Wednesday 1 July 2020

அசுவத்தாமன் | மகாபாரதம் | Mahabharata

அசுவத்தாமன்

நமது குழந்தை பருவம் முதலே மகாபாரதம் பற்றிய பல கதைகளை பெற்றோர் சொல்லியும், தொலைக்காட்சி மூலமாகவும் பார்த்தும் கேட்டும் வளர்ந்தவர்கள் நாம். ஒவ்வொருவருக்கும் மகாபாரதத்தில் பிடித்த கதாபாத்திரம் என ஒன்று இருக்கும் ஏன் துரியோதனனை கூட அவன் கர்ணன் மீது கொண்ட நட்பிற்காக பலருக்கு பிடிக்கும். ஆனால் மகாபாரதம் படித்த அனைவருமே வெறுக்கும் ஒரு கதாபாத்திரம் உண்டென்றால் அது அசுவத்தாமான்தான். காரணம் துரியோதனன் கூட செய்ய தயங்கும் ஒரு மாபாதக செயலை அசுவத்தாமன் செய்ததுதான்.







மகாபாரதத்தில் இருந்த மிகசிறந்த வில் வீரர்களில் ஒருவன்தான் இந்த அசுவத்தாமன். பிரம்மாஸ்திரம் பற்றி அறிந்த ஐந்து நபர்களில் அசுவத்தாமனும் ஒருவன். பல சிறப்புகள் இருந்தும், திறமை இருந்தும் அசுவத்தாமன் அனைவராலும் வெறுக்கப்பட காரணம் அவன் சிறுவயது முதலே துரியிதோனனுடன் சேர்ந்து பல அதர்ம செயல்களுக்கு துணைபோனதுதான். துரியோதனன் புரிந்த அனைத்து அநியாயங்களிலும் அசுவத்தாமனின் பங்கு இருந்தது. அப்படிப்பட்ட அசுவத்தாமன் இன்றும் உயிருடன் இருக்க வாய்ப்புகள் உள்ளதாக புராணங்கள் கூறுகிறது. அதற்கு காரணம் ஸ்ரீகிருஷ்ணர் அவனுக்கு அளித்த சாபம்தான் எனவும் புராணங்கள் கூறுகிறது.



அசுவத்தாமன்

அசுவத்தாமன் குரு துரோணாச்சாரியாரின் அன்பு மகனாவான். சிறுவயதிலியே பல திறமைகளை கொண்டிருந்த அசுவத்தாமன் வில்லாற்றலில் அர்ஜுனன் மற்றும் கர்ணனுக்கு இணையானவன். சிறு வயதிலியே துரோணரிடம் அடம்பிடித்து பிரம்மாஸ்திரத்தை பெற்றான். துருபத மன்னனை வெற்றிக்கொண்டு வென்ற ராஜ்ஜியத்தில் [பாதியை துருபதனிடம் கொடுத்துவிட்டு மீதி ராஜ்ஜியத்திற்கு அசுவத்தாமனை மன்னனாக்கினார் துரோணாச்சாரியார். சிறுவயது முதலே சுகபோக வாழ்க்கை மீது ஆசைகொண்ட அசுவத்தாமன் குருகுலத்திலியே துரியோதனனுடன் சேர்ந்து அதர்ம பக்கம் சென்றுவிட்டான். கர்ணனுக்கு அடுத்த இடத்தில் துரியோதனன் அசுவத்தாமனை வைத்திருந்தான். குருசஷேத்திர போரில் இவன் கொன்றவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. கிருஷ்ணரின் சாபத்தால் அசுவத்தாமன் இன்றும் உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது.

துரோணாச்சாரியார்
துரோணாச்சாரியாரின் ஒரே பலவீனம் அசுவத்தாமன்தான். அதனை பயன்படுத்தித்தான் போரில் பாண்டவர்கள் துரோணரை கொன்றனர். துரோணர் செய்த மிகப்பெரிய தவறு அசுவத்தாமன் சிறுவயதிலியே அதர்ம பக்கம் சென்றபோது அவனை தடுக்காதுதான். அதுவே பின்னாளில் அவரின் மரணத்திற்கும், அசுவத்தாமனின் கோரமான முடிவிற்கும் காரணமாய் அமைந்தது. குறிப்பாக அசுவத்தாமனுக்கு பிரம்மாஸ்திரத்தை கற்றுக்கொடுத்தது அவர் செய்த மிகப்பெரிய தவறாகும்.

கிருஷ்ணரின் சாபம்

கிருஷ்ணர் அசுவத்தாமனை எத்தனை யுகமானாலும் சாகாமல் இருக்கும்படி சபித்தார். சாகாவரம் எப்படி சாபமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம்? ஆனால் அசுவத்தாமனுக்கு அது சாபம்தான். அவன் உடல் முழுவதும் குணமடையாத காயங்கள் ஏற்பட்டு எந்நேரமும் இரத்தம் வெளிவந்து கொண்டே இருக்க வேண்டும், அவனுக்கு தங்குமிடமோ. உணவோ யாரும் தர இயலாது, மனிதர்கள் அவனை சேர்த்துக்கொள்ளவே கூடாது என்று கிருஷ்ணர் சாபம் கொடுத்தார்.  

துரியோதனன் வீழ்ச்சி

குருஷேத்திர போரில் கிருஷ்ணருடைய உதவியின் மூலம் அனைத்து மாவீர்களையும் வீழ்த்தி வெற்றியை நெருங்கினர் பாண்டவர்கள். துரியோதனன் மட்டும் தப்பி செல்ல அவனை கண்டுபிடித்து அவனுடன் யுத்தத்தில் ஈடுபட்டனர் பாண்டவர்கள். தன் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனுடன் கதை யுத்தத்தில் ஈடுபட்டான் பீமன். இருவருமே மிகப்பெரிய பலசாலிகள் அதனால் யார் வெல்வார் என்று யாராலும் கூற இயலவில்லை. பீமன் துரியோதனின் தொடைகளை பிளந்து கொல்லுவேன் என சபதமிட்டதை கிருஷ்ணர் பீமனுக்கு நியாபக படுத்த விதிமுறைகளை மீறி துரியோதனின் தொடைகளை தாக்கினான் பீமன். தொடை பிளக்கப்ட்டு உயிருக்கு போராடிய துரியோதனனை அப்படியே துடிக்க விட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர் பாண்டவர்கள்.

அசுவத்தாமன் வாக்கு

துரியோதனன் துடித்து கொண்டிருந்த இடத்திற்கு வந்த அசுவத்தாமன் தன் நண்பன் துடித்துக்கொண்டிருப்பதை பார்த்து கண்ணீர் சிந்தினான். அசுவத்தாமன் தன் நண்பனை காப்பாற்ற முயற்சித்தபோது அதை மறுத்த துரியோதனன் தான் மரணிப்பதற்குள் பாண்டவர்கள் இறந்தார்கள் என்ற செய்தியை கேட்க வேண்டும் என்று கூறினான். தன் நண்பனின் இறுதி ஆசையை நிறைவேத்துவதாக அசுவத்தாமன் வாக்களித்தான்.

இளம் பஞ்சபாண்டவர்கள் வதம்

போர் முடிந்த அன்று இரவு பாண்டவர்கள் தங்கள் குடிலில் தங்கக்கூடாது என்று அவர்களை அங்கிருந்து அழைத்துச்சென்றார் கிருஷ்ணர். ஆனால் அவர்கள் குடிலில் பாண்டவர்களின் மகன்கள் வந்து தூங்கிகொண்டிருந்தனர். அதை அறியாமல் அங்கே வந்த அசுவத்தாமன் அங்கே இருந்த தன் தந்தையை கொன்ற திஷ்டத்துமனையும், உறங்கிக்கொண்டிருந்த இளம் பஞ்சபாண்டவர்களையும் இரக்கமின்றி கொன்றான். அங்கே உறங்கிக்கொண்டிருந்தது பாண்டவர்கள் என நினைத்த அசுவத்தாமன் தன் நண்பனிடம் சென்று பாண்டவர்களை வதைத்துவிட்டேன் என்று மகிழ்ச்சியாக கூறினான். தன் எதிரிகளின் மரண செய்தி கேட்டு மகிழ்ச்சியுடன் உயிர்விட்டான் துரியோதனன்.

அசுவத்தாமனின் தீரா கோபம்

தன் புதல்வர்கள் இறந்த செய்தி கேட்டு துடித்த பாண்டவர்கள் அதற்கு காரணமாய் இருந்த அசுவத்தாமனை கொல்ல தேடினார்கள். அசுவத்தாமனை கொல்ல பாண்டவர்கள் வந்த போது

தான் கொன்றது பாண்டவர்களை இல்லையென்று அறிந்து அதிர்ச்சியடைந்த அசுவத்தாமன் இருப்பினும் பாண்டவர்களின் வாரிசுகளை கொன்றதை நினைத்து மகிழ்ந்தான். ஆனால் அபிமன்யுவின் குழந்தை உத்தரையின் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்ததை அறிந்த அசுவத்தாமன் எவருமே செய்ய இளைய காரியத்தை செய்ய துணிந்தான். உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை கொல்ல பிரம்மாஸ்திரத்தை ஏவினான்.

கிருஷ்ணரின் கோபம்

அதுவரை பொறுமை காத்த கிருஷ்ணன் அசுவத்தாமனின் இச்செயல் கண்டு அவனுக்கு சாகா வரம் என்னும் சாபத்தை தந்தார். அவனின் நெற்றியில் இருந்த திவ்யசக்தியை பறித்துக்கொண்டார். மரணத்தை விட கொடியது உடல் முழுவதும் காயத்துடன் உணவின்றி யாரும் உடனின்றி வாழ்வது. அசுவத்தாமனின் பிரம்மாஸ்திரத்தை தடுத்த கிருஷ்ணர் அந்த குழந்தைக்கு பரீக்ஷித் என்று பெயர் சூட்டினார். தன் புரிந்த தவறுகளை எண்ணியும் தனக்கு கிடைத்த தண்டனை எண்ணியும் அசுவத்தாமன் அலறியது உலகெங்கும் எதிரொலித்தது.

சாகாவரம்

சாகாவரம் என்னும் சாபம் பெற்ற அசுவத்தாமன் உணவின்றியும், உடல் முழுவதும் வழியும் இரத்தத்துடனும் பல ஆண்டுகள் திரிந்தான், கலியுகத்தின் தொடக்கத்தில் அசுவத்தாமன் அரேபிய தீபகற்பத்தை நோக்கி சென்றதாதகா புராண குறிப்புகள் கூறுகிறது. புராணங்களில் அசுவத்தாமன் இமயமலை தொடர்களில் வாழ்ந்து வருவதாகவும், தன் பாவங்களை எண்ணி சிவபெருமானை வழிபட்டு வருவதாகவும் ஒரு குறிப்பு உள்ளது.

ஆதாரங்கள்

மத்திய பிரதேசத்தில் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்கு வந்த ஒருவருக்கு எவ்வளவு மருந்துகள் போட்டாலும் காயம் குணமடையவில்லை. மீண்டும் மீண்டும் காயம் பெருகி கொண்டே போனது, அவர் யார் என விசாரித்த போது நொடியில் அந்த நோயாளி அங்கிருந்து காணாமல் போய்விட்டார். அதே சமயம் இமயமலை காடுகளில் வருடத்திற்ககு ஒருமுறை 12 அடி உள்ள ஒருவர் வந்து உணவுகளையும், நீரையும் சாப்பிட்டு விட்டு வனத்திற்குள் ஓடிவிடுவதாக மக்கள் கூறுகின்றனர். இந்த யுகத்தில் 12 அடிக்கு மனிதன் இருப்பது சாத்தியமில்லாத ஒன்று. அதே சமயம் துவாபர யுகத்தில்தான் மனிதர்கள் 12 அடி வரை இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அசுவத்தாமன் இன்றும் உயிருடன் இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது.