இன்பம், துன்பம் இரண்டையும் ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை பிரகாசிக்கும் !
⭐ வாழ்க்கையில் இன்பங்கள், துன்பங்கள் மாறி மாறி வரும். நமக்கு துன்பம் வரும்போது கடவுள் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிறார் என்று சிலர் நினைப்பது உண்டு. இன்பமும், துன்பமும் நமக்கு மாறி மாறி வருவதற்கு காரணம், கடவுள் வாழ்க்கையின் தத்துவங்களை நமக்கு உணர்த்துகிறார் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். அந்த அர்த்தத்தை எவ்வாறு புரிந்து கொள்வது என்று சிலருக்கு கேள்விகள் எழலாம். இதை சிறு கதை மூலம் உங்களுக்கு தௌpவுபடுத்துகிறோம்.
⭐ வயதான விவசாயி ஒருவர், தன் வயலில் கஷ்டப்பட்டு உழைத்து அதில் வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மகனும் இருந்தான். அத்துடன் விவசாயி ஒரு குதிரையும் வளர்த்து வந்தார். திடீரென்று ஒரு நாள் அந்த குதிரை காணாமல் போய்விட்டது. இச்செய்தியை அறிந்த அக்கம்பக்கத்தினர், விவசாயிடம் வந்து, உங்களுக்கு என்ன ஒரு துரதிர்ஷ்ட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அதற்கு விவசாயி, 'பரவாயில்லை" என ஒரே வார்த்தையில் அவர்களுக்கு பதில் கூறி அனுப்பினார்.
⭐ அடுத்த நாளே, தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்த அக்கம்பக்கத்தினர், விவசாயிடம், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, ஒரு குதிரை போய் இப்பொழுது உனக்கு நான்கு குதிரை கிடைத்திருக்கிறது எனக் கூறினர். அதற்கு விவசாயி 'இருக்கலாம்" என ஒற்றை வார்த்தையில் பதில் கூறினார்.
⭐ சில நாட்கள் சென்றது. விவசாயியின் மகன் ஒரு நாள் குதிரையை வேகமாக ஓட்டிச் சென்றான். அப்பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான். இச்செய்தியை அக்கம்பக்கத்தினர் விவசாயிடம், என்னப்பா! உனக்கு நல்லது நடந்தா? அடுத்தது ஒரு கெட்டதும் நடக்குது? உன் பையன் கால் சரியாக ஆறு மாதம் ஆகும். இப்பொழுது உனக்கு கஷ்டமான நிலை தான் எனக் கூறி பரிதாபப்பட்டனர். அதற்கு விவசாயி 'பரவாயில்லை" என அவர்களுக்கு பதில் கூறி அனுப்பினார்.
⭐ அதன் பின் ஒரு வாரத்தில் நாட்டில் போர் தொடங்கியது. போரில் வீட்டிற்கு ஒரு இளைஞனாவது கலந்துக் கொள்ள வேண்டும் என கட்டளையிடப்பட்டிருந்தது. போர் வீரர்கள் வீட்டிற்கு ஒரு இளைஞனை அழைத்துச் சென்றனர். விவசாயின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் மகனின் கால் உடைந்து இருந்ததால் அவனை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். இதனைக் கண்ட அக்கப்பக்கத்தினர் விவசாயின் அதிர்ஷ்டத்தை கண்டு புகழ்ந்து பேசினர்.
⭐ ஆனால் விவசாயி, தனக்கு நேர்ந்த இன்பத்திலும், துன்பத்திலும் ஒரே மனநிலையில் தான் இருந்தார். அதற்கு காரணம் விவசாயி வாழ்வின் இயல்புகளை புரிந்து கொண்டார்.
தத்துவம் :
⭐ ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு பாடமே. இன்று வரும் துன்பம் நாளை மறைந்து போகும். அதேபோலத் தான் இன்பமும். இன்பமும், துன்பமும் நிரந்தரமற்றது. சந்தோஷமான காலத்தில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. துன்பக் காலத்தில் மற்றவர்களை இகழ்ந்து பேசுதல் கூடாது. இன்பம், துன்பம் இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது.