ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்!
தமிழ்நாடு அரசு சின்னத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரில் இருக்கும் ஆண்டாள் கோவிலின் கோபுரம்தான் இடம் பெற்றுள்ளது. இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். ஸ்ரீஆண்டாளின் திருப்பாவையில்லாமல் எந்தவொரு திவ்ய தேசத்திலும் பூஜைகள் நடைபெறுவது கிடையாது என்பது ஸ்ரீஆண்டாளின் தனிச்சிறப்பிற்கு ஒரு வரலாற்று சான்றாகும். இத்திருத்தலம் 'ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய தேர்" என்னும் ஒரு வரலாற்றுச் சிறப்பினையும் பெற்றுள்ளது.
இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர்.
அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிக்கொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதை கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது.
வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.
ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடச் சென்றபோது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி அவரது சகோதரரை காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். வில்லியின் கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார்.
உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைத்து, ஒரு அழகான நகரத்தை உருவாக்கினார். இந்த காரணத்திற்காக, இந்த நகரம் வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது.
மேலும், இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக, ஆண்டாளாக பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது. அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான 'திரு" என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று அழைக்கப்படுகிறது.