Thursday, 29 June 2017

கவலைகள் தீர்ப்பார் கருட பகவான்

மகாவிஷ்ணுவான எம்பெருமானை எத்தனையோ வாகனங்களின் மீது கண்டு தரிசித்திருப்போம். இருப்பினும் எம்பெருமானை கருட வாகனத்தில் கண்டு  சேவிப்பது என்பதுதான் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகும்.

அதற்குக் காரணம் விஷ்ணுவே கருடனாக அவதரித்தது மட்டுமின்றி தாமே  பெரிய திருவடி என்று அன்புடன் அழைக்கப்பெற்ற பாக்யவான். ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் உயர்வாகப் பேசப்படும் சுவாதி நட்சத்திரத்தில்,  ஆவணி சுக்லபட்ச பஞ்சமியில் பிறந்தவர். காஷ்யப முனிவருக்கும் வினதைக்கும் பிறந்தவர். முனிவரின் மற்றொரு மனைவி கத்ரு என்பவள் ஆவாள்.  இவளுக்கு எதிலுமே தானே உயர்ந்தவள் என்னும் மனப்பாங்குண்டு.

இரண்டு பெண்களுக்குள்ளும் ஒற்றுமையும் குறைவு. எனவே கத்ருவானவள் வினதையை எப்படியேனும் வீழ்த்த வழியை யோசித்துக் கொண்டிருந்தாள்.  ஒருவழி தெரிந்தது. பாற்கடலில் தோன்றிய உச்சைச்ரவஸ் என்னும் வெள்ளைக் குதிரையின் மூலம் விளையாட எண்ணி சூழ்ச்சி செய்தாள். உடனே  வினதையை அழைத்து, ‘‘குதிரையைப் பார்! உனக்கு என்ன தோன்றுகிறது’’ என்று கேட்க, வினதை ‘‘மிகவும் அழகாக வெண்மையாய் உள்ளது’’  என்று கூறினாள். கத்ருவோ, ‘‘கிடையாது. வாலில் கருநிறம் உண்டு’’ என அவளைத் தூண்டி பந்தயத்திற்கு அழைத்தாள். அதன்படி யார் தோற்கின்றனரோ அவர்கள்  மற்றவர்க்கு அடிமை என்றாள். தன் நாகப் பிள்ளைகளின் சூழ்ச்சியினால் கத்ரு வெற்றி கண்டாள்.

பந்தயத்தின்படி வினதை கத்ருவிற்கு அடிமையாகி பலவகையில் கஷ்டப்பட்டாள். தாயின் துயரைத் துடைக்க எண்ணி வினதையிடம் மன்றாடினார் கருடன். அவளோ அமிர்தத்தைக் கொண்டு வந்தால் உன் தாயை விடுவிப்பேன் எனக்கூற, கருடன் தந்தையின் ஆசீர்வாதத்தையும் ஆலோசனையையும் பெற்று இந்திரனை வென்று, அமிர்தத்தைப்  பெற்று, அன்னையை விடுவித்தார். ஆழ்வார்கள் இவரைக் கொற்றப்புள், தெய்வப்புள் என பலவகையில் பாடியுள்ளனர். இவரை தரிசிப்பதும், இவரது குரலைக் கேட்பதும் சுப சகுனம் என்பர். கை கூப்பி தொழக் கூடாது. வலது கை மோதிர விரலினால் இரு கன்னங்களையும் மூன்று அல்லது நான்குமுறை தொட்டு கீழ்க்கண்ட ஸ்லோக த்தை கூற அனைத்து நலன்களும் கிட்டும்.

‘‘குங்குமாங்கி தவர்ணாய, குந்தேந்து தவளாயசவிஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பட்சிராஜாயதே நமஹ!’’எல்லா ஆலயங்களிலும் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வானத்தில் வட்டமிடுவதைக் காணலாம். விஷ்ணு ஆலயங்களில் பெரும் விழா நடைபெ றும்போது கொடிமரத்தில், கருடன் படமுள்ள கொடிதான் ஏற்றப்படும். இவரை நினைத்தாலே விஷ ஜந்துகளினால் ஏற்படும் பயமும் பாம்பினால் உண் டாகும் துன்பமும் மறையும். பகவான் அணிந்துள்ள மரகதப் பச்சைக்கு கருடோத்காரம் என்னும் பெயருண்டு. இவரின் நினைவும் வழிபாடும் உள்ள  இடத்தில் என்றும் வெற்றியே உண்டாகும். எனவேதான், ஸ்ரீவேதாந்த தேசிகர் கருடனைக் குறித்து தவம் செய்தார். கருடன் மகிழ்ந்து ஆசீர்வதித்தார்.

இவரின் கருணையினால் ‘கருடபஞ்சாசத்’ ‘கருட தண்டகம்’ எனும் நூலை வடமொழியில் இயற்றினார். திருமலையில் உள்ள ஏழுமலைகளில் ஒன்று கருடாத்ரி கருடாசல பர்வதம் என்பர். காஞ்சிபுரம், சீர்காழிக்கு அருகேயுள்ள திருநாங்கூர் கருட சேவை யாவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கருட பகவானின் அருளைப் பெற கீழே உள்ள காயத்ரியை சொல்லலாம்.

தத்புருஷாய வித்மஹே

ஸுபர்ண பக்ஷாய தீமஹி

தன்னோ கருடப்ரசோதயாத்