லலிதா என்றால் விளையாடுபவள்!
லலிதா மகா திரிபுரசுந்தரி, சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்க
முடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல்
தெய்வம் ஏதுமில்லை.
சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா
சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள்
மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள், தந்திரங்கள்,
பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். லலிதா
தேவியின் ஆயிரம் நாமங்களில் திரும்ப வராமல், ஒரு முறை மட்டுமே வரும் பெருமை
கொண்டது லலிதா சகஸ்ரநாமம். லலிதாதேவியின் கட்டளையின் பேரில் வஸினி,
காமேஸ்வரி, அருணா, விமலா,ஜெயினீ, மோதினீ, சர்வேஸ்வரீ, கௌலினி என்ற எட்டு
வாக்தேவதைகளால் (வாக்கை அருள்பவர்கள்) உருவாக்கப்பட்ட இந்த ஸ்லோகம்
பாராயணம், ஹோமம், அர்ச்சனை போன்ற முறைகளில் வழிபடப்படுகிறது.
தேவியின் தலை முதல் பாதம் வரை
லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தில், அன்னை லலிதாதேவி
மகாமேருவில், நகரத்தில், மகாபத்ம வனத்தில்,சிந்தாமணி கிரகத்தில் அனைத்து
கடவுளரையும் தனக்குள் கொண்டவளாக, அதியற்புத அழகுடன், ஆற்றலுடன், அனைவரையும்
அபயம் அளித்துக் காப்பாற்றும் சர்வானந்தமயி தேவி, லலிதா திரிபுர
சுந்தரியாக, மகாசக்தி தேவதையாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக்
கூறப்பட்டுள்ளது. தேவியின் தலை முதல் பாதம் வரை கேசாதிபாத வர்ணனையாக, பஞ்ச
க்ருத்தியங்களான ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்காரம், திரோதானம், அனுக்கிரகம்
இவற்றை, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசிவன் இவர்களின்
தன்மையைத் தன்னுள் கொண்டு தானே பஞ்ச பிரம்ம ரூபிணியாக இந்தப் பிரபஞ்சத்தை
நடத்துவதாக வர்ணிக்கப் படுகிறாள். தேவியின் ஒவ்வொரு நாமமும் தேனாய்
இனிக்கும் பொருள்களைக் கொண்டவை.
பிரம்மாண்ட புராணத்தில், *குடந்தைக்கு அருகிலுள்ள
திருமீயச்சூரில் விஷ்ணுவின் அவதாரமான சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்,
அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளைப் பின்வருமாறு
கூறுகிறார்:*
“தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை
ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்
போக்கும். செல்வத்தைஅளிக்கும். அகால மரணம் ஏற்படாது. நீண்ட ஆயுள் தரும்.
பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்குப் பிள்ளைச் செல்வம் தரும். கங்கை முதலிய
புண்ணிய நதிகளில் முறைப்படி பல தடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப்
பிரதிஷ்டைசெய்தல், க்ரஹண காலத்தில் கங்கைக் கரையில்அசுவமேத யாகம் செய்தல்,
பஞ்சகாலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து
அன்னதானம்செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்த புண்ணியமானது லலிதா
சகஸ்ரநாமப் பாராயணம்.”
அனைத்துக் கடவுளையும் வழிபட்ட புண்ணியம்.
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைத் தவிர வேறு உபாயம்
இக்கலியுகத்தில் இல்லையென்று கருதப்படுகிறது. பவுர்ணமியன்று சந்திர
பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள்
நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின்
நாவில், சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகள் நல்லிணக்கத்திற்கு
வருவார்கள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான் என்று
கூறப்படுவதுண்டு.
இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள்
விலகிவிடும். ஶ்ரீவித்யை போன்று மந்திரமோ, ஶ்ரீ லலிதாம்பிகையைப் போன்று
தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
*''பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம்
செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே
ஶ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின்
அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது”* என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற
பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார். லலிதா சகஸ்ரநாமத்தின்
இன்னொரு சிறப்பு, இதைப் பாராயணம் செய்யும்போது அனைத்துக் கடவுளையும்
வழிபட்ட புண்ணியம் நமக்குச் சேரும்.
ஆடி வெள்ளிகளில் மட்டுமன்றி அனைத்து வெள்ளிக் கிழமை மற்றும்,
தேவிக்கு உகந்த நாட்களில் லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம்
செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறோமோ அது தானாய் வந்து சேரும். தேவி
எப்பொழுதும், எந்த கஷ்டம் வந்தாலும் நம்மைக் கவசமாய் நின்று காப்பாள்.
அன்னை லலிதா திரிபுர சுந்தரியின் அழகிய நாமங்களை அனுதினமும் சொல்வோம். அவள்
அருளைப் பெறுவோம்.