத்தின் மீது அமர்ந்து வீணை வாசிக்கும் விமலனை திருவலம் மற் றும் அதன் அருகில் உள்ள மேல்பாடி சிம்மேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கண்டு இன்புறலாம்.

நம் சிந்தை மகிழ்விக்கும் சிவவடிவங்களில் ஶ்ரீதட்சிணாமூர்த்தியை தியானித்து வழிபட, ஞானம் ஸித்திக்கும்; குருவருள் கைகூடும்; தோஷங்கள் அனைத்தும் விலகியோடும்.

பாலும் மலர்களும்!
ஒரு முறை குருநானக், புண்ணிய ஸ்தலங் கள் நிறைந்த ஓர் ஊருக்குச் சென்றிருந்தார். யாத்ரீகர்களால் ஊர் நிரம்பி வழிந்தது.

குருக்கள் தங்கும் மடத்துக்குச் சென்று தங்குவதற்கு இடம் கேட்டார் குருநானக்.

மடம் ஏற்கெனவே நிரம்பி வழிந்தது. எனவே, ‘இடம் இல்லை’ என்று குருநானக்கிடம் எப்படிச் சொல்வதென தவித்தார் மடத்தின் தலைமைத் துறவி.

ஆகவே, குருநானக்கிடம் வாயால் சொல்லாமல், ஒரு டம்ளர் நிறைய பாலை வழிய வழியக் கொண்டு வந்து கொடுத்தார். ‘அதாவது மடம் நிரம்பி வழிகிறது, சிறிதும் இடம் இல்லை’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.


குருநானக் புரிந்து கொண்டார். அவர் தன்னிடம் இருந்த மல்லிகை மலர்களை எடுத்து அந்தப் பால் டம்ளரில் போட்டார். பாலில் அவை மென்மையாக மிதந்தனவே தவிர, பால் வழிந்து சிதறவில்லை.

‘தங்குவதற்குச் சிறிது இடம் கொடுத்தாலே போதும்... எந்த விதத்திலும் உங்களுக்குத் தொந்தரவு தர மாட்டேன். நான் மிக எளியவன். அதே நேரம் மல்லிகையின் வாசனையைப் போல புகழ் சேர்ப்பேன்’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார் குருநானக்.

அதைப் புரிந்துகொண்ட தலைமைத் துறவி, குருநானக்கை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.