Wednesday, 4 October 2017

அட அப்படியென்ன இருக்கு இந்த அருகம்புல்ல....!!

அட அப்படியென்ன இருக்கு இந்த அருகம்புல்ல....!!
அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்....!

முழுமுதற் கடவுளான விநாயகருக்கு உகந்தது அருகம்புல் என்பதை எல்லோரும் அறிந்திருப்போம். ஏன் அப்படியென்றால்! விநாயகர் அரக்கன் அனலாசுரனை விழுங்கி விட்டு வெப்பத்தை தாங்க முடியாமல் இருந்த போது, முனிவர் ஒருவர் அருகம்புல்லை கொண்டு வந்து விநாயகரின் தலைமேல் வைத்தார். அருகம்புல்லின் மகத்துவத்தால் அவரது எரிச்சலும் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகிவிட்டான். ஆகவே தான் அவரின் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பெறுகிறது.

இதுமட்டுமல்ல சாணத்தில் சாதாரணமாக இரு நாட்களில் புழுக்கள் உருவாகிவிடும். ஆனால் மங்கள நிகழ்ச்சிகளில் அருகம்புல் சொருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பு+ச்சிகள் உருவாகுவதில்லை.

அதேபோல அவருக்கு பிரியமான அருகம்புல்லும் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பல வினைகளை வேரறுக்க வல்லது என்று சொன்னால் அது மிகையில்லை. இப்படிபட்ட அதிசய மருத்துவ குணங்கள் கொண்ட புல்லின் மன்னன் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும்.

சிறப்புகள் :

🌾 அருகம்புல் பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகளை தாவரம் முழுவதிலும் கொண்டுள்ளது. இது ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும்.

🌾 உடல் வெப்பத்தை அகற்றி, சிறுநீரைப் பெருக்கும், உடலைப் பலப்படுத்தும், குடல் புண்களை ஆற்றும்.

🌾 அருகு, பதம், தூர்வை, மேகாரி ஆகிய தமிழ்ப் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு.

அருகம்புல்லின் பயன்கள் :

🌾 அருகம்புல்லுக்கு பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. அருகம்புல்லில் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் உள்ள பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

🌾 நல்ல தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, சுத்தமாக நீரில் கழுவி, நன்றாக அரைத்து பசும்பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி, இரவில் படுக்கச் செல்லும் முன் சாப்பிட்டு வந்தால், பலவீனமான உடல் நன்கு தேறி, நல்ல பலம் பெறும். வளரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்துப் பெற இதே முறையைக் கையாளலாம்.

🌾 உடலின் இரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு உதவியாக உள்ளது. மேலும் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், இரத்தச் சோகை, இரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.

🌾 வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வரலாம்.

🌾 நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது. நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

🌾 சொறி, சிரங்கு, வெண் புள்ளி, தேமல், அரிப்பு, விஷக்கடி போன்ற தோல் வியாதிகளுக்கு அருகம்புல் மிகச்சிறந்த மருந்து.

🌾 அருகம்புல் சாறு பருகினால் சர்க்கரை நோயால் ஏற்படும் கால் எரிச்சல், முழங்கால் வலி, உடல் சோர்வு, கை கால் நடுக்கம் போன்றவை படிப்படியாக குறையும். அருகம்புல்லில் வைட்டமின்-ஏ, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து இருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

🌾 ஞாபக சக்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் உண்டாகும் மன உளைச்சல் மற்றும் மன இறுக்கத்தை நீக்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.