Tuesday, 8 September 2020

நாம ரஸம் கிருஷ்ண என்று எப்பொழுதும் சொல்லலாமே !!!!

கலியுக தர்மமான பகவன் நாமத்தை எப்போதெல்லாம் சொல்லலாம்?

நியமங்களே இல்லையாம். எப்போது வேண்டுமானாலும் சொல்லலாமாம்.

நாமம் சொல்வதற்காகத் தனியாக ஒரு நேரம் ஒதுக்க வேண்டியதில்லையாம்.

நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்லவே முடியாதாம். 

அதெப்படி? 

புரந்தரதாஸர் சொல்கிறார்.




நரஜன்ம பந்தாக நாலிகேயிருவாக 

கிருஷ்ணா என பாரதே 

பாரதே! என்று பாரத தேசத்தில் பிறந்த நம்மைத் தான் விளிக்கிறார். அதற்காக மீதி தேசத்திலுள்ளவர்களுக்கெல்லாம் நாமம் கிடையாதா? அவர்களுக்கும் உண்டு. கண்ணெதிரே இருப்பவரைத்தானே அழைத்துச் சொல்லமுடியும்? அதனால் நம்மைக் கூப்பிடுகிறார்.

அரிதிலும் அரிதான மனிதப் பிறவி எடுத்துவிட்டாயல்லவா? அதிலும் பேசும் சக்தி கொண்ட நாக்கு இடுக்கிறதல்லவா? ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே என்று கெஞ்சுகிறார்.

எதற்காகச் சொல்லவேண்டும்?

கிருஷ்ணா எந்தரே ஸகல கஷ்டவு பரிஹார 

கிருஷ்ணா என பாரதே 

உனக்குத்தான் நிறைய கஷ்டங்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கிறதே. ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஒவ்வொரு பரிஹாரம், ஒவ்வொரு தெய்வம் என்று எதற்காக அலைகிறாய்?

உன்னால்  அலையமுடியவில்லையா? அதற்காக நீ கஷ்டப்படவும் வேண்டாமே. க்ருஷ்ணா என்று சொல்லிப்பாரேன். எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்துவிடுமே என்கிறார்.

எப்போது சொல்வது?

மலகித்து மைமுரி தேளுத்தலொம்மே க்ருஷ்ணா என பாரதே..

காலையில் உறக்கத்திலிருந்து  விழிக்கிறாயல்லவா? நீ படுக்கையிலிருந்து எழக்கூட வேண்டாம். அப்போது க்ருஷ்ணா என்று சொல்லலாமே. எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டே கூட க்ருஷ்ணா என்று சொல்லலாம்.

ஸூளி தாடுத மனே, யொளகா தருவொம்மே க்ருஷ்ணா என பாரதே

வீட்டிற்குள் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு எத்தனை நடை நடக்கிறாய்? அப்போது ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

ஸ்நான பான ஜப தபகள மாடுதே

கிருஷ்ணா என பாரதே 

குளிக்கும்போது, நீர் குடிக்கும்போது, க்ருஷ்ணா என்று சொல்லலாம். ஒரு கணம் இறைவனை நினைக்கும்போதும் உனக்கு பெரிய ஸ்லோகங்கள் தெரியவில்லை, ப்ரார்த்தனை செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. க்ருஷ்ணா என்று சொல்லலாம். அதுவே பெரிய உபாசனையாகிவிடுமே.

ஷால்யான்ன ஷட்ரச திந்து த்ருப்தவனாகி 

கிருஷ்ணா என பாரதே 

சாப்பிடத் துவங்குமுன் க்ருஷ்ணா என்று சொல்லிவிட்டு உண்டாயானால், உண்ணும் பொருளில் உள்ள தோஷமெல்லாம் நீங்கி அமுதமாகிவிடும்.

இல்லையென்றால் நன்றாக விருந்து சாப்பிட்டபின், திருப்தியாக ஏப்பம் விடும்போதாவது க்ருஷ்ணா என்று சொல்லலாம்.

உண்ட சோறு உடலுக்கு நன்மை பயக்குமாறு ஜீரணமாகிவிடுமே.

கந்தவ பூசி தாம்பூலவ மெலுவாக க்ருஷ்ணா என பாரதே

கமகமவென்ற வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளும்போதும், தாம்பூலத்தை மெல்லும்போதும்கூட  க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

செந்துள்ள ஹாஸிகெயொளு குளிதொம்மெ க்ருஷ்ணா என பாரதே

சுகமான பட்டு மெத்தையில் ஓய்வாக  அமர்ந்திருக்கும் வேளையிலும்கூட க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

கந்தன்ன பிகிபிகி தப்பி முத்தாடுத

கிருஷ்ணா என பாரதே 

உன் குழந்தையைக் கொஞ்சும்போதும், கன்னத்தைக் கிள்ளி முத்தமிடும்போதும்  க்ருஷ்ணா என்று கொஞ்சலாமே.

மந்தகாமினியொளு சரசவாடுத்தலொம்மே 

கிருஷ்ணா என பாரதே

உன் மனைவியுடன் தனிமையில் இனிமை காணும் நேரத்திலும் அவளைக் க்ருஷ்ணா என்றே அழைக்கலாம். க்ருஷ்ணனை விடவும் ச்ருங்கார ரஸத்தில் சிறந்தவர் யார்? இல்லறம் இனிமையாக இதை விடச் சிறந்த வழி உண்டா?

பரிஹாஸ்யத மாதலாடுத லொம்மே 

கிருஷ்ணா என பாரதே 

யாரையாவது கேலி செய்து பேசும்போது கூட க்ருஷ்ணா என்று சொல்லி கேலி செய்யலாம். கண்ணன் மகிழ்ச்சியடைவான். இப்போதெல்லாம் கேலி செய்ய கோவிந்த நாமத்தைப் பயன்படுத்துகிறார்களே. அதைப் போல. 

பரிபரி கெலசதொளு ஒந்து கெலசவெந்து 

கிருஷ்ணா என பாரதே 

எவ்வளவோ பேசுகிறோம். பேச்சு வாக்கில் அவ்வபோது க்ருஷ்ணா என்று ஒரு வார்த்தை என்று சொல்லக்கூடாதா?

துரித ராசிகளன்னு தரிது பிடிசுவ 

கிருஷ்ணா என பாரதே 

நம்மைப் பீடித்த துஷ்ட கிரஹங்களெல்லாம் விலகி அனுக்ரஹம் நம்மைப் பிடிக்க க்ருஷ்ணா என்று சொல்ல மாட்டாயா?

கருடகமன நம்ம புரந்தர விட்டலன 

கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக) 

கருடனின் மேல் ஏறி விரைந்து வந்து காக்கும் விட்டல க்ருஷ்ணனின் பெயரை எப்படியாவது சொல்வதை உன் வழக்கமாக்கிக் கொள்ளமாட்டாயா என்று புரந்தரதாஸர் கெஞ்சுகிறார்.

நம்மைக் கரையேற்றுவதில், மஹான்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை?