இப்படி கூட ஏமாற்றுவார்களா?
தன் வினைத் தன்னைச் சுடும் !!
ஒரு எழில் மிகுந்த சோலைகள் உள்ள கிராமத்தில் குப்புசாமி என்பவர் வாழ்ந்து
வந்தார். அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு
முறை முருங்கைக்காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு
ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் நகரத்தின் வரை நடந்து சென்றே,
வாடிக்கையாக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்.
முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை
போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார். குப்புசாமி
கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும்
பிரபலமானது. இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை
கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்!
பல வருடமாக குப்புசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர்
அதை எடை போட்டு பார்த்ததில்லை. குப்புசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி
அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார். அதற்கு காரணம்,
குப்புசாமியின் நேர்மையும், நாணயமும் தான்
ஒரு நாள் குப்புசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான
பொருட்களை வாங்கிச்சென்றார். சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய்
மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க அவருக்காக
மளிகைக்காரர் எடைபோட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது.
அன்று முழுவதும் மளிகைக்காரருக்கு தூக்கமே வரவில்லை. குப்புசாமி மீது
எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை
செய்துவிட்டாரே. இத்தனை வருடங்களாக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான
முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!
அடுத்த முறை குப்புசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில்
இருந்தார் அந்த மளிகைக்காரர். நான்கு நாட்கள் கழித்து குப்புசாமி மிகவும்
சந்தோஷமாக வந்தார்.
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார். கையும், களவுமாக
பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ
என்றார் குப்புசாமி. அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான்
இருந்தது. வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார், பளார் என குப்புசாமியின்
கன்னத்தில் அறைந்தார்.
இத்தனை வருடமா? இப்படித்தான் என்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறாயா?
கிராமத்துக்காரங்க ஏமாற்றமாட்டார்கள் என நம்பிதானே எடை போடாமல் அப்படியே
வாங்கினேன். இப்படி துரோகம் பண்ணிட்டியே, என்று மளிகைக்காரர் கூறினார்.
அய்யா! என்னை மன்னித்துவிடுங்கள். நான் மிகவும் ஏழை, எடைக்கல்லு வாங்குகிற
அளவிற்கு என்னிடம் காசு இல்லை. ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ
பருப்பை ஒரு தட்டிலும், இன்னொரு தட்டில் முருங்கைக்காயையும் வைத்து தான்
எடைபோட்டு கொண்டு வருவேன்.
இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ,
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. தான் செய்த துரோகம்
தனக்கே வந்ததை உணர்ந்தார். இத்தனை வருடங்களாக குப்புசாமியை ஏமாற்ற நினைத்த
மளிகைக்காரரும், அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார்
என்பது தௌpவானது.
தத்துவம் :
இது தான் உலகநியதி. நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும்.
நல்லதை தந்தால் நல்லது வரும், தீமையை தந்தால் தீமை வரும். ஆகவே நல்லதை
மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே செய்வோம்!!
தன் வினைத் தன்னைச் சுடும் !!
தத்துவம் :