Sunday, 12 November 2017

இந்த பழமொழிக்கு இதுதான் அர்த்தமா?

இந்த பழமொழிக்கு இதுதான் அர்த்தமா?
எறும்பு ஊர கல்லும் தேயும்!
விளக்கம் :


முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்போ நுண்ணியது. கற்களின் வலிமைக்கு முன் எறும்பின் பலம் குறைவானதுதான். ஆனால் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து, தொடர்ந்து பயணிப்பதால் வலிமையான கல்லிலும் தேய்மானம் உண்டாகும். அதுபோலவே தொடர்ந்து முயற்சித்தால் மிகக் கடினமான செயலாக இருந்தாலும் எளிமையாக கூடி வரும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி!
விளக்கம் :


ஆல் என்பது ஆலமரம். வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் துலக்க பல்வளம் சிறக்கும். இப்போது இரண்டாவது அடியான நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்பதில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன. நாலு என்பது நல்லது கெட்டது நாலும் என்றும் இரண்டு என்பது உண்மையான விஷயங்களை பேசுதல் நன்மையான விஷயங்களை பேசுதல் என்பதைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து. மற்றொரு கருத்து நாலு என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கின்றது.

குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா?
விளக்கம் :
எங்கிருந்தாலும் உயர்ந்த விஷயங்கள் உயர்ந்த விஷயங்களாகவே இருக்கும். இடத்தைப் பொருத்து அதன் தன்மையோ, தரமோ மாறாது என்பதற்காக சொல்லப்பட்ட விஷயம்தான் இது. ஆனால் இங்கு சரியாக சொல்லப் போனால் இந்தப் பழமொழியின் வடிவம் குப்பையில் கிடந்தாலும் குன்றி மணி நிறம் போகுமா என்று வரவேண்டும். உச்சரிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பழமொழியின் அந்த குறிப்பிட்ட வார்த்தை வடிவம் மாறி விட்டது. இருப்பினும் குண்டுவோ குன்றியோ இங்கு பழமொழி தரும் விளக்கம் மாறிப்போக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.