Sunday, 12 November 2017

சோம்பேறி எப்படி செல்வந்தன் ஆனான்? மீன் தூண்டில்!

சோம்பேறி எப்படி செல்வந்தன் ஆனான்?
மீன் தூண்டில்!




⭐ ஒரு ஊரில் ராமன் என்பவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவர் பிடித்த மீன்களை விற்பதற்காக அருகில் இருக்கும் ஊருக்கு செல்வது வழக்கம்.

⭐ அப்படி ஒருநாள் மீனை விற்பதற்காக அந்த ஊருக்கு செல்லும் வழியில் ஒரு பிச்சைக்காரன் ராமனிடம், தான் சாப்பிட்டு பல நாட்கள் ஆகின்றது, ஏதேனும் உணவு இருந்தால் தாருங்கள் என்று கேட்டான். அவனைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது.

⭐ இரக்கப்பட்ட ராமன் அருகில் இருந்த உணவகத்திற்கு சென்று ஒரு உணவுப் பொட்டலத்தை வாங்கி வந்து கொடுத்து விட்டு மீன் விற்க ஊருக்குள் சென்று விட்டார். அடுத்த நாளும் ராமன் மீன்கள் விற்பதற்காக வழக்கம்போல் அந்த ஊருக்கு புறப்பட்டு சென்றான்.

⭐ மீண்டும் அந்தப் பிச்சைக்காரன் ராமனிடம் வந்து உணவு கேட்டான். இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறாயே? ஆரோக்கியமான உடலை வைத்துக் கொண்டு ஏன் பிச்சை எடுக்கிறாய்? வா என்னுடன் என்று அவனை அழைத்துக் கொண்டு ஏரிக்கரைக்குச் சென்றார். அந்த பிச்சைக்காரன் என்னை ஏன் இந்த கரைக்கு அழைத்து வந்தீர்கள் என்று கேட்டான்.

⭐ அதற்கு ராமன் நான் உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இதோ இந்த தூண்டிலை வைத்துக் கொள். இந்த தூண்டிலை வைத்து மீன் பிடித்து பிழைத்துக் கொள் என்று சொல்லியதுடன் அவனுக்கு மீன் பிடிக்கவும் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

⭐ அதன் பிறகு அந்தப் பிச்சைக்காரன் ராமன் பார்க்கவே இல்லை. பல ஆண்டுகள் சென்றன. ராமன் மீன் விற்க சென்றிருந்த போது அவர் அருகே செல்வந்தர் ஒருவர் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் வந்து இறங்கினார்.

⭐ அவர் கையில் தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய தூண்டில் ஒன்று இருந்தது. அந்த செல்வந்தர் தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய தூண்டிலை எடுத்து ராமனிடம் கொடுத்து என் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

⭐ ராமனுக்கு தான் மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்த அந்த பிச்சைக்காரன் தான் அவர் என்பதை அறிந்து கொண்டார். ராமனுக்கு மிகவும் சந்தோசம்.

⭐ அந்த செல்வந்தர் சோம்பேறியாக, பிச்சைக்காரனாக வாழ்ந்து வந்த என்னை மீன்பிடிக்கக் கற்றுக் கொடுத்து என்னை ஒரு செல்வந்தனாக, மற்றவர் மதிக்கத்தக்கவனாக மாற்றியது தாங்கள் தான். என்னை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு உயர வைத்த உயர்ந்த மனிதர் நீங்கள். உள்ளத்தால் உயர்ந்த மனிதரான உங்களுக்கு என்னுடைய அன்பு பரிசு இது. தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். ராமனும் மன மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

தத்துவம் :


சோம்பேறியாக இல்லாமல் கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.