Tuesday, 25 August 2015

நாள்தோறும் சொல்ல நவகிரக துதி!

சூரியன்

காசினி இருளை நீக்கும் கதிர்ஒளி வீசி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!

சந்திரன்

அலைகடல் அதனிலிருந்து அன்று வந்து உதித்தபோது
கலைவளர் திங்களாகிக் கடவுளர் எவரும் ஏத்தும்
சிலைநுதல் உமையாள்பங்கன் செஞ்சடைப் பிறையாகி மேரு
மலை வலமாய் வந்த மதியமேபோற்றி!

அங்காரகன்

வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள்நிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி!

புதன்

மதன நூல் முதலாய் நான்கு மறை புகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன் பசு பாரி பாக்கியம் சுகம் பல கொடுக்க வல்லான்
புதன்கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி போற்றி!

குரு

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கு அரசன் மந்திரி,
நறைசொரி கற்பகப் பொன்நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதனம் சிவகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி!

சுக்ரன்

மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்க வான்மழை பெய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன்
தீர்க்க வானவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்கிராச்சாரி பாதபங்கயமே போற்றி

சனிபகவான்


முனிவர்கள் தேவர்கள் ஏழு மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ?
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனியனே உனைத் துதிப்பேன் தமியனேற்கு அருள்செய்வாயே!

ராகு

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர்மொழியாள் பங்கன் பரன் கையால் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!

கேது

பொன்னை இன்னுதிரத்தில் கொண்டோன் புதல்வர்தம் பொருட்டால் ஆழி
தன்னையே கடைந்து முன்னத் தண்அமுது அளிக்கல் உற்ற
பின்னைநின் கரவால் உண்ட பெட்பினில் சிரம்பெற்று உய்ந்தாய்
என்னை ஆள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே!