Sunday, 13 September 2020

#ஸ்ரீகிருஷ்ணசரிதம்_19 | Bhakthi Vlog | கிருஷ்ணர் எப்படி சுதாமாவை வரவேற்றார் ? திருக்கதைகள்

 #ஸ்ரீகிருஷ்ணசரிதம்_19


கிருஷ்ணர் எப்படி சுதாமாவை வரவேற்றார் ??



துள்ளிக்குதித்து எழுந்தார் கிருஷ்ணர். ஒரு ஏழை நண்பனைக்  காண அம்பு போல பாய்ந்து நண்பரைக் காணச்சென்றார். சுதாமா ! உம்மைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று ?


 உம்மை மீண்டும் சந்திக்க நான் என்ன தவம் செய்தேனோ ? என் பாக்கியம் தான் என்னே என்று நெக்குருகிப் போன அவர் சுதாமாவை அணைத்தார். அந்த அணைப்பிலேயே சர்வ வறுமையும் அழிந்து போனது. இது எப்படி... 


கிருஷ்ணரின் மார்பில் உறைபவள் அல்லவா மகாலட்சுமி. அவளது பார்வை சுதாமாவின் மேல் பட்டு விட்டது. வறுமை நீங்கி விட்டது. சுதாமாவுடன் வந்தவர்களுக்கம் தனி அறைக்குள் ஒதுக்கப்பட்டு விருந்து உபசாரம் தடபுடலாயிற்று. 


கிருஷ்ணர் சுதாமாவுக்கு தனி மரியாதை செய்தார். சுதாமா ஒரு பிராமணர் என்ற முறையிலே, அவருக்கு பாதபூஜை செய்து, தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். 


ருக்மணியும் அவ்வாறே செய்தாள். பின்னர் தனது பஞ்சணையிலேயே அமரச்சொன்ன கிருஷ்ணர், சுதாமா ! அவந்தியில் இருந்து என்னைக் காண நடந்தே வந்தீரா ! உமது கால்கள் எவ்வளவு வலித்திருக்கும் என்றவராய் அவரது கால்களைபிடித்து விட்டபடியே பேசினார். 


நீண்ட நாள்களுக்கு பிறகு நண்பர்கள் சந்திக்க நேர்ந்தால், பள்ளியில் சக மாணவர்களுடன் செய்த குறும்பு, ஆசிரியருக்கு தெரியாமல் செய்த சேஷ்டைகள், நெகிழ்வான நிகழ்வுகள் என பல விஷயங்களைப் பற்றி பேசத்தானே செய்வோம். கிருஷ்ணர் சுதாமாவுடன் அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவு கூர்ந்தார்.


பின்னர் சுதாமா ! நம் பழைய நினைவுகள் பற்றியே பேசிக்கொண்டிருந்து விட்டேன். வீட்டைப்பற்றி விசாரிக்கவே இல்லை. 

மன்னியார் சவுகரியமாக இருக்கிறாரா ? பிள்ளைகள் கல்விக்கூடம் செல்கிறார்களா ? என்று குசலம் விசாரித்த கையுடன், சுதாமா ! என் மன்னி என் மீது மிகுந்த பாசம் கொண்டவராயிற்றே ! எனக்காக பலகாரம் கொடுத்து அனுப்பியிருப்பாரே ! சுதாமா ! அதைக் கொண்டு வந்துள்ளீரா ? என்றதும், இங்குள்ள செல்வச் செழிப்பைப் பார்த்து அரண்டு போயிருந்த சுதாமா, தன் கிழிந்த அங்கவஸ்திரத்தை மறைத்தார். விடுவாரா மாயக்கண்ணன் ! அதை அப்படியே பறித்து விட்டார். 


அவசர அவசரமாக பொட்டலத்தைப் பிரித்தார். ஒரு பிடி அவலை வாயில் போட்டார். அவல் வாய்க்குள் போனதோ இல்லையோ, அவந்தியிலுள்ள சுதாமா வீடு மட்டுமல்ல.... அவரது ஊரிலுள்ள எல்லா குடிசைகளுமே மாளிகைகளாகி விட்டன. எல்லாருமே செல்வத்தில் திளைத்தனர். இது இங்கிருக்கும் அப்பாவி சுதாமாவுக்கு எப்படி தெரியும் ?


இதற்குள் இன்னொரு பிடி அவலை எடுத்த வாயில் போடச் சென்ற போது, ருக்மணி தடுத்து விட்டாள். ஒரு இனிய கிருஷ்ண பக்தன் தனக்கு கிடைக்கப்போகும் பணத்தால் மனம் மாறி, பக்தியை மறந்து உலக இன்பங்களில் மூழ்கி விடலாம் இல்லையா ? 


அதனால், அதில் இருந்து சுதாமரைக் காப்பாற்றினாளாம் அந்த தேவி ! பின்னர் அங்கிருந்து விடைபெற்றார் சுதாமர். அவர் கிருஷ்ணரிடம் செல்வத்தைக் கேட்கவுமில்லை. அந்த மாயக்கள்ளன் நண்பனின் வறுமையைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தும் அவரும் கேட்கவில்லை. 


ஆனால், நண்பன் கொண்டு வந்த அழுக்குத்துணியில் இருந்த அவலை மட்டும் எடுத்துக்கொண்டார். பிறர் பொருளுக்கு யாரொருவன் ஆசைப்படுகிறானோ, அவன் அவ்வாறு பெற்றதை ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் பறித்து விடுவான். 


சுதாமரின் வாழ்விலும் இதுவே நிகழ்ந்தது. பால்யத்தில், இவர்கள் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கற்றுவந்தபோது, ஒருநாள் முனிவரின் மனைவி, இரண்டு குழந்தைகளையும் அழைத்து, சமையலுக்கு விறகு பொறுக்கிவர அனுப்பினாள். போகும்போது, இருவரும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் எனச் சொல்லி, வெல்லம் கலந்த அவலைக் ஒரே பொட்டலமாகக் கொடுத்தாள். 


விறகு வெட்டிக்கொண்டிருந்த நேரத்தில், பசியெடுக்கவே, குசேலர் பொட்டலத்தைப் பிரித்தார். சாப்பிட்டார். கிருஷ்ணரை அழைத்த அவருக்குரிய பங்கை கொடுத்திருக்க வேண்டாமோ ! ஆசையோ, பசியோ முழுமையாக சாப்பிட்டு விட்டான். 


அன்று கிருஷ்ணர் அதற்காக ஏதும் சொல்லவில்லை. பகவான், உடனே எதையும் தட்டிக் கேட்க மாட்டார். இப்போது அவருடைய நேரம் ! அன்று தர வேண்டிய தனக்குரிய பங்கை எத்தனையோ வருடங்கள் கழித்து, இன்று கட்டாயமாக பெற்றுக் கொண்டார். உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும், அடுத்தவன் பொருளை வலுக்கட்டாயமாக பறித்தால், அவன் இறந்தாலும் சரி... அவனுடைய வம்சத்தில் வருபவனாவது நிச்சயமாக அதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். 


ஒரு வழியாக சுதாமா அவந்தி வந்து சேர்ந்தார்.


அவந்தியில் அவர் மனம் எப்படி இருந்தது ??


நாளை வரை பொறுத்திருங்கள்...


தொடரும்..