Sunday, 5 July 2020

ஆன்மிக செய்திகள் | கோதை, கண்ணனின் பொற்றாமரை பாதத்தை புகழ்ந்துபோற்றும் காரணம் என்ன? - திருப்பாவை 29

கோதை, கண்ணனின் பொற்றாமரை பாதத்தை புகழ்ந்துபோற்றும் காரணம் என்ன? - திருப்பாவை 29


பூமிப்பிராட்டி தன் பிள்ளைகள் மேல் பாசம்கொண்டு ஆண்டாளாய் அவதரித்து, கீதையின் சாரத்தையும் வேதங்களின் உட்பொருளையும் விளக்குமாறு எளிய தமிழ் பாசுரங்களை வழங்கினாள். எல்லோரும் பாடிப் போற்றி நற்கதி அடையவே ஆண்டாள் அழகு தமிழில் இப்படியொரு பாசுரங்களை நமக்கு வழங்கியிருக்கிறாள்.


சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 30-ம் பாடல் பாட அந்தக் கண்ணனின் அருளை நமக்கு வாரிவழங்குவானா என்றபோது நித்திய சாற்றுமுறையில் இரண்டு பாசுரங்களைப் பாடுகின்றனர். ஒன்று, சிற்றஞ்சிறுகாலே என்னும் பாசுரம், இரண்டாவது வங்கக் கடல் கடைந்த என்று தொடங்கும் பாசுரம். தினமுமே நாம் பாடவேண்டிய பாசுரங்கள் இவை.


இந்த உலகத்துப் பொருள்கள் வேண்டிப் பெற்று அனுபவித்து அதனால் நல்வினையும் தீவினையும் உண்டாகி மறுபிறப்பை ஏற்று பிறவிச் சுழலில் சிக்கிக்கொள்வோம். பிறவிப் பெருங்கடலை நீந்திக்கடந்து இறைவனின் திருவடி என்னும் கரையை அடைவதே அனைத்து பக்தர்களின் நோக்கம். ஆனால், அது சாத்தியமாவதில்லை. நாம் மறுபிறவியில்லா நிலையை அடைவதை நாம் மட்டும் மனது வைத்தால் போதாது. அந்த நாராயணனும் திருவுளம் கொள்ள வேண்டும். அவன் நம்மைப் பிறவிச் சுழற்சிக்குள் புக வைத்தால் அதை ஏற்கவும் செய்ய வேண்டும். அவ்வாறு எடுக்கும் பிறவியில் இறைவனை அறியாது மீண்டும் தீவினைகளுக்குள் விழுந்துவிடும் அபாயம் உள்ளது.

அதனால்தான் அடியார்கள் வேண்டும்போது, "பிறவா வரம் வேண்டும். அப்படியே பிறந்தாலும் உன்னை மறவா வரம் வேண்டும்" என்று வேண்டுவார்கள். ஆண்டாள் இத்தனை நாளும் நோன்பிருந்து அவன் தரிசனம் பெற்று அதனால் கிடைக்கும் சன்மானங்களைச் சொல்லி மகிழ்ந்தவள் இப்போது ஞானத்தின் உச்ச நிலையை அடைகிறாள்.


எல்லாம் அவனின் சித்தத்தாலேயே நிகழ்கிறது. அதை ஏற்க முடியுமே தவிர மாற்ற முடியாது. அவனிடம் நாம் நம் வேண்டுதல்களை முன்வைக்கலாமே அன்றி அவையே வேண்டுமென்று சாதிக்க முடியாது. காரணம் அவன் அனைத்தும் அறிந்தவன். எனவே, ஆண்டாள் அவனிடம் பரிபூரண சரணாகதி செய்து வேண்டுகிறாள்.



"கண்ணா, இன்னும் காலைவேளை முழுமையாக முகிழ்ந்துவிடவில்லை. அது தன் பால்யப் பிராயத்திலேயே இருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறுகாலையில் வந்து உன்னை சேவித்து உனது தாமரை போன்ற தங்கமான பாதங்களை நாங்கள் ஏன் பணிந்து கொள்கிறோம் என்பதை நீ அறியமாட்டாயா என்ன...
நாங்கள் எல்லாம் கால்நடைச் செல்வங்களை மேய்த்து அதையே பிழைப்பாகக் கொண்டு வாழ்பவர்கள். நீ எங்கள் குலத்தில் தோன்றியது எங்களுக்கு பாக்கியம். அப்படிப்பட்ட பாக்கியம் கொண்டதன் பலன் நீ எங்களை ஆட்கொண்டு அருள்வதில்தான் இருக்கிறது.


ஒருவேளை நீ எங்களை ஆட்கொண்டருளாமல் விட்டுவிட்டால் நாங்கள் எங்கு போவோம். அதனால்தான் உன்னிடம் பறைபெற்று உன்னைப் பாடித் துதிக்க வந்திருக்கிறோம். 



ஒருவேளை உன் சித்தம் எங்களைப் பிறவி எடுக்கச் செய்வாய் என்றால் அப்போதெல்லாம் நீயும் தவறாது எங்களோடு அவதரி. எப்படி எங்கள் குலத்தில் தோன்றி எங்களுக்கு இந்தப் பிறவியில் உறவானாயோ அதே போன்று வரும் ஏழேழ் பிறவியிலும் அவதரி. நீ உறவாகி அருள்வாய் என்றால் இந்தப் பிறவிச் சுழற்சியும் எங்களுக்கு இனிமையானதாகவே மாறும். அப்போதும் நாங்கள் உனக்கே ஆட்செய்வோம். அவற்றை நீ ஏற்று எங்களுக்குள்ளாக அப்போது எழும் பிற ஆசைகளை விரட்டி எப்போதும் உன்னைச் சிந்தனையில் உடையவர்களாகவே வைத்துக்கொள்" என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.


பக்த ராமதாஸுக்கு மோட்சம் அளிக்க வந்தார் ராமச்சந்திரப்பிரபு. அப்போது, "மோட்சத்தில் கோயில், ஆராதனை, நாமசங்கீர்த்தனம் ஆகியனவெல்லாம் உண்டா..." என்று கேட்டாராம் ராமதாஸ். அதைக் கேட்ட பிரபு, "அது சொர்க்கம். அங்கு வேண்டுவதற்கு எதுவும் இல்லை, எனவே, இவையெல்லாம் இல்லை" என்றாராம். அதற்கு ராமதாஸ் "அப்படியானால் எனக்கு அங்கு வேலையென்ன... உன் நாமசங்கீர்த்தனத்திலும் உயர்ந்த இன்பம் வேறு என்ன இருக்கிறது... நான் இங்கேயே இருந்து என் சூட்சும உடலோடு உன் நாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறேன்" என்றாராம்.

கோதையின் புகழையும் திருப்பாவையின் பெருமையையும் சொல்லும் பாசுரம், 'கோதை பிறந்தஊர்.'
அதில் திருப்பாவையின் பெருமையைக் குறிப்பிடும்போது
'பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு' 

என்று பாடுகிறது. திருப்பாவையை பாடுவது நம்மைப் பரமனடிக்கு இட்டுச் செல்லும். காரணம் கோதையின் திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்தாகும் என்று போற்றுகிறது.

ஆண்டாள், பூமிப்பிராட்டியின் அவதாரம். மானுடர்களின் பாவங்கள் தீர வேத பாராயணம் செய்ய வேண்டும். ஆனால், கலியுகத்தில் வேத பாராயணமும் நலிந்துவருகிறது. வாழ்வில் மேன்மையுற கண்ணன் கீதையை உபதேசித்தான். கீதையையும் பாகவதத்தையும் பாராயணம் செய்வதும் நல்லது. ஆனால், எல்லோராலும் அந்த அளவுக்கு சிரத்தையோடு சொல்ல முடியாது. இதனால் மானுடர்கள் வாழ்வில் பாவம் சூழும். பூமிப்பிராட்டி தன் பிள்ளைகள் மேல் பாசம்கொண்டு ஆண்டாளாய் அவதரித்து, கீதையின் சாரத்தையும் வேதங்களின் உட்பொருளையும் விளக்குமாறு எளிய தமிழ் பாசுரங்களை வழங்கினாள். எல்லோரும் பாடிப் போற்றி நற்கதி அடையவே ஆண்டாள் அழகுதமிழில் இப்படியொரு பாசுரங்களை நமக்கு வழங்கியிருக்கிறாள்.

அதனால்தான் இந்தியா முழுவதுமே திருப்பாவை சாற்றுமுறை செய்யும் வழக்கம் இன்றும் நிலைபெற்றிருக்கிறது. மொழியறியாதவர்களும் அது வேதத்தின் பாகம் என்பதை உணர்ந்து பாடிப் போற்றுகிறார்கள். திருப்பதியில் மார்கழி மாதம் திருப்பாவையே சுப்ரபாதம். இத்தகைய சிறப்புகளையுடைய திருப்பாவை 29 பாடல்கள் நிறைவுற்றன. இவற்றைப் பாடுவதால் என்னபலன் என்பதுபோல ஆண்டாள் நாச்சியார் மற்றுமொரு பாடலைப் பாடுகிறாள்.

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்
கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

கப்பல்கள் ஓடும் கடலை அமிர்தம் வேண்டி தேவர்கள் கடைந்தபோது அவர்களுக்கு உதவிய நாராயணனை, நிலவுபோன்ற குளிர்ந்த அழகுடைய முகத்தை உடையவனை ஆய்ச்சியர்களாகிய நாங்கள் எல்லாம் வந்து பணிந்துகொண்டோம். பறைகொண்டு அவனைப் பாடித் துதிக்கிறோம். அழகிய நகரான இந்த ஶ்ரீவில்லிபுத்தூரில் எப்போதும் உனக்காகத் தாமரை மலர்களைப் பறித்துக்கொண்டும் அவற்றால் மாலைகட்டிக்கொண்டும் இருக்கும் கைகளையுடைய பெரியாழ்வாரின் மகளாகிய ஆண்டாள் பாடிய இந்த அற்புதமான 30 பாசுரங்களையும் தப்பாமல் பாடிப் போற்றினால், மலைபோன்ற தோள்களை உடையவனும் சிவந்த கண்களை உடையவனும் வற்றாத செல்வமான திருமகளையுடையவனுமான அந்தக் கண்ணனின் அருளைப் பெற்று நலமுடன் இந்த உலகில் வாழலாம்" என்று ஆண்டாள் தன் பாசுரங்களுக்கான பலச்ருதியையும் சேர்த்தே பாடிவைத்தாள்.

ஆண்டாள், தமிழின் ஒப்பற்ற பொக்கிஷம். அவள் அருளிய பாசுரங்களை மார்கழி மாதத்தில் மட்டுமல்லாமல் தினமுமே பாடிவர நல்ல அருளும் மொழிவளமும் செல்வமும் நம்மோடு எப்போதும் நிறைந்திருக்கும்.