Wednesday, 4 October 2017

புரட்டாசி மாத பௌர்ணமியில் லட்சுமி கடாட்சம் பெருக செய்ய வேண்டியது! புரட்டாசி பௌர்ணமி!

புரட்டாசி மாத பௌர்ணமியில் லட்சுமி கடாட்சம் பெருக செய்ய வேண்டியது!
புரட்டாசி பௌர்ணமி!


✴  ஐப்பசி பௌர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பௌர்ணமி திருநாளில் சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் நாளை வரும் புரட்டாசி பௌர்ணமி தினத்தில் (05.10.17), வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் உண்டாகும்.

✴ மேலும் புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தில் விரதமிருந்து வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

புரட்டாசி மாத பௌர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது பலவித பாவங்களைப் போக்கும் என்று புராணக் கதை கூறுகிறது.

✴ கிருச்சமதர் என்ற முனிவர் விநாயகப் பெருமானின் மிகச் சிறந்த பக்தர். அவர் விநாயகப் பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார். அவர் தவம் இருந்ததன் பலனாக விநாயகரை தரிசிக்கும் பெரும் பேறு பெற்றார். விநாயகரிடம் இருந்து பல வரங்களையும் பெற்றுக் கொண்டார். அந்த வரத்தில் ஒன்றுதான், சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத ஒரு மகனை, தன்னுடைய சக்தியால் பெற்றார். அவ்வாறு அவர் பெற்ற மகனின் பெயர் பலி.

✴ கிருச்சமதர் முனிவரைப் போலவே பலியும் விநாயகர் மீது அளவு கடந்த பக்தியைக் கொண்டான். பலியும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான். அதில் மூன்று உலகங்களையும் அடக்கியாளும் வல்லமையை தனக்கு தந்தருள வேண்டும் என்ற வரத்தை பெற்றுக் கொண்டான். மேலும், அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான மூன்று உலோக கோட்டையையும் கொடுத்து அருள் புரிந்தார்.

✴ வரங்களை கொடுத்த பிள்ளையார் பலியை எச்சரிக்கை செய்தார், நான் வழங்கிய வரங்களைக் கொண்டு நீ தவறான பாதையில் சென்றால் சிவபெருமானின் திருக்கரத்தில் உள்ள கணை ஒன்றினால் உன்னுடைய கோட்டைகள் அழியும் என்றார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதியான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.

✴ அவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் பலி என்ற திரிபுரனுடன் போர்தொடுக்க முடிவெடுத்தார். அதற்காக விநாயகர் அந்தணர் வேடமிட்டு பலியிடம் சென்று திருக்கயிலையில் இருக்கும் சிந்தாமணி விநாயகரின் திருவுருவத்தை எனக்கு எடுத்துத் தர வேண்டும் என்று கேட்டார். பலியும் அதற்கு சம்மதம் தெரிவித்து சிவபெருமானிடம் சென்றான். ஆனால் சிவபெருமான் விநாயகர் உருவத்தை தர மறுத்ததுடன், தன்னுடன் போர் புரிந்து அதை எடுத்துச் செல்லும்படி கூறினார். சிவபெருமானுக்கும், திரிபுரனுக்கும் போர் நடந்தது. போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பலியின் மீது சிவ கணை பாய்ந்தது.

✴ திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அவ்வாறு அவன் வீடுபேறடைந்த தினம், புரட்டாசி மாத பௌர்ணமி நாளாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.

✴ புரட்டாசி பௌர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவனை வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பதே புரட்டாசி மாத பௌர்ணமி நாளின் சிறப்பாகும்.