Wednesday, 2 September 2020

விதுர நீதி - Vithura Neethi - 1

விதுர நீதி

பதிவு – 1🌺

🌲விதுரர் பிறந்த கதை 🌲

மகா பாரதத்திற்கு முந்தைய காலத்தில் ஆணி மாண்டவ்யர் என்ற முனிவர் தனது ஆசிரமத்திற்கு அருகில் உள்ள மரத்தினடியில் அமர்ந்து பேசா நோன்பு (மௌன விரதம்) மேற்கொண்டு இருந்தார் . அந்த நேரத்தில், காவலர்களால் துரத்தப்பட்ட திருடர்கள், தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை மாண்டவ்யரின் ஆசிரமத்தில் மறைத்து வைத்து, தாங்களும் அங்கேயே மறைந்து கொண்டனர். காவலர்கள் ஆசிரமத்தை அடைந்து, திருடர்களைப் பற்றியும், அவர்களின் கொள்ளைப் பொருட்களைப் பற்றியும் மாண்டவியரிடம் கேட்டனர்.





மாண்டவ்யர் மௌன விரதத்தில் இருந்ததால், காவலர்களுக்கு மறுமொழி சொல்லவில்லை. எனவே காவலர்கள் ஆசிரமத்தில் நுழைந்து அங்கு மறைந்திருந்த திருடர்களையும், கொள்ளையடித்த பொருட்களையும், முனிவரையும் இழுத்துக் கொண்டுபோய் மன்னன் முன் நிறுத்தினர். மன்னனின் ஆணைப்படி, திருடர்களுடன் சேர்த்து முனிவரும் கழு மரத்தில் ஏற்றப்பட்டார்.

முனிவர் கழுவிலேற்றப்பட்ட பிறகும், சாகாமல் உயிருடன் இருப்பதைக் காவலர்கள் மூலம் அறிந்த மன்னவன் மாண்டவிய முனிவரிடம் மன்னிப்பு கோரினார்.மன்னனின் ஆணைப்படி, மாண்டவ்யரின உடலுக்கு வெளியே உள்ள கழு மரத்தின் பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்தனர். கழுவின் ஒரு பகுதியை உடலுடன் தாங்கிக் கொண்டே பயணித்த மாண்டவிய முனிவர் ஆணி மாண்டவ்யர் என்ற பெயரால் அறியப்பட்டார்.

பின்னர் ஆணி மாண்டவியர், தர்ம தேவனிடம் ஒரு தவறும் செய்யாத தன்னைக் கழுவில் ஏற்றித் தண்டனை அடைய காரணம் கேட்டார். அதற்கு தர்ம தேவன் , முற்பிறவியில் நீங்கள் சிறுவனாக இருந்த போது, புல்லைக் கொண்டு ஒரு பூச்சியின் பின்புறத்தைத் துளைத்த செயலே, இப்பிறவியில் கழுவில் ஏற்றப்படக் காரணமாயிற்று என்றார்.

குழந்தைகள் செய்யும் தவறுகளைச், சாத்திரங்கள் பாவமாக கொள்ளாது என்று கூறுகையில், சிறு குற்றத்திற்காக என்னைக் கொடுமையாக தண்டித்தபடியால், மனிதர்களில் கீழ்க் குடியில் பிறப்பாய் என தர்ம தேவனுக்கு சாபமிட்டார் ஆணி மாண்டவ்யர். தர்ம தேவனும் அடுத்த பிறவியில் விதுரனாகப் பிறந்தார்.

காசி மன்னனின் மகள்கள் அம்பிகா , அம்பா, அம்பாலிகா ஆகியோர் தங்களுடைய சுயம்வரத்தின்போது அஸ்தினாபுரத்து மன்னன் சாந்தனு மகன் விசித்திர வீரியனுக்கு மணம் செய்வதற்காக பீஷ்மரால் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களில் இருவரை விசித்திரவீரியனுக்கு மணம் முடித்து வைத்தார்.

விசித்திரவீரியன் இறந்து விட்டதால் அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனது முதல் மகனான (கிருஷ்ண த்வைபாயனன்) வியாசரிடம் அம்பிகா மற்றும் அம்பாலிகாவை அனுப்பி வைத்தார். அப்போது அச்சத்தினால் அம்பிகா தனது கண்களை மூடிக்கொண்டதால் அவர்களுக்கு பிறந்த திருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தார். இவரின் புதல்வர்களே கௌரவர்கள் எனப்படுகின்றனர்.

அம்பாலிகாவுக்கு பாண்டு பிறந்தார்.இவரின் புதல்வர்களே பாண்டவர்கள் எனப்பட்டனர்

திருதராஷ்டிரன் குருடனாக பிறந்ததால் இரண்டாம்முறை செல்லுமாறு சத்தியவதி கேட்டுக்கொண்டாள்.இரண்டாம் முறை அம்பிகா செல்லாமல் தனது வேலைக்காரியை அனுப்பினாள். அவர்களுக்கு பிறந்தவரே விதுரன் ஆவார்.

மஹா பாரதத்தில் விதுரர் திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவிக்கு அருகதை அற்றவனாகி இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான்.

தர்ம தேவன் எப்போது எதற்கு திருதராஷ்டிரனுக்கு சமூக நீதி கருத்துக்களை அறிவுரை கூறுகிறான்? அது எவ்வாறு விதுர நீதியாக உருவெடுக்கிறது ? நாளை பார்க்கலாம்