விஸ்வரூப தரிசனம்...
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. ஒரு நாள் அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன். என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
தரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது என்னை வியக்கவைத்தது. நாங்கள் இங்கே நின்றிருக்க, எங்களுக்கு எதிர் வரிசையில் அவர்கள் நின்றிருந்தனர்.
விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அதாவது இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. (‘திருமஞ்சனம்’ என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.)
அப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அர்ச்சகரிடம், “ஸ்வாமி… நாங்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் அது யதார்த்தமானது. திரை விலக்கப்பட்டதும் எங்களால் பகவானையும் பிராட்டியாரையும் பார்க்க முடியும். ஆனால் பார்வையற்ற இவர்களும் வந்திருக்கிறார்களே…? அதுவும் இந்த காலை வேளையில்? இவர்களால் எதுவும் பார்க்க முடியாதே… அப்படியிருந்தும் வந்திருக்கிறார்களே… இதன் தாத்பரியம் என்னவோ?” என்று ஏதோ தனக்கு தோன்றியதை கேட்டுக்கொண்டிருந்தார்.
அர்ச்சகர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட, அவர்களுக்கு சற்று பக்கத்தில் சென்று நின்றுகொண்டேன்.
“நீங்கள் நினைப்பது தவறு. நம்மை விட பகவானை அவர்கள் அதிகம் உணரமுடியும். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்பதை ‘தரிசனம்’ என்கிறோம். அதாவது நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம். ஆனால் இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலை முதன்முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. இப்போது இந்த விஸ்வரூபத்தில் பகவானை இவர்கள் பார்க்கமுடியாவிட்டாலும் பகவான் இவர்களை பார்ப்பார் அல்லவா? இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இறைவன் நம்மை பார்க்கட்டும் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள்!” என்றார்.
எப்பேர்ப்பட்ட தத்துவம்… எப்பேர்ப்பட்ட உண்மை….! காலஙகாலமாக கோவிலுக்கு செல்பவர்களுக்கு கூட விஸ்வரூப தரிசனத்தின் பொருள் தெரியுமா என்று தெரியாது. ஆனால் பார்வையற்றவர்கள் ஒரு பேருண்மையை உணர்ந்து அவனை சேவிக்க வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி உருகினேன்.
எனவே இறைவனின் அருட்பார்வை தங்கள் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள், உங்கள் பகுதியில் உள்ள தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வாருங்கள். விரைவில் அவனது அருட்பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.