Friday, 26 March 2021

Araikasu Amman Mantra in Tamil | ஸ்ரீ பிரகதாம்பாள் எனும் அரைக்காசு அம்மன் 108 மலர் வழிபாடு

 Araikasu Amman Mantra in Tamil

ஸ்ரீ பிரகதாம்பாள் எனும் அரைக்காசு அம்மன் 108 மலர் வழிபாடு

அன்பின் உருவாம் பிரகதி போற்றி

நின்திரு மலரடி பணிந்தேன் போற்றி

நாவளர் நற்றமிழ் நங்காய் போற்றி

தூமலர் தூவித் துதித்தேன் போற்றி!.. {4}


கரிமா முகனைப் பயந்தாய் போற்றி

அரிபிர மாதியர்க் கரியாய் போற்றி

இளையவன் கந்தனை ஈந்தாய் போற்றி

விளைநலம் எங்கும் விதிப்பாய் போற்றி!..{8}

சுரும்பார் குழலுமை கௌரி போற்றி

வருந்தா வகையெனக் கருள்வாய் போற்றி

மங்கல நாயகி மாமணி போற்றி

எங்கும் நிறைந்திடும் இறைவி போற்றி!..{12}


யாழ்நிகர் மொழியாய் யாமளை போற்றி

சூழ்வினை தீர்க்கும் சூலினி போற்றி

பல்வளை நாயகி பார்ப்பதி போற்றி

நல்வழி அருளும் நாயகி போற்றி!..{16}


போகம் ஆர்த்த பொற்கொடி போற்றி

பாகம் பிரியாய் பராபரை போற்றி

ஐயாற மர்ந்த அறமே போற்றி

ஆனைக் காவின் அம்பிகை போற்றி!..{20}


உலகுயிர் வளர்க்கும் உமையே போற்றி

அலகில் புகழ்நிறை அம்பிகை போற்றி

சிவகாமி எனும் செல்வி போற்றி

நவமா மணியே நாரணி போற்றி!..{24}


கத்துங் கடல்தரு முத்தே போற்றி

நத்தும் நல்லவர் நட்பே போற்றி

கற்றவர்க் கின்பக் கதியே போற்றி

உற்றவர்க் குகந்த நிதியே போற்றி!..{28}


அற்றவர்க்கு ஆரமுது ஆனாய் போற்றி

செற்றவர் செருக்கு சிதைப்பாய் போற்றி

செண்டாடும் விடைச் சிவையே போற்றி

உண்ணா முலையெம் அன்னாய் போற்றி!..{32}


வடிவுடை நங்காய் வாழ்வே போற்றி

கொடியிடைக் கோமள வல்லி போற்றி

மங்கலம் அருளும் மங்கலி போற்றி

சஞ்சலம் தீர்த்திடும் சங்கரி போற்றி!..{36}



 

பாழ்மனம் பதைக்க எழுவாய் போற்றி

சூழ்பகை முடித்துத் தருவாய் போற்றி

யாழ்நகர் வளமுற வருவாய் போற்றி

யாழ்வளர் வளரென அருள்வாய் போற்றி!..{40}


கடம்பவ னத்துறை கயற்கண் போற்றி

கடவூர் வளரும் கற்பகம் போற்றி

அபிராமி எனும் அமுதே போற்றி

மயிலா புரியில் மயிலே போற்றி!..{44}


சிவகதி காட்டும் சுந்தரி போற்றி

பரகதி அருளும் தற்பரை போற்றி

தையல் நாயகித் தாயே போற்றி

வையம் காத்திட வருவாய் போற்றி!..{48}


இமவான் பெற்ற இளங்கிளி போற்றி!..

மலையத் துவசன் மகளே போற்றி

முப்புரம் எரித்த ஏந்திழை போற்றி

முத்தமிழ் வடிவே முதல்வி போற்றி!..{52}


ஒளிக்குள் ஒளியாய் ஒளிர்வாய் போற்றி

வெளிக்குள் வெளியாய் மிளிர்வாய் போற்றி

மண்முதல் ஐம்பெரும் வளமே போற்றி

கண்முதல் களிக்கும் நலமே போற்றி!..{56}


பஞ்சமி பைரவி ரஞ்சனி போற்றி

நஞ்சுமிழ் நாக பூஷணி போற்றி

சும்பநி சும்ப சூதனி போற்றி

சண்டன் முண்ட மர்த்தனி போற்றி!..{60}


சிம்ம வாகினி ஜனனி போற்றி

மகிஷ மர்த்தனி துர்கா போற்றி

நீலி பயங்கரி நின்மலி போற்றி

தாரக மர்த்தனி காளி போற்றி!..{64}



ஆரணி பூரணி காரணி போற்றி

மாலினி சூலினி மதாங்கினி போற்றி

சூளா மணியே சுடரொளி போற்றி

ஆளாம் அடியர்க் கருள்வாய் போற்றி!..{68}


மேலை வினைகடி விமலி போற்றி

வாலை வளந்தரு வராஹி போற்றி

திருவும் அருவும் திகம்பரி போற்றி

பருவரை மருந்தே பகவதி போற்றி!..{72}


வேற்கண் அம்மை மீனாள் போற்றி

நாற்பயன் நல்கும் நங்காய் போற்றி

மாதவர்க் கிளைய மடக்கொடி போற்றி

மாதவர் போற்றும் சிவக்கொடி போற்றி!..{76}


பவளவரை மேற்பசுங் கொடி போற்றி

தவளவெண் நீற்றோன் தலைவி போற்றி

தீபச் சுடரில் திகழ்வாய் போற்றி

பாவத் தீவினை தகர்ப்பாய் போற்றி!..{80}


குழையா அகத்தைக் குழைப்பாய் போற்றி

இழையாய் எம்மை இழைப்பாய் போற்றி

புவனப் பொருளிற் பொருந்தினை போற்றி

பவளக் கனிவாய்ப் பைங்கிளி போற்றி!..{84}


சந்த்ர சடாதரி சாம்பவி போற்றி

சுந்தரி சுலக்ஷண ரூபிணி போற்றி

கலைமகள் பணியும் மலைமகள் போற்றி

அலைமகள் அடிபணி நலமகள் போற்றி!..{88}


திருக்கோ கர்ணத் திருவே போற்றி

ஒருகோடி நலந்தரு வடிவே போற்றி

நான்முக ரூபிணி ப்ராம்ஹணி போற்றி

நாரண ரூபிணி வைஷ்ணவி போற்றி!..{92}


பண்ணின் நேர்மொழிப் பாவாய் போற்றி

கண்ணின் மணியாய்க் காவாய் போற்றி

குமிழ்தா மரைமலர் கொடியிடை போற்றி

தமிழினும் இனிமை திகழ்ந்தாய் போற்றி!..{96}


அற்றார் அழிபசி தீர்த்தருள் போற்றி

உற்றார் உவப்புற சேர்த்தருள் போற்றி

பெய்யும் வளங்களில் இந்திரை போற்றி

வையகம் காத்திடும் வைஷ்ணவி போற்றி!..{100}


புல்லர்கள் போயற புரிகுவை போற்றி

நல்லன நவின்றன நல்குவை போற்றி

குங்குமம் தந்தருள் திருவடி போற்றி

மங்கலம் தந்தருள் மலரடி போற்றி!..{104}


போற்றி நின்பொன்னடி புதுமலர் போற்றி

போற்றி நின்புகழ்நிறை திருவடி போற்றி

போற்றி நின்திருவடி பணிந்தேன் போற்றி

போற்றி பிரகதாம்பிகா போற்றி போற்றி!..{108}