'தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாதத்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
தைப்பூசம் :
இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருக்கடவுள் ஆகியோரை வழிபாடு செய்கிறோம்.
சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் தைப்பூசம் என்றும், உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாள் தைப்பூசம் என்றும் கருதப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தை அமாவாசை :
தை அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சியாண காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன.
இவ்வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு, குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி ஆகியவை கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.
ரத சப்தமி :
ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார்.
இந்நாளில் விரதம் மேற்கொள்வதால் ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மேலும் மனக்கவலை, வியாதி ஆகியவற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும் என்றும் கருதப்படுகிறது.
வீரபத்ர வழிபாடு :
வீரபத்ர வழிபாடு என்பது செவ்வாய் தோறும் ஓராண்டு காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஓராண்டு வழிபட முடியாதவர்கள் தை மாத செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது இவ்வழிபாட்டினை கடைபிடிக்கலாம். இவ்வழிபாட்டை மேற்கொள்வதால் நீங்காத தடையும் நீங்கும். தீராத பகைiயும் தீரூம். நவகிரக பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
தை வெள்ளி வழிபாடு :
உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தையில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
தை மாதத்தின் திருவிழாக்களைக் கொண்டாடி, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி இறையருள் கிடைக்கப்பெற்று வளமான வாழ்வு வாழ்வோம்.