விரயச்சனி
கோசார ரீதியில் சனி பகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலம் விரயச்சனி ஆகும். இதற்கு சனிக்கிழமை தவறாது சனீஸ்வர பகவானை வலம் வர வேண்டும். எள் எண்ணெய் தீபம் ஏற்றினால் நலம். தினசரி காக்கைக்கு அன்னம் இடுவது.இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்ற தான தர்மங்களை செய்து வருவதும் நலம். இது மிகமிக எளிமையானது ஆகும். விரயச்சனி காலத்தில் இதுபோல செய்யலாம்.
`ஜென்மச்சனி'
கோசார ரீதியில் சனிபகவான் சந்திரன் நின்ற ராசி இல்லத்துக்கே வந்து நிற்கும் காலம் `ஜென்மச்சனி' இதற்கு தினசரி அல்லது சனிக்கிழமைகளில் முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய்) விளக்கேற்றி சனி பகவானை வலம் வருவது நலம்.
இந்த காலத்தில் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். ஏழைகளுக்கு கறுப்பு ஆடை தானம் வழங்கலாம். இந்த தானம் அவரவர் ஜென்ம வாரமாகவோ அல்லது ஜென்ம நட்சத்திரமாகவோ இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.
உடலில் பலகீனம், நோய் போன்றவை பீடித்து நீங்காமலிருப்பின் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. அதிலும் சனிப்பிரதோஷ விரதம் இருப்பது மிக மிக சிறப்பு.