Wednesday, 4 October 2017

சந்திர தோஷத்தை போக்கும் திருவோணம் !

சந்திர தோஷத்தை போக்கும் திருவோணம் !



⭐ ஏகாதசியும், திருவோணமும் பெருமாளுக்கு மிகவும் உகந்தது. இந்த நாட்களில் பெருமாளை நினைத்து விரதமிருந்து வேண்டினால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.

⭐ இன்று பெருமாளுக்கு உகந்த ஏகாதசியும், திருவோணமும் ஒன்றாக வந்துள்ளது. அருகில் இருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று பெருமாளின் அனுகிரகத்தை பெறுவோம்.

ஏகாதசி :

⭐ ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாக 'திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.

ஏகாதசி விரதம் :

⭐ ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிட வேண்டும்.

⭐ ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது. அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

⭐ அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது.

⭐ இரவு முழுவதும் கண்விழித்து புராண நு}ல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

திருவோணம் :


⭐ திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் மேற்கொள்ளும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது.

⭐ நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு" என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்புகள் :

⭐ தோஷங்களில் பலவகையான தோஷங்கள் உள்ளன. அவற்றில் சந்திர தோஷமும் முக்கியமான ஒன்று ஆகும்.

⭐ ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்க வேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

⭐ தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும்.

⭐ எல்லா மாதங்களிலும் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வேண்டி விரதம் இருந்தாலும் ஆவணி திருவோண விரதம் மிக முக்கியமானதாகும்.