Wednesday 1 July 2020

ராஜ வாழ்க்கை தரும் வரதராஜ பெருமாள் கோவில்

ராஜ வாழ்க்கை தரும் வரதராஜ பெருமாள் கோவில்









   

























எதுர்மலையில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் உருவாக்கி கொடுத்தார்.  
விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் ஆட்சி செய்தார். அவரது ராயர் வம்சத்து மக்கள் அருகே இருந்த இரண்டு கிராமங்களில் வசித்து வந்தனர். 
எதுர்மலை, பாலை மலை என்பது அந்த கிராமங்களின் பெயர்கள். இரண்டு கிராமங்களுக்கும் இடையே ஒரு பெரிய ஏரி.
நீர் வளமும் நில வளமும் மிக்க திருச்சினாப்பள்ளியின் மீது அந்த கிராம மக்களுக்கு ஒரு கண். 
எனவே அந்த கிராமங்களை விட்டுவிட்டு திருச்சினாப்பள்ளிக்கு அருகே குடிபெயர்ந்தால் என்ன? என்று தோன்றியது.
 
தங்கள் விருப்பத்தை மன்னரிடம் கூற மன்னரும் சம்மதம் கூறி விட்டார்.
தாங்கள் குடியேற திருச்சினாப்பள்ளிக்கு 20 கல் தொலைவில் ஓர் இடத்தை தேர்வு செய்தனர். காட்டுப் பகுதி அது. 
மன்னரின் ஆணையால் அந்தக் காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது. குடியிருப்புக்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டு ராயர் வம்சத்தினர் அங்கே குடியேறினர்.
அந்த இடத்திற்கு தாங்கள் ஏற்கனவே வசித்த இடத்தின் பெயரையே வைத்தனர். தென் பகுதிக்கு பாலை மலை என்றும், வடபகுதிக்கு எதுர்மலை என்றும் பெயர் சூட்டினர். 
ஏரிக்கு இருபுறமும் ஊர்கள் அமைந்திருந்தன. ஊர் மக்கள் வழிபட பாலைமலையில் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தையும், எதுர்மலையில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் மன்னர் உருவாக்கி கொடுத்தார்.
தாங்கள் வாழ்ந்து வந்த ஊரில் இருந்த பெருமாளையே புதிதாக குடியேறிய ஊரில் அமைத்து கொடுத்த மன்னருக்கு குடியேறிய மக்கள் நன்றி கூறினர்.
அவர்களால் பெயர் சூட்டப்பட்ட பாலைமலை என்ற கிராமத்தின் பெயர், நாளடைவில் மருவி ‘பாலையூர்’ என்றும், எதுர்மலை என்ற ஊர் ‘எதுமலை’ என்றும் மாறியது. 
இந்த எதுமலையில் உள்ளதுதான் வரதராஜ பெருமாள் ஆலயம். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கொடி மரம் உள்ளது. 
இதில் ஆஞ்சநேயரின் திருமேனி நம் கண்களை கவரும் வண்ணம் மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது. 
இந்த ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என பக்தர்கள் கூறுகின்றனர். தாமதமாகும் திரு மணம் நடந்தேறவும், குழந்தை பேறு உண்டாகவும், கல்வி ஞானம் பெறவும் இவரை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
அடுத்ததாக கருடாழ்வாரின் சன்னிதி உள்ளது. அதை அடுத்து மகா மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வலது புறம் கிருஷ்ணர், ஆஞ்சநேயர், விஷ்வக்சேனா, பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், 
நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூத்தாழ்வார், திருப்பாணாழ்வார், நாதமுனிகள், எம்பார், 
ராமானுஜர், காளிங்கன் நாகர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன.
அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் கீழ் திசை நோக்கி சேவை சாதிக்கிறார். 
அருகே உற்சவர் திருமேனிகள் உள்ளன. திருச்சுற்றில் தெற்கில் கமலவல்லி தாயார் சன்னிதி உள்ளது. அன்னை கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் முகத்தில் புன்னகையுடன் அருள்பாலிக்கிறாள்.
மணமாகாத கன்னியர் கமலவல்லி தாயாரை வேண்டிக் கொள்ள, அவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். 
மணமானதும் தம்பதியர் சன்னிதிக்கு வந்து புத்தாடை அணிவித்து ஆராதனை செய்து நன்றியை தெரிவிக்கின்றனர்.
மேற்கு திருச்சுற்றில் ஆதி அந்தபிரபுவின் திருமேனி உள்ளது. இத்திருமேனி பாதி விநாயகரையும் பாதி ஆஞ்சநேயரையும் கொண்டதாகும். 
அடுத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். வடக்கில் ஆலய தல விருட்சம் வில்வம் தழைத் தோங்கி வளர்ந்துள்ளது. 
இறைவனின் தேவக் கோட்ட விமான சுவர்களில் ஏராளமான கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. 
ஆஞ்சநேயர், கருடாழ்வார், பெருமாள், பிள்ளையார், நரசிம்மர், அன்னபட்சி, மயில், வேல்முருகன், மச்ச அவதாரம், யானை, வாமன அவதாரம் போன்ற சிற்பங்களின் நேர்த்தி நம்மை வியக்க வைக்கின்றன. 
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது.
சித்ரா பவுர்ணமி புரட்டாசி சனிக்கிழமைகளில் இறைவன் இறைவிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 
இந்து அற நிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த ஆலயம், தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
திருச்சியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மண்ணச்சநல்லூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, எதுமலை கிராமம்.