Thursday, 26 May 2016

வைகுண்ட ஏகாதசி



வைகுண்ட ஏகாதசி

     மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. டிசம்பர்-சனவரி மாதங்களில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
     திரேதாயுகத்தில் முரன் என்ற பெயரில் ஒரு கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களுக்கும், தவ முனிவர்களுக்கும் பல கொடுமைகள் செய்தான். அவனது தொல்லைகளைத் தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அரக்கன் முரனை அழித்து தேவர்களைக் காக்க திருமால் முடிவு செய்து சக்கராயுதத்துடன் முரனுடன் போருக்கு புறப்பாட்டார். அசுரனுக்கும், திருமாலுக்கும் கடும்போர் நடந்தது. ஆண்டவனின் சக்கராயுதத்திற்கு முன் அரக்கன் சக்தியற்றுப் போனான். இருந்தாலும் அவன் பல மாய வடிவங்களில் போர் புரிந்து வந்தான். தினமும் காலையில் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் ஆகும்வரை போர் நடக்கும். தினமும் போர் முடிந்ததும் திருமால் வத்திரிகாசிரமத்தில் உள்ள ஒரு குகைக்கு சென்று இளைப்பாறுவார். பொழுது விடிந்ததும், அரக்கனுடன் போர் புரிய போர்களத்திற்கு செல்வார்.ஒரு நாள் ஆசிரமத்தில் திருமால் படுத்து இருந்த போது அங்கு வந்த முரன், அவரை திடீரென்று தாக்கத் தொடங்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து அரக்கன் முன் வந்து நின்றாள். அழகியைக் கண்டதும் அவளது அழகில் அரக்கன் மயங்கினான். ஆனால் படைக்கலங்களுடன் விசுவரூபத்துடன் தோற்றமளித்த அந்தப் பெண் ஆங்காரத்துடன் அரக்கனை அழித்தாள். இதனால், திருமால் மனம் மகிழ்ந்தார். தமது எதிரில் நின்ற சக்தியை நோக்கி, சக்தியே, அசுரனை அழித்த உனக்கு ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். அரக்கன் முரனை அழித்த இம்மார்கழி மாதத்தில் உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்று கூறினார். திருமால் கொடுத்த வரமே ஏகாதசியின் மகிமைக்கு காரணமாயிற்று. அரக்கனை வென்று சக்தி வெளி வந்த மார்கழி மாதம் பதினோராவது நாளாக இருந்ததால், திருமாலின் சக்திக்கே ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்டது.தேவர்களும், முனிவர்களும் ஏகாதசியன்று விரதம் இருந்து இழந்த தங்களது சக்தியை மீண்டும் பெற்றனர்.

     ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார். அந்த நான்முகனை அழிக்க மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்களைத் தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். பின்னர் நல்லறிவு பெற்ற அவர்கள் திருமாலிடம் “நாங்கள் உம் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்” என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள் “மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் அனுஷ்டிக்க வேண்டும். அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் அர்ச்சாவதாரப் பெருமாளை (விக்ரஹம்) தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கு ஆசி வழங்கினார். அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக திருமால் உறையும் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
     இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
     தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்ற மஹாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு, திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார். அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாக புராணங்களில் கூறப்படுகிறது.
     தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது. ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரம்பத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.

Related Articles :)
Significance of Vaikunta Ekadashi